ஒன்றிய அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு: ரயில்வே ஆக்ட் அப்ரண்டிஸ் சங்கம் அறிவிப்பு

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில், அனைத்திந்திய ரயில்வே ஆக்ட் அப்ரண்டிஸ் நல சங்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அச்சங்கத்தின் தலைவர் பிரவீன் குமார், துணை தலைவர் தெய்வசிகாமணி, இணை செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மோதிலால் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் (ஐசிஎப்) 30,000 காலி பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்பாமல், வட இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்க்கப்படுகின்றனர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த பிரச்னைகளின் காரணமாக கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், ஒன்றிய அரசிடம் முறையிட்டும் இதுவரை முறையான தீர்வு எட்டப்படவில்லை. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: