நன்றி குங்குமம் தோழி
ஒரு ஸ்வரத்தில் இருந்து இன்னொரு ஸ்வரத்துக்கு வளைந்து நெளிந்து செல்லும் கர்நாடக இசையின் ஜீவனான கமகங்களை சாக்ஸபோன் மாதிரியான மிகப்பெரிய கருவியில் வாசிப்பது எப்படி சாத்தியம் என பலரும் நினைக்கலாம். சாத்தியமின்மை என்ற வார்த்தையை முதலில் உடைத்தவர் டாக்டர் கத்ரி கோபால்நாத். சாக்ஸபோனில் அவர் செய்த புரட்சியே, இந்திய கலாச்சாரத்தின் அங்கமாக சாக்ஸபோனை மாற்றியது.
ஹிந்தி சினிமாவில் ஆர்.டி.பர்மன், தமிழ் சினிமாவில் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற மாபெரும் இசை ஜாம்பவான்கள் தங்கள் பாடல்களிலும் சாக்ஸபோனை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்று சாக்ஸபோன் தமிழ் சினிமாவின் மிக ஆழமான காதல் மற்றும் சோக உணர்வுகளை கடத்தும் கருவியாகவும் உருமாறியிருக்கிறது. நமது இந்திய மண்ணில் பிறந்து அந்நிய மண்ணில் சாக்ஸபோன் இசைக் கலைஞராக வலம் வரும் கீர்த்தனா ஸ்ரீராமிடம் இது குறித்து பேசியதில்…
உங்களைப் பற்றி சுருக்கமாக?
நான் பிறந்தது பெங்களூரு. எனக்கு ஒரு வயது இருக்கும்போது, அப்பாவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் பிட்ஸ்பர்க் வந்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம். அப்பா இன்ஜினியர். அம்மா டேக்ஸ்(Tax) அனலிஸ்ட். எனவே, என் பள்ளி, கல்லூரி நாட்களும் பிட்ஸ்பர்க் நகரில்தான் இருந்தது. இங்கிருந்த பல்கலைக்கழகத்தில் நியூரோ சயின்ஸில் ஒரு டிகிரியும், மியூஸிக் சார்ந்து பேச்சலர்ஸ் ஆஃப் ஆர்ட்ஸ் என ஒரு டிகிரி என இரண்டு டிகிரி வாங்கியிருக்கிறேன். சாக்ஸபோனை கையில் எடுத்தது குறித்து?
என் இசைப் பயணம் மூன்று வயதிலேயே தொடங்கிவிட்டது. நான்கு வயது ஆனபோது கீபோர்ட், கர்நாடக சங்கீதம், பியானோ, பரத நாட்டியம்னு கற்க ஆரம்பித்தேன்.ஸ்கூலில் படிக்கும்போது ஜாஸ் இசையின் மீது ஈர்ப்பு வந்தது. அப்படியே ட்ரம்பெட் வாசிக்கத் தொடங்கி, பிறகு என்னுடைய ஏழாம் வகுப்பில், சாக்ஸபோன் மேல் வந்த காதலில் அந்த இசைக் கருவிக்கு மாறினேன். இன்று சாக்ஸபோன், பியானோ, மெலோடிகா, கிளாரினெட்னு ஒரு மல்டி இன்ஸ்ட்ருமென்டலிஸ்டாகவும் வலம் வருகிறேன்.
சாக்ஸபோன் கலைஞராக அந்த இசைக் கருவி குறித்து?
ஜெர்மனில கண்டுபிடிக்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப் பட்டு, அதன்பிறகே 1950, 60களில் இந்திய ராணுவத்தின் மிலிட்டரி பேண்டுகளில் அணிவகுப்புக்காக வாசிக்கப்பட்ட கம்பீரமான வாத்தியமாக இந்தியாவுக்குள் நுழைந்தது.வெளியில் பார்க்கத்தான் சாக்ஸபோன் தங்கம் மாதிரி தகதகவென மின்னும். பலரும் நினைப்பது பித்தளையால் (Bross) செய்த வாத்தியம் என்றே. இதன் உடற்பகுதி மட்டுமே பித்தளை.தொழில்நுட்ப ரீதியாக இதுவொரு வுட் வின்ட் கருவி. அதாவது, மரத்தாலான காற்று வாத்தியம். இதில் ஒலியை உருவாக்கும் மையப் பகுதியில் சின்ன மரத்துண்டு இருக்கும் (Mouth piece).
காற்றை ஊதும் போது சிறிய மரத்துண்டுதான் முதலில் அதிர்வடையும். அந்த ஒலி பித்தளையால் செய்யப்பட்ட பெரிய குழாயில் பல மடங்கு பெருதாகி வெளியேறும். நாம் ஊதும் மூச்சுக் காற்றின் அழுத்தம், மரத்துண்டின் அதிர்வு, நமது விரல்களால் இயக்கப்படும் கீ என மூன்றும் துல்லியமாய் இணையும் போது தனித்துவமான ஒலி சாக்ஸபோனில் பிறக்கும்.
சோகம், கோபம், காதல்னு எந்த உணர்ச்சியாக இருந்தாலும் நமது மூச்சுக் காற்றின் மூலம் சாக்ஸபோனுக்குள் அது கடத்தப்படுது. ஒரு ஜெர்மானிய கருவி ராணுவம் மிடுக்கைத் தாண்டி… கர்நாடகா இசை தாண்டி… இன்று இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது.
சாக்ஸபோன் கலைஞராய் உங்கள் பயணம்?
பெண்களால முடியாதுன்னு எதுவுமே இல்ல. நானே இதற்கு உதாரணம். 12ம் வகுப்பில் அமெரிக்க அளவில் நடந்த தேசிய போட்டியில் பியானோ வாசிப்பில் முதலிடம் பிடித்தேன். பிறகு சுபஸ்ரீ தனிகாசலம் அவர்களின் ரியாலிட்டி ஷோவில் சாக்ஸபோன் கலைஞராய் பங்கேற்றேன். அவரின் அமெரிக்க பயணத்திலும் என் பங்கிருந்தது.
2024ல் உன்னி கிருஷ்ணன், உத்ரா உன்னி கிருஷ்ணன் அமெரிக்க பயணத்திலும் சாக்ஸபோன் கலைஞராய் என் பங்கு இருந்தது. சிக்கில் குருசரண் அவர்களின் பயணத்திலும் இணைந்து வாசித்திருக்கிறேன்.இது தவிர அமெரிக்காவில் நடக்கும் கார்ப்பரேட் ஈவென்ட்ஸ், திருமண சுப நிகழ்வுகள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் என என் சாக்ஸபோன் இசை அமெரிக்கா எங்கும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. நிகழ்ச்சிகளுக்காக இந்திய மண்ணிற்கும் அடிக்கடி பயணிக்கிறேன்.
சஹானா (SAHANA) என்பது 2008ல் கீபோர்ட் பிளேயரான என் அப்பா மற்றும் பாடகரான என் அம்மா இருவராலும் பிட்ஸ்பர்க்கில் உருவாக்கிய லைட் மியூசிக் இசைக்குழு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி திரட்டும் லைவ் நிகழ்ச்சிகளை இதில் நடத்தி வருகிறோம். இதற்காக பின்னணி பாடகர் சாய் விக்னேஷ் மற்றும் பாடகர் மனோ சார் அவர்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
இசைஞானியுடனான உங்கள் சந்திப்பு குறித்து?
மறைந்த பாடகி பவதாரிணியின் நினைவாக இசைஞானி அவர்கள் ஆல் கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா என்கிற முற்றிலும் பெண்களால் ஆன இசைக்குழுவை தொடங்கி இருக்கிறார். அந்தக் குழுவில் எனக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.முதலில் என் சாக்ஸபோன் வாசிப்பை வீடியோ எடுத்து அனுப்பச் சொன்னார்கள். பலகட்ட வடிகட்டல்களுக்குப் பிறகே பேனலின் பார்வைக்கு அது அனுப்பப்பட்டது. அவர்கள் திருப்தி அடைந்த பிறகே, என்னை நேரில் வரவழைத்து ஆடிஷனும் நடந்தது. இதிலும் என் பன்முகத் திறமையை காட்டிய பிறகே இறுதி ரவுண்ட் இசைஞானி இளையராஜா முன்னிலையில் நடந்தது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், என் Saxurday YouTube சேனலில், ராஜா சாரின் பாடல்களைதான் நான் சாக்ஸில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இசை ஞானியின் பாடல்களை, ரசிகையாக இணையத்தில் வாசித்து வந்த எனக்கு, அந்த மேதையின் கண் முன்பே நான் வாசித்தது கனவு மாதிரி இருந்தது
சாக்ஸபோன் கலைஞராக எதிர்காலத் திட்டம்?
ஒரு கலைஞரின் தேடலுக்கு எல்லைகளே கிடையாது. ஏ.ஆர். ரஹ்மான் சார், ஹாரிஸ் ஜெயராஜ் சார் மாதிரியான முன்னணி இசை அமைப்பாளர்களோடும் இணைந்து பணியாற்ற வேண்டும், உலகளாவிய மேடைகளிலும் பெர்ஃபார்ம் பண்ணணும் என்கிற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஒரு சிறந்த சாக்ஸபோன் பெண் கலைஞராக இந்திய இசை துறையில் எனது பெயரையும் ஆழமாய் நிலை நிறுத்த வேண்டும் என்பதே இப்போதைய என் மிகப்பெரிய கனவு.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
