சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்பு கொடி போராட்டம் நடைபெற உள்ள நிலையில், கருப்பு உடை அணிந்தும் எதிர்ப்பை அறவழியில் தெரிவிக்க திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு அரசியல் தண்டனை வழங்கும் முயற்சியாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை உருவெடுத்துள்ளது. அநியாயமான, ஆதிக்க நோக்கமுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று மாநிலம் முழுவதும் வலுவான ஜனநாயக எதிர்ப்பை போராட்டமாக அறிவிக்கிறது.
காங்கிரஸ் தொண்டர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு உடை அணிந்தும், இந்த அரசியல் அநியாயத்திற்கு எதிராக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும்.
வைகோ (மதிமுக): 2047ம் ஆண்டுக்குள் இந்து ராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜ செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், வருங்காலத்தில் தங்களுடைய பாசிச திட்டங்களை வட மாநில எம்.பி.க்களின் ஆதரவுடன் மட்டும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நிலைமையை உருவாக்க முனைகிறது பாஜ அரசு. இச்சூழலில் இன்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி தொகுதி வரையறை மேற்கொள்ள அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வர பாஜ அரசு துடிக்கிறது.
தொகுதி மறுவரையறை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்து எழுந்து மிகப்பெரிய போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவையை மோடி அரசு உருவாக்கி உள்ளது. அதன்படி, தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்தும், தங்கள் வீடுகளில் கருப்பு கொடி உயர்த்தியும் தங்கள் எதிர்ப்பை அறவழியில் தெரிவிக்க வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): தமிழ்நாட்டையும், தென்னிந்திய மாநிலங்களையும் பாதிக்கும் வகையில், அம்மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில், ஒன்றிய பாஜ அரசு, அவசர கோலத்தில், தொகுதி மறுவரையறையை கொண்டுவருவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று அவசர சட்டத் திருத்தத்தை செய்ய உள்ளது.
அதற்கு எதிராக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போராட்டத்தை ஆதரித்து வரவேற்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தக் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்கும். தமிழ்நாட்டின் குரல் வளையை நெரிக்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது என்ற போர்வையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற ஒன்றிய பாஜ அரசு இன்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்திட உள்ளது. தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் வகையில் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்காமல் தன்னிச்சையாக பாஜ அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
தற்போது பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை பயன்படுத்தி கொல்லைப்புற வழியாக அவர்கள் நினைத்த அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவர மோடி அரசு முயற்சிக்கிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு விரோதமான ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கைக்கு நமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும் இன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், மக்கள் கருப்பு சட்டை அணிந்தும் கண்டனத்தை வெளிப்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.
முகம்மது முபாரக் (எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர்): தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைத் தண்டிக்கும் நோக்கில், ஒன்றிய பாஜ அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் ஒரு வரலாற்று அநீதியாகும். ஒன்றிய பாஜ அரசின் சதிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள போராட்டமானது வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல; இது தமிழர்களின் சுயமரியாதை மற்றும் அரசியல் உரிமைகளைத் தற்காப்பதற்கான போராட்டம். இதற்கு எஸ்டிபிஐ கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதோடு, மாநிலம் தழுவிய அளவில் இதில் தீவிரமாகப் பங்கேற்கும்.
