நன்றி குங்குமம் தோழி
உலகில் பெரிதும் பேசப்பட்ட ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துபெர்க். ஆனால், பிறக்கும் முன்பே சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்பியவர் ஸுமைரா அப்துல்லாலி. மணல் கடத்தலை எதிர்த்தும், கட்டுப்படுத்தப்படாத ஒலி மாசுபாடு குறித்தும் குரலை உயர்த்தி அதிர்வுகளை உருவாக்கியவர். 64 வயதான ஸுமைரா மும்பையில் வசித்து வருகிறார். தான் நிறுவிய ‘ஆவாஸ்’ அறக்கட்டளை மூலம் சுற்றுச்சூழலுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆசியாவின் பழமையானதும், மிகப்பெரிய சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘பாம்பே இயற்கை வரலாற்று சங்கத்தின்’ செயலாளராகவும் இருந்துள்ளார்.
‘‘சாலைகள் முதல் கட்டிடங்கள் வரை, மணல் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அதனால், இந்தியாவின் ஆற்றுப்படுகைகளில் மட்டுமல்லாமல் கடற்கரைகளில் இருந்தும் மணல்கள் வேகமாக அகற்றப்படுகின்றன. மணல் கடத்தலை தடுப்பதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் செயல்பட்டு வருகிறேன். மணல் என்பது பூமியில் தண்ணீருக்குப் பிறகு இரண்டாவதாக அதிகமாக எடுக்கப்படும் பொருளாகும். கட்டுமானத்திற்காக ஆறுகள், கடற்கரைகளில் உள்ள மணல் அதிகமாகத் தேவைப்படுகிறது.
நான், மும்பைக்கு அருகிலிருக்கும் அலிபாக் கிஹிம் கடற்கரைப் பகுதியில் வளர்ந்தவள். இயற்கையுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவள். எனது மாமனார், ஒரு உயிரியலாளர். தாய் மாமா, ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இந்தியாவின் பறவை மனிதன் என்று அழைக்கப்படும் பிரபல பறவையியலாளர் சலீம் அலி எனது நெருங்கிய உறவினர். அதனால் இயல்பாகவே எனக்கு சுற்றுச்சூழல் மீதான ஈர்ப்புண்டு.
ஒருநாள், பல லாரிகள் கடற்கரை மணலை அள்ளிச் செல்வதைக் கண்டேன். மணல் கடத்தலை தடுக்க பொது மக்களிடம் உதவி கேட்ட போது, ‘கடற்கரை முழுதும் மணல் தானே. அதில் இருந்து அவங்களுக்கு தேவையானதை எடுத்துச் செல்லட்டும்… நமக்கென்ன நஷ்டம்’ என்றார்கள். தனி மனுஷியாக நான் லாரிகளை தடுக்கப் போன போது அவர்கள் என்னை தாக்கினார்கள். கை உடைந்தது. பற்கள் தெறித்து விழுந்தன. அதனால் சட்டத்தின் உதவியை நாடினேன். அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆவணப்படுத்தினேன். பொதுநல வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். மணல் கடத்தும் மாஃபியாக்கள் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தபோதும், தொடர்ந்து போராடினேன்.
மணல் கடத்தல் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கேற்று, அச்சு, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அகில இந்திய கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஒன்பது ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு மணல் கடத்தலுக்கு எதிராக இந்தியாவின் முதல் நீதிமன்ற உத்தரவைப் பெற்றேன். மேலும், GRID ஜெனீவா ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் முதல் வட்டமேசைக் கூட்டத்தில் பங்கேற்று, அவர்களின் முதல் அறிக்கையான ‘உலகளாவிய மணல் வளங்களின் சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கான புதிய தீர்வுகளை கண்டறிதல்’ என்ற அறிக்கைக்கு எனது உள்ளீடுகளை வழங்கினேன். இதன் மூலம் என்னுடைய பல ஆண்டு போராட்டத்திற்கு இந்தியாவில் புதிய தேசிய மணல் கொள்கை வடிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஐ.நா. சபையும் மணல் கடத்தலை சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக அங்கீகரித்தது’’ என்றவர், தன்னார்வ அமைப்பினை நிறுவி அதன் மூலம் ஒலி மாசுபாடு குறித்தும் போராட்டம் நடத்தியுள்ளார்.
‘‘2002ல் ‘ஆவாஸ்’ என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை துவங்கினேன். இதன் மூலம் நகர்ப்புறங்களில் ஒலி மாசுபாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கினேன். மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்தது. என்னுடைய பிரச்சாரம் பனாரஸ், பெங்களூரு, புனே போன்ற நகரங்களுக்கும் பரவியது. இது குறித்து 2002ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தேன். இதற்கான விதிமுறைகளை தளர்த்துவதற்கு எதிராக இரண்டு மருத்துவர்களுடன் இணைந்து வழக்கைத் தொடுத்தேன்.
அந்த சமயமும் நாங்க அச்சுறுத்தல்களுக்கு ஆளானோம். அந்தக் கால கட்டத்தில் இணைய வசதிகள் இல்லாத காரணத்தால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது. அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள், மனுக்களை அனுப்பி வைத்தேன். ஆனால், என்னுடைய முயற்சி வீணானது. அரசு அலுவலர்களின் கேலிப் பொருளானேன்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009ல், எங்களது முயற்சிக்கு பலன் கிடைத்தது. வாகன ஓட்டுநர்கள் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதால், ஒலி மாசுபாட்டை அதிகரிக்கிறது என்ற எங்கள் வாதத்தினை, நீதிமன்றம் ஏற்று மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் மத நிறுவனங்களைச் சுற்றி 100 மீட்டர் வரை ஹாரன் அடிப்பதை தடை செய்ய சொல்லி மும்பை மாநகராட்சிக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகாராஷ்டிரா முழுவதும் வணிக வாகனங்களின் பின்புறத்தில் ‘ஹாரன் அடிக்கலாம்’ என்ற அறிவிப்பை எழுதுவதற்கு தடைசெய்தது மகாராஷ்டிரா அரசு.
எனது குரல் குடிமக்களின் இயக்கமாக மாறியுள்ளது. எனது நீதிமன்ற தலையீடுகள், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. 2019ல் விழா காலங்களிலும் ஒலி மாசுபாடு கணிசமாகக் குறைக்கப்பட்ட ஒரே நகரமாக மும்பை மாறியது” என்கிறார் ஸுமைரா அப்துல்லாலி.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி
