நன்றி குங்குமம் தோழி
பெண்களின் வாழ்வில் மகப்பேறு காலம் மற்றும் அதைத்தொடர்ந்து எடுக்கப்படும் மகப்பேறு இடைவேளை என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், மகப்பேறுக்காக பணியிலிருந்து சிறிது காலம் இடைவேளை எடுக்கும் பெண்கள் மீண்டும் தங்கள் பணியை தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். வீடு மற்றும் சமூகம் தாய்மார்கள் மீது சுமத்தும் அழுத்தங்களால் மகப்பேறு இடைவேளைக்குப் பின் பணியை உடனடியாக தொடர்வதும், தொடராததும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பத் தேர்வாக இருப்பதில்லை.
இதுபோன்ற சூழல்கள் மற்றும் தாய்மைக்குப் பிந்தைய மன அழுத்தம் போன்றவற்றால் ஒரு தாய் எதிர்கொள்ளும் நிஜ போராட்டங்களை திரையில் கொண்டு வரும் ஒரு பெண்ணின் முயற்சி ‘மெட்டர்னிட்டி பிரேக்’. விளம்பரத் துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் மிஷேல் மார்டினா கார்டோசா (Mishael Martina Cardoza) ‘மெட்டர்னிட்டி பிரேக்’ எனும் குறும்படம் படைப்பின் மூலம் இவற்றை காட்சிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
“நான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரத் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய மகப்பேற்றுக்காக பணியிலிருந்து நான் சிறிது காலம் இடைவேளை எடுக்க வேண்டியிருந்தது. என் குழந்தையை பராமரிக்க அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டேன். பணி இடைவேளைக்குப் பின் நான் மீண்டும் அதே துறையில் பணியாற்ற விரும்பும்போது முன்பிருந்த வேலை வளைவுத்தன்மை எனக்கு கிடைக்கவில்லை. இதனால் ஒரு புதுத் தாயாக மீண்டும் அதே துறையில் நுழையும்போது தொடர்ந்து பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் குறைக்கப்படுவதை உணர்ந்தேன்.
சினிமா துறையில் இது போன்று திரைக்குப் பின்னால் உழைக்கும் பெண்களை ஆதரித்து வருகின்றனர். இருப்பினும் மகப்பேறு இடைவேளைக்குப் பின் ஒரு புதுத் தாயாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மீண்டும் அதே துறையில் இணைவது அவ்வளவு எளிதல்ல. ஒரு குறிப்பிட்ட கால அளவை கடந்து உதாரணமாக பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தடங்கலின்றி வேலையை தொடர முடியும் என்ற நிலையே உள்ளது.
சினிமாத்துறை இன்னும் 90% ஆண்களை மையமாகக் கொண்டே இயங்குகிறது. 12 முதல் 15 மணி நேரம் வரை நீளும் வேலை நேரம் என்பது புதுத் தாயாக இருக்கும் பெண்களுக்கு சிரமமாகவே உள்ளது. முன்னணி நடிகைகள் எட்டு மணி நேரம் வேலை என்று கோரினாலும், கேமராவிற்குப் பின் பணியாற்றும் பெண் சினிமோட்டோகிராஃபர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அத்தகைய சலுகைகள் கிடைப்பதில்லை. ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட விடுப்பு எடுக்க முடியாத சூழல்தான் பெண்கள் திரைத்துறையை விட்டு நிரந்தரமாக வெளியேறும் நிலை உள்ளது.
ஒரு ஆண் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து விருப்பமான அதே துறையில் பணியாற்ற முடிகிறது. ஆனால், பெண்களுக்கு அது அவ்வளவு எளிதல்ல. பெண்களுக்கேற்ற ஆசிரியர், செவிலியர் வேலைகள் என்றால் எளிதாக தொடரலாம், இதுபோன்ற பிரச்னைகள் வராதே என்று விமர்சனம் செய்வார்கள். நான் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டேன்.
எல்லாவற்றையும் கடந்து சமூக அழுத்தங்களால் நமக்கு விருப்பமான துறையில் செயல்படாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்து, ஒரு திரைப்படத்தை இயக்கலாம் என்று நினைத்தேன். இப்போது என்னை போன்று மகப்பேறு இடைவேளைக்குப் பின் பணியை தொடர்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் தாய்மார்களை குறித்து குறும்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்றவர் விரைவில் தான் இயக்கவிருக்கும் ‘மெட்டர்னிட்டி பிரேக்’ எனும் குறும்படம் குறித்து விளக்கினார்.
“இந்தக் குறும்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… சமூகம் தாய்மார்கள் மீது சுமத்தும் அழுத்தங்களால் பெண்கள் தனக்காக எடுக்கும் முடிவுகளில் கூட சுதந்திரம் இருப்பதில்லை. சமூகத்தில் ஒரு தாய் எடுக்கும் முடிவுகள் பல சமயங்களில் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு பெண் குழந்தை பிறந்த மூன்று மாதத்திலேயே வேலைக்குத் திரும்பினால், ‘குழந்தையை தவிக்க விட்டுவிட்டுச் செல்கிறாள்’ என்பார்கள்.
அதுவே அவர் நீண்ட காலம் வீட்டில் இருந்தால், ‘படித்த படிப்பை வீணடிக்கிறாள்’ அல்லது ‘நிதி ரீதியாக குடும்பத்திற்கு பங்களிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டப்படுகிறாள். இந்தச் சூழலில், வேலைக்குச் செல்வதா அல்லது வீட்டில் இருப்பதா என்பது பெரும்பாலும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதில்லை.
மாறாக, நிதி நெருக்கடி, சுய மரியாதையைத் தேடுதல் அல்லது சமூகத்தின் கட்டாயத்தின் பெயரிலேயே அந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தாய்மார்களுக்குத் தேவைப்படுவது தீர்ப்புகள் அல்ல, அவர்களை புரிந்துகொள்ளும் பரிவுதான். தாய்மைக்குப் பிந்தைய மன அழுத்தம் அதாவது, Postpartum Depression என்பது சினிமாவில் காட்டப்படுவது போல ஒரு பெண் கதவைச் சாத்திக்கொண்டு அழுவதோ அல்லது பைத்தியம் பிடிப்பது போன்ற ஒரு நிலையோ அல்ல. தினசரி வாழ்வில் ஏற்படும் ஒரு மெல்லிய அடையாளச் சிக்கல். சில நேரங்களில் மனைவி இதுபோன்ற அழுத்தங்களில் இருப்பது கணவருக்கே கூடத் தெரியாமல் போகலாம்.
பிளமிங்கோ பறவை பிரசவத்திற்கு பின் தன் உடலின் இளஞ்சிவப்பு நிறத்தை இழக்கும், அந்த நிறம் மீண்டும் வருவதற்கு ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு கால அளவு எடுக்கும். அதேபோல, ஒவ்வொரு தாயும் தனது பழைய நிலைக்குத் திரும்ப எடுக்கும் காலம் மாறுபடும். ஆனால், சமூகம் ஒரு பொதுவான கால அளவை நிர்ணயித்து அவர்களை அழுத்துவது வருத்தத்திற்குரியது.
நான் மூன்று ஆண்டு காலம் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். இந்த இடைவேளைக்குப் பிறகு இத்துறையின் இறுக்கமான சூழலை உணர முடிந்தது. எனவே இந்த குறும்படத்தை ஒரு சுயேச்சையான முயற்சியாக எடுக்கத் தீர்மானித்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடன் பகிர்ந்து வந்த தாய்மார்கள் சமூகத்தின் அனுபவங்களே இந்தப் படத்தின் அடித்தளம் எனலாம். தற்போது இந்தப் படம் Pre-production நிலையில் உள்ளது. இதற்குத் தேவையான நிதியை ‘கிரவுட் ஃபண்டிங்’ (Crowdfunding) மூலம் திரட்டி வருகிறேன். இது தொடர்பாக @martina_motherhood என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் பெண் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இத்துறை சார்ந்த அனுபவமுள்ள தாய்மார்கள் என்னுடன் இப்பணியில் இணைந்தாலும் மகிழ்ச்சி. இந்த குறும்படம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தனியார் திரையிடல் (Private Screening) நிகழ்வின் மூலம் இக்குறும்படம் திரையிடப்படும். தாய்மைக்கு பின் ஒரு பெண் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுவதால் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
