வேலை வாய்ப்பினை அள்ளித் தரும் ஃபோனிக்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

ஆங்கிலம், உலகளவில் அனைவராலும் பேசப்படும் மொழி. இந்த மொழியினை பேசவோ அல்லது கற்றுக் கொள்ளவோ தயங்குகிறார்கள். மொத்தமே 26 எழுத்துக்கள் என்றாலும், அதில் சில எழுத்து ஒரு வார்த்தையில் வரும் போது உச்சரிக்கக் கூடாது. இரண்டு சொல் இணைந்து வரும் போது அதன் உச்சரிப்பு மாறுபடும். இதனால் ஆங்கிலம் கஷ்டம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதை எளிய முறையில் பயில முடியும் என்கிறார் திருச்சியில் வசித்து வரும் அபர்ணா. இவர் ஆன்லைன் முறையில் ஆங்கிலத்தினை எளிதாக பயிலக்கூடிய ‘ஃபோனிக்ஸ்’ முறையில் சொல்லித் தருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. அங்கு பள்ளிப் படிப்பினை முடித்துவிட்டு, சென்னையில் கல்லூரிப் படிப்பினை முடித்தேன். பிறகு சில வருடம் கார்ப்பரேட் துறையில் பெங்களூரில் வேலை பார்த்தேன். சென்னைக்கு டிரான்ஸ்பர் கிடைக்காத காரணத்தால் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். நான் படிக்கும் காலத்தில் வீட்டில் டியூஷன் எடுப்பேன். அதற்கு காரணம் என் அப்பா தான்.

அவர்தான் படிக்கும் போது ஒரு சம்பாத்தியம் இருக்கணும்னு சொல்வார். வேலையை ராஜினாமா செய்த போது, ஏதாவது பயிற்சி அளிக்கலாம்னு முடிவு செய்தேன். ஜாலி ஃபோனிக்ஸ் கற்றேன். இது UKவில் உள்ள பாடத்திட்டம் என்பதால் US ஃபோனிக்ஸ் பயிற்சி எடுத்தேன். ஆனால், இரண்டுமே நம்முடைய மாணவர்களுக்கு சொல்லித் தர முடியாது. காரணம், அவர்களின் பாடத்திட்டங்களும் நம்முடைய பாடத்திட்டங்களும் மாறுபட்டு இருந்தது. அதன் பிறகு மான்டசரி படிச்சேன். அதில் ஃபோனிக்ஸ் பயிற்சி இருந்தது. அங்கு குழந்தைகளுக்கு எப்படி பொறுமையா அவர்களுக்கு புரியும்படி சொல்லித் தரலாம் என கற்றுக் கொண்டேன்’’ என்றவர் தனிப்பட்ட முறையில் ஃபோனிக்ஸ் பாடத்திட்டத்தினை அமைத்துள்ளார்.

‘‘நான் UK, US மற்றும் நம் இந்திய முறை ஃபோனிக்ஸ் அனைத்தும் கற்றுக் கொண்டதால், குழந்தைகளுக்கு எதை எப்படி சொல்லிக் கொடுத்தால் புரியும் என்று யோசித்து ஒரு பாடத்திட்டத்தினை அமைத்தேன். என்னுடைய மகனுக்கு சொல்லிக் கொடுக்கும் போது எதை எப்படி சொல்லிக் கொடுத்தால் அவர்களுக்கு புரியும் என்று தெரிந்துகொண்டேன். அதன் அடிப்படையில்தான் இந்த பாடத்திட்டத்தினை வடிவமைத்தேன். அதனை pdf முறையில் ஆன்லைனில் வெளியிட்டேன். அது எனக்கு பெரிய இழப்பானது. காரணம், pdfயினை பலர் எடுத்து அவர்கள் தனிப் புத்தகமாக வெளியிட்டார்கள்.

இதனால் என்னுடைய உழைப்பு மற்றவர்களால் சுரண்டப்பட்டதை நினைத்து வருத்தமடைந்தேன். எதையும் இலவசமாக கொடுக்கக் கூடாது என்று புரிந்துகொண்டேன். அதன் பிறகு புத்தகமாக வெளியிட்டு அதற்கான பேட்டென்ட் வாங்கி விற்பனை செய்த போது, பலரும் எங்களின் புத்தகத்தினை வாங்கினார்கள். 5000 புத்தகம் விற்பனையானது. இப்போது பள்ளிகளுக்கும் புத்தகத்தினை விற்பனை செய்கிறோம். மேலும், கோவையில் உள்ள சர்வதேசப் பள்ளி ஒன்றிலும் இந்தப் புத்தகத்தினை பின்பற்றுகிறார்கள். சென்னையிலும் இரண்டு பள்ளிகளில் எங்களின் புத்தகத்தினை பயன்படுத்துகிறார்கள். ஃபோனிக்ஸ் பயிற்சி மையத்திலும் எங்க புத்தகம் பயன்பாட்டில் உள்ளது’’ என்றவர் ஃபோனிக்ஸ் பயிற்சி முறைப் பற்றி விவரித்தார்.

‘‘குழந்தைகளுக்கான பயிற்சி என்பதால் அதை எவ்வாறு கிரியேடிவ்வா கொடுக்கலாம்னுதான் யோசிப்பேன். அதனால் நிறைய வீடியோக்களை பொம்மைகளை வைத்து போட ஆரம்பித்தேன். அதைப் பார்த்து பல ஆசிரியர்கள் தங்களுக்கும் சொல்லித் தரச்சொல்லி கேட்டார்கள். நான் ஆன்லைனில் வீடியோக்களை போட்டு வந்தாலும் முறையாக சொல்லித் தரவேண்டும் என்றால் என்னுடைய பயிற்சி மையத்தினை பதிவு செய்ய வேண்டும்.

அதை செய்த பிறகு முறையாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழும் வழங்கினேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் மூலம் அவர்கள் வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து என்னை நேரடியாக அணுகினார்கள். அதில் ஒரு பள்ளியின் அனைத்து கிளைகளில் உள்ள 150 ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளித்தேன். அந்தப் பள்ளியினை தொடர்ந்து மற்றொரு பள்ளியும் அணுகினார்கள். இதுவரை தமிழ்நாடு, கேரளா என 20க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன்.

சிறிய பள்ளிகளுக்கு சொல்லிக் கொடுப்பதுதான் சேலஞ்சிங்கா இருந்தது. காரணம், அவர்களுக்கு போதிய வசதிகள் இருக்காது. இருந்தாலும் தங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அவர்களின் அந்த நோக்கம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அது போன்ற பள்ளிகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது எனக்கு மேலும் அனுபவத்தினை கொடுத்தது. தற்போது என்னிடம் பயிற்சி பெற்றவர்களில் சிலர் என்னிடம் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி அளித்து, உலகளவில் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் மூலமாக பயிற்சி அளித்து வருகிறேன். ஃபோனிக்ஸ் மட்டுமில்லாமல், இலக்கணம், கிரியேடிவ் ரைட்டிங் மற்றும் பப்ளிக் ஸ்பீகிங்கான பயிற்சி அளிக்கிறோம்.

பொதுவாக நாம் ஆங்கிலத்தினை ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால்னு தான் படிப்போம். ஆனால், ஃபோனிக்ஸ் ஒரு வார்த்தையை ஒலி மூலமாக படிக்க உதவும். இன்றைய பள்ளியில் பெரும்பாலான குழந்தைகள் வர்த்தைகளை ஒலி மூலமாகத்தான் படிக்க சொல்லித் தருகிறார்கள். அவர்களால் எவ்வளவு பெரிய வார்த்தையாக இருந்தாலும் அதற்கான ஸ்பெல்லிங் மற்றும் உச்சரிப்பினை சரியாக ெசால்ல முடியும். ஆங்கிலத்தினை சுலபமாக பேசவும், படிக்கவும், எழுதவும் முடியும். ஆங்கில பாடத்திட்டத்தில் ஆங்கில பாடம் மட்டுமல்ல, கணிதம், அறிவியல், வரலாறு அனைத்தும் ஆங்கிலத்தில்தான் படிப்பார்கள். அதனை சுலபமாகவும் எளிதாகவும் படிக்க ஃபோனிக்ஸ் மிகவும் உதவும்.

சிலர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஆங்கிலம் அவசியமாக படிக்க வேண்டுமான்னு ேகட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். எதிர்கால சந்ததியினர் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்கிறார்கள். ஆங்கிலம் உலகம் முழுதும் பேசப்படும் மொழி. நம்முடைய எண்ணங்களை மற்றவர்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் புரிய வைக்க வேண்டும் என்றால், அதை படிப்பது நல்லதுதானே. அதற்காக நம்முடைய தாய்ெமாழியினை தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஃபோனிக்ஸ் மூலம் ஆங்கிலம் எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஆங்கில மொழிக்கான ஒரு ஃபவுண்டேஷன்தான் ஃபோனிக்ஸ்.

இதனை இரண்டரை வயசில் இருந்தே குழந்தைகளுக்கு வீட்டில் பெற்றோர் சொல்லித் தரலாம். ஆன்லைனில் முறையாக பயிற்சி எடுக்க நான்கு வயதிற்கு மேல் இருப்பது உகந்தது. காரணம், சின்னக் குழந்தைகள் ஒரு இடத்தில் அமர்ந்து நாம் சொல்வதை கேட்க பொறுமை இருக்காது. நான்கு வயதாகும் போது அவர்கள் பள்ளிக்கு செல்வார்கள். அங்கு பாடங்களை கவனிக்க பழகிக் கொள்வார்கள். அப்போது ஆன்லைனில் சொல்லிக் கொடுத்தால் அவர்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.ஃபோனிக்ஸ் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி, முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் எளிதாக படிக்கவும், பிழை இல்லாமல் எழுதவும் உதவி செய்யும்.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிப் பாடங்களுடன் இலக்கணம் சேர்த்து படிக்க உதவும். கிரியேட்டிவ் ரைட்டிங் மற்றும் பப்ளிக் ஸ்பீக்கிங் ெபாறுத்தவரை அவரவரின் தனிப்பட்ட விருப்பம். தன் குழந்தைக்கு எழுதும் திறமை மற்றும் பேச்சுத்திறன் நன்றாக இருந்தால் அவர்கள் இதற்கான பயிற்சி மேற்கொள்ளலாம்.பெரியவர்கள் ஃபோனிக்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறைய இருக்கு.

வீட்டிலேயே குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கலாம். பள்ளியிலும் வேலைக்கான வாய்ப்புள்ளது. தனிப்பட்ட பயிற்சி மையம் அமைத்து நடத்தலாம். கார்ப்பரேட் நிறுவனங்களில் திறமையாக வேலை பார்ப்பார்கள். ஆனால், அவர்கள் கம்யூனிகேஷன் துறையில் பின்தங்கி இருப்பார்கள். AI உலகில் வாழ்ந்து வருகிறோம். இது போன்ற விஷயங்களில் பின்தங்கி இருக்கிறோமோ என்று நினைக்க தோன்றுகிறது. அந்த நிலை மாற வேண்டும்’’ என்றார் அபர்ணா.

தொகுப்பு: ஷன்மதி

Related Stories: