கடைசி வரை பாஜவுக்கு அடிமையாகவும், கோழையாகவும் இருக்காதீங்க… வாழ்க்கையில் ஒரு முறையாவது தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுங்க பழனிசாமி: எடப்பாடியின் சொந்த ஊரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சேலம்: கடைசி வரை கோழை, அடிமையா இருக்காதீங்க… வாழ்க்கையில் ஒரு முறையாவது தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுங்க பழனிசாமி என்று எடப்பாடியின் சொந்த ஊரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். சேலம் கோட்டை பகுதியில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முழுக்க முழுக்கப் பெண்களுக்காகவே – பெண்களின் உரிமைகளுக்காகவே செயல்படுகிறது நம்முடைய அரசு. நான் உறுதியாக சொல்கிறேன். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கான ஆட்சி.

நம்மைப் பார்த்து, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரும் நேரத்தில் ஏதோ சதி செய்கிறார்கள். தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை” எனப் பழனிசாமி பேசியிருக்கிறார். 33 பர்செண்ட் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பது, பழனிசாமிக்குத் தெரியும் முன்பே, உள்ளாட்சிகளில் அதைச் செயல்படுத்தியவர் நம்முடைய தலைவர் கலைஞர். இப்போது அதை 50 விழுக்காடாக நடைமுறைப்படுத்தியவன்தான், உங்கள் முன்னால் நிற்கும் இந்த ஸ்டாலின். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு வேண்டும் என்று பல ஆண்டுகாலமாகத் தி.மு.க. போராடி வருகிறது.

பா.ஜ. நினைத்தால் அதை எப்போதோ கொண்டு வந்திருக்கலாம். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். ஆனால், தேவையே இல்லாமல் சென்சஸ், தொகுதி மறுவரையறை என சம்பந்தம் இல்லாத விஷயங்களோடு அதை முடிச்சுப் போட்டு, அது நிறைவேறக் கூடாது என்று பாஜ நினைக்கிறது. மிஸ்டர் பழனிசாமி! முதலில் புரிந்து கொள்ளுங்கள். இங்கே பிரச்சினை பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல! அதை அனைவருமே வரவேற்கிறோம்! தொகுதி மறுவரையறைதான் இங்கே பிரச்னை! தமிழ்நாடே கொதித்துப் போயிருக்கிறது.

நாளைக்கு அனைவர் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப் போகிறோம்! பெண்கள் எல்லாம் பாஜவின் இந்த அலங்கோலச் சட்டத்திற்கு காலையில் வீட்டின் வாசலில் கோலம் மூலமாகவே எதிர்ப்புத் தெரிவிக்கப் போகிறீர்களா? இல்லையா? ஆமாம் (பெண்கள்). இதில் அரசியல் வேறுபாடுகளுக்கு இடமே இல்லை. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. எடப்பாடி அவர்களே கடைசி வரை கோழையாக அடிமையாக இருந்தால், தமிழ்நாட்டின் களங்கமாகத்தான் வரலாற்றில் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்!

இது வரலாறு உங்களுக்குக் கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்பு! ஒரு முறை – ஒரே ஒரு முறையாவது பாஜவை எதிர்த்துத் தைரியமாகப் பேசுங்கள். உறுதியான எஃகுக்கு பெயர் பெற்ற ஊர் இந்த சேலம். இப்படிப்பட்ட பெருமைமிகு ஊரில் பிறந்துவிட்டு, ஏன் டெல்லிக்கு முதுகு வளைந்தே இருக்கிறீர்கள்? வெட்கமாக இல்லையா?

பக்கத்தில் இருக்கும் கேரளா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள்கூட அவர்கள் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். கட்சி வேறுபாடுகளை மறந்து ஒரே குரலில் பேசுகிறார்கள். நீங்கள் தமிழன்தானே? தமிழனாக இருந்துவிட்டுத் தமிழ்நாட்டுக்கு இப்படித் துரோகம் செய்யலாமா? உங்கள் துரோகங்களுக்குத் தண்டனை மே 4 அன்று கிடைக்கத்தான் போகிறது. இவ்வாறு பேசினார்.

* முதல்வர் தலைமையில் பிரமாண்ட மகளிர் பேரணி கமல்ஹாசன், பிரேமலதா பங்கேற்பு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். பின்னர் கார் மூலம் சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் வந்தார். சேலம் அண்ணா பூங்காவிற்கு வந்த முதல்வர் அங்குள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், அங்கிருந்து கோட்டை மைதானம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் பிரமாண்ட மகளிர் எழுச்சி பேரணி நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கமலஹாசன், பிரேமலதா உள்பட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பெண்கள், பொதுமக்கள் அவர்களுக்கு சாலையின் இருபகுதியில் நின்றும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தபோது, ஆயிரம் கிலோ சம்பங்கி பூக்களை தூவி முதல்வரை பெண்கள் வரவேற்றனர்.

* ‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கான ‘ரெஸ்பெக்ட்’தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம்
“உங்க மனைவி என்ன பண்றாங்க?” என்று கேட்டால், பல பேர் மிகவும் சாதாரணமாக “வீட்டுல சும்மாதான் இருக்காங்க” என்று சொல்லிவிடுவார்கள். இதை மாற்ற வேண்டும், பெண்கள் இந்தச் சமூகத்திற்கும் – குடும்பங்களுக்கும் செய்யும் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டதுதான் உரிமைத்தொகை என்று நான் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன்!

ஆயிரம், இரண்டாயிரம் என்பதைத் கடந்து, ‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் நம்முடைய பெண்களுக்கு இந்த அரசு தரும் ‘ரெஸ்பெக்ட்’தான் உரிமைத்தொகை! முடியவே முடியாது என்று சொன்ன திட்டம், இன்றைக்கு ஒரு கோடியே 31 இலட்சம் பெண்களுக்குக் கிடைக்கிறது’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: