சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: 23 லட்சம் பேர் தேர்ச்சி

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நடத்தப்படும் பள்ளிகளில், 10ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 2 கட்டமாக நடத்தப்பட்ட இந்த தேர்வின் முதற்கட்ட தேர்வு கடந்த பிப்வரி மாதம் 17ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடந்தன. நாடு முழுவதும் 27 ஆயிரத்து 339 பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதற்காக நாடு முழுவதம் 8074 தேர்வு மையங்கள், அமைக்கப்பட்டு ஒரு மையத்துக்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் துணை தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும், மேற்பார்வையிடவும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 991 பேர் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மார்ச் மாதம் தேர்வு முடிந்த பிறகு 1 கோடியே 63 லட்சத்து 1356 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கியது. அதற்காக நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 7 லட்சம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக முதன்மை தேர்வாளர்கள் 46 ஆயிரம் பேரும், துணைத் தேர்வாளர்கள் 1 லட்சத்து 85 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் தற்போது cbse.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

முதற்கட்ட தேர்வில் 10ம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 24 லட்சத்து 83 ஆயிரத்து 479 மாணவ மாணவியர் பதிவு செய்திருந்த நிலையில், 24 லட்சத்து 71 ஆயிரத்து 777 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 23 லட்சத்து 16 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.70 சதவீதம். மாணவர்களை விட மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்று 94.99 சதவீதம் பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.6 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 23 லட்சத்து 85 ஆயிரம் பேர் தேர்வு எழுத பதிவு செய்து 23 லட்சத்து 71 ஆயிரத்து 939 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

அவர்களில் 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.66 சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த 2026ம் ஆண்டு தேர்வில் 0.04 சதவீதம் கூடுதல் தேர்ச்சி வீதம் கிடைத்துள்ளது. கேந்திர வித்யாலயா பள்ளிகள் 99.57 சதவீதம், ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 99.42 சதவீதம், அரசு பள்ளிகள் 91.43 சதவீதம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 91.01 சதவீதம், தனியார் பள்ளிகள் 93.77 சதவீதம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு தேர்வில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்பு தேவை பிரிவின் கீழ் 9443 பேர் எழுதினர். அவர்களில் 9088 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 96.24 சதவீதம்.

இந்த தேர்வில் 452 மாணவ மாணவியர் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 91 பேர் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகள் 99.10 சதவீதம் பெற்றுள்ளன. மாணவர்களிடையே வேற்றுமைக்கு இடம்கொடுக்காத வகையில், முதலிடம் பெற்றவர்களின் பட்டியலை வெளியிடவில்லை. இருப்பினும், திருவனந்தபுரம், விஜயவாடா மண்டலங்களும் தலா 99.79 சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடம் பிடித்துள்ளன. சென்னை மண்டலம் 99.58 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது.

Related Stories: