கதிர் அடிக்கும் தளம் இல்லாமல் சாலைகளில் உலர்த்தப்படும் தானியங்கள்

சாயல்குடி, பிப்.23: முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் சாலைகளில் தானியங்களை உலர்த்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் இந்தாண்டு பெய்த மழைக்கு விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு, நெல், சோளம் போன்ற சிறுதானியம், மல்லி போன்ற பயிர்களை பயிரிட்டனர். சில இடங்களில் கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற காட்டு விவசாயம் எனப்படும் சிறுதானிய பயிர் விளைச்சல் நன்றாக வளர்ந்து, நல்ல மகசூலை தந்துள்ளது. இதனை போன்று முதுகுளத்தூர் பகுதியில் மல்லி விளைச்சல் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் சிறுதானிய பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

இதனை உலர்த்த கிராமங்களில் உலர்தளம் இல்லாததாலும், டிராக்டர்களுக்கு வாடகை கொடுத்து தானியங்களை பிரித்தெடுக்க முடியாததால் விவசாயிகள் ஆபத்தை உணராமல் கடலாடி, முதுகுளத்தூர்-பரமக்குடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக போட்டு உலர்த்துகின்றனர். மேலும் கிராமங்களில் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட கதிர் அடிக்கும் தளம் போதிய பராமரிப்பு மற்றும் பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த தானிய வகைகளை போக்குவரத்து மிகுந்த சாலையில் உலரவைத்து, தானியங்களை பிரித்தெடுக்கின்றனர். எஞ்சியுள்ள தானியங்களை கழிவுகளை அப்புறப்படுத்தாமல், சாலையோரம் போட்டு விடுவதால், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், சில இடங்களில் டூவீலர்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துகளை ஏற்படுத்தி வருவதாக புகார் கூறுகின்றனர்.

Related Stories: