அழகான வரவேற்பு!

நன்றி குங்குமம் தோழி

நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்

‘வீடு’ என்பது அவரவர் வசதிக்கேற்றபடி தனி வீடாகவோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்போ அல்லது வாடகை வீடோ எதுவாக இருந்தாலும், அது நாம் வசிக்கும் இல்லம். அது தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தாலே அழகாக மாறிவிடும். தனி வீடுகளை சிலர் விரும்புவர். ஆனால், அதனை பராமரிக்க ஆள் பலம் வேண்டும். ஒவ்வொரு அறையும் பார்த்துப் பார்த்து அழகுபடுத்த வேண்டும். நம் மூதாதையர்கள் காலத்தில் அனைத்தும் தனி வீடுகளாகத்தான் இருந்தது.

சிமென்ட் தரைகளும், ஓட்டு வீடுகளாக இருந்தன. இன்று தனி வீடுகளை பராமரிப்பது சிரமம் என்பதால் பலர் அடுக்கு மாடி வீடுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், வீட்டுப் பகுதியை மட்டும் அழகாக வைப்பது சுலபமாகிறது. வாடகை வீடுகளில் வசித்தாலும், கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியாது. நாம் வசிக்கும் இடத்தை நமக்குரியதாக நினைத்து வசதிகள் அமைத்துக் கொள்ளலாம். அழகியல் ரசனை நம்மை விட்டுப் போகாமல் இருக்க, சந்தர்ப்பங்கள் அமைய, வேண்டிய வசதிகளை இடத்திற்குத் தகுந்தாற்போல் செய்தால் போதுமானது.இன்றைய காலகட்டத்தில் துணிமணிகள், பர்னிச்சர்களும் ரெடிமேடாகக் கிடைக்கிறது. நம்முடைய வீட்டிற்கு ஏற்ப கடைகளில் சென்று வாங்கி எளிதாக பொருத்திக் கொள்ளலாம்.

மேலை நாடுகளில், வலைத்தளங்களில் ‘மாடல்’ பார்த்து ஆர்டர் செய்தால், அதேபோல் செய்து அனுப்பி விடுவார்கள். அங்கு வேலை செய்ய ஆட்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டும் என்பதால் அவரவர் வேலைகளை அவர்களே செய்து கொள்வார்கள். நம் நாட்டில் அந்த வழக்கம் இல்லை. ஆட்கள் பலம் இருப்பதால், நம் வீட்டிற்கு வந்து பொருத்தி தருகிறார்கள். முன்பு மரம் வாங்கி வீட்டிலேயே மரப்பொருட்களை செய்து வந்தார்கள்.

ஆனால், இன்று தனி வீடுகளுக்கு மட்டுமே அது சாத்தியமாகிறது. அதனால்தான் கண்காட்சிகளில் கூட அறைகளுக்கேற்ற பொருட்களை விற்பனைக்கு வைக்கிறார்கள். மிகச் சிறிய அறைகளுக்கு பொருத்தவும், மாற்றலாகிப் போகிறவர்களுக்கும் கூட எளிதாக பிரித்து இணைத்து போடக்கூடிய வகையில் பல்வேறு வடிவங்களில் பொருட்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒட்டடைக்குச்சி மற்றும் படிக்கும் டேபிளை கூட மடித்து சிறிதாக்கி கதவின் பின்பக்கம் வைத்துவிடலாம்.

அதற்கு என வீட்டில் தனியாக இடம் ஒதுக்க வேண்டாம். தேவைப்படும் பொழுது பிரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பிள்ளைகள் அறை என்றால், என்னென்ன தேவை, எப்படி இருக்க வேண்டும்? எதை எங்கு அமைக்கலாம் என்பது வரை நமக்கு கம்ப்யூட்டரில் அமைத்து காண்பிக்கும் வசதி வந்துவிட்டது. ஆனாலும், வீட்டிற்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது வரவேற்பறைதான்.

நண்பர்கள், விருந்தினர்கள் என அனைவரும் அமரும் இடம்தான் ‘வரவேற்பறை’. பலதரப்பட்ட மனிதர்கள் வந்து போகும் இடம் என்பதால் பொதுவான அழகை தரக்கூடிய விதத்தில் அமைக்கலாம். பெரிய விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விருந்தினர்களின் மனம் மகிழும் சூழல் ஏற்படுத்தினால் போதுமானது. சிலர் ஒரு பக்கம் இதில் படுக்கையை அமைத்து படுத்துக்கொள்ள வசதியாக்கிக் கொள்வார்கள். அது அறையின் தோற்றத்தையே மாற்றிவிடும்.

நம் தேவைக்கு பயன்படுத்தும் இடவசதி இருந்தால், அதில் அனைத்தையும் சாத்தியப்படுத்த வேண்டும். ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தால், ‘வாங்க’ என்று வரவேற்று, அமரச் சொல்வோம். அவர்கள் உட்காரும் சோபாக்கள் அல்லது நாற்காலிகள் உட்கார வசதியாக இருக்க வேண்டும். அதேபோல் சுவரின் நிறங்களும் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். சில அழகான வேலைப்பாடுகள் கொண்ட பர்னிச்சர்கள் கடைகளில் உள்ளன. முதலில் அவை நம் இடத்துக்கு பொருந்துமா என யோசித்து பிறகு வாங்க வேண்டும்.

தனி வீடு இருந்து, வரவேற்பறையும் பெரிதாக இருந்தால், இஷ்டப்படி ேதர்ந்தெடுக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது வாடகை வீடு என்றால் நன்கு யோசித்து செயல்படுத்தலாம். வரவேற்பறை மற்றும் சாப்பாட்டு அறை ஒன்றாக இருக்குமானால், அதிக உயரமான ‘சோபா செட்டு’களை தவிர்த்து, உட்கார வசதியாக இருப்பதை பயன்படுத்தலாம். குடும்ப எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு 3+2 அல்லது 2+2வில் அமைக்கலாம். மிக அகலம் நிறைய கொண்ட அறைகளில், சுவற்றையொட்டி ‘ட’ வடிவிலான ஒரே பெரிய செட்டிங் போடலாம். எதை செய்தாலும் நாம் செய்யும் அலங்காரம் பேலன்ஸாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் நெரிசலான அனைத்தையும் அடைத்துவிட்டு, மறுபக்கம் பொருட்கள் இல்லாமல் காட்சியளிக்கக்கூடாது.

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே சொந்த வீடு தேவைப்படுகிறது. வீட்டை வாங்கியவுடன், அலங்கரிக்கும் ஆர்வத்தில் பார்ப்பதை எல்லாம் வாங்கி இடத்தை நிரப்பிவிடுகிறார்கள். அது நம் இடத்திற்கு பொருந்துமா என்று யோசிப்பதில்லை. நம் அறையின் தோற்றத்தை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டு, பொருட்களை அதில் வரைந்து பார்த்து, மனதிற்கு திருப்தி தருமானால், பின் தேர்வு செய்யலாம்.

சிறிய அடுக்குமாடி வீடுகளில் நடப்பதற்கே சிரமமாக இருக்கும் விதத்தில் சோபா ஒட்டி, சாப்பாட்டு மேசை போட்டிருப்பார்கள். எவ்வளவு சிறிய இடங்களிலும் போதிய இடைவெளி விட்டு, இடத்தையும் பெரிது போல் காட்டக்கூடிய நிறைய பொருட்கள் உள்ளன. சிறிய அறை என்றால், கண்டிப்பாக யோசித்து, நடமாட இடைவெளி விடும் அளவுக்கு கண்களுக்கு விருந்தளிக்கும் பொருட்களை அமைக்க முடியும்.

வரவேற்பறை நீளமாக காணப்பட்டால் ‘ட’ வடிவத்தில் உட்காருமிடத்ைத அமைக்கலாம். நீளம் அதிகம் கொண்ட அறையில் அனைத்தையும் நீளவாக்கில் போட்டால், அறை மேலும் குறுகியதாக தெரியும். அகலம் அதிகம் கொண்ட வரவேற்பறையில் ‘ப’ அல்லது ‘U’ வடிவில் அமைக்கலாம். பெரிய அறை என்றால், அழகான திவான், மற்ற இருபுறம் சோபா, நாற்காலிகள் போடலாம். மத்தியில் சென்டர் டேபிள் அமைத்தால் பார்க்க அழகாக இருக்கும். வரவேற்பறை ஒருவருக்கொருவர் பார்த்து உரையாடி மகிழும் அமைப்பு. ஒருவரை பார்த்து பேச வசதியாக அதில் சோபாக்கள், நாற்காலிகளை அமைத்திருக்க வேண்டும். முன்பு மரத்தினால் மட்டுமே பர்னிச்சர்கள் செய்யப்பட்டன. இன்று நம் வசதிக்கேற்ப லெதர் முதல் ஸ்டீல் என அனைத்து டிசைன்களிலும் கிடைக்கிறது.

அலங்காரப் பொருட்களை காட்சிப்படுத்துவதுதான் ஷோ கேஸ்கள். இதில் நாம் வாங்கி சேர்த்த அழகிய பொருட்கள், சாதனையாளர்களின் வெற்றிக் கோப்பைகள் போன்ற அனைத்தும் காட்சியாக்கலாம். எதுவும் இல்லை என்றால் பிள்ளைகள் விளையாடிய பொம்மைகள் கூட இதில் வைக்கலாம். இதனை நம் கற்பனைத் திறனுக்கேற்றபடி கூட வரைந்து பார்த்து, இடவசதிக்கேற்ப நம் விருப்பம் போல அமைத்துக் கொள்ளலாம்.

மிகப்பெரிய வரவேற்பறையாக இருந்தால், நுழைந்தவுடன் கண் பார்வையில் படும் வகையிலும் வைக்கலாம். இப்பொழுது தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கவாட்டில் ஷோகேஸ்களை அமைப்பது வழக்கமாக உள்ளது. வீடு கட்டும் பொழுதே அதற்கான இடம் விட்டு, பின் மரத்தில் தட்டுகள் அமைத்து கண்ணாடி போடலாம். சிறிய வரவேற்பறையில், சுவற்றிலேயே கூட வேண்டிய அளவில் பொருத்திக் கொள்ளலாம். ஷோகேஸ், நம் விருப்பம்தானே தவிர, அவசியம் கிடையாது. செடிகளை வைத்தும் அந்த இடத்தை அழகான பசுமையாக மாற்றலாம்.

நடு மேசை ஸ்டூல் போன்ற அமைப்பில் சோபாவின் உயரத்திற்கு ஒத்துப்போகும் படி இருந்தால் பார்க்க அழகாக இருக்கும். வரவேற்பறையை பொறுத்தவரை அழகிய அமைப்பு நம்மை கவரும் வண்ணம் அமைத்தல் முக்கியம். அலங்கார விளக்குகளின் நிழல் கீழேயுள்ள பொருட்கள் மீது விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய அறை உயரமான கூரையாக இருந்தால், தொங்கும் சர விளக்குகள் போடலாம். மேற்கூரையின் உயரம் குறைவாக இருந்தால், மேற்கூரையோடு ஒட்டிய விளக்குகள் அமைத்தால் பார்வையாக இருக்கும்.

வரவேற்பறையுடன் கூடிய சாப்பாடு அறை ‘ட’ வடிவில் இருந்தால் ‘டைனிங் மேசை’ தனிப்பட்டு அமைக்கப்படும். ஒரே நீள அறையாக இருப்பின் சாப்பாட்டு மேசை இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும். சிறிய அறை என்றால் அலங்கார திரைச்சீலைகளை போட்டு வரவேற்பு மற்றும் டைனிங்டேபிள் போடப்பட்டு இருப்பதை பிரித்துக் கொள்ளலாம். அல்லது இடையே ஒரு அலமாரி அமைப்பு தரலாம். இது வரவேற்பறை பக்கம், ஷோ கேஸ் போன்றும், சாப்பாட்டுப் பிரிவின் பக்கம் கண்ணாடிக் கப்புகள், டீ சர்ட்டுகள், விலையுயர்ந்த பீங்கான் பொருட்கள் வைக்கவும் பயன்படுத்தலாம்.

அறையின் நான்கு மூலைகளிலும் உயரமான சிலைகள், ஆடம்பரப் பொருட்கள், அழகான நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை சரியான ‘ஸ்டாண்டு’ அல்லது ‘ஸ்டூல்’ அமைப்புக் கொடுத்து பார்வைப்படுத்தலாம். மீன் தொட்டிகள், செயற்கை நீரூற்று போன்றவை மேலும் கண்களுக்கு விருந்தாகும். மொத்தத்தில் எந்த மூலையையும் வெற்றிடமாக்காமல் ஒரு பியூட்டி கார்னராக மாற்றலாம். வரவேற்பறையை பொறுத்தவரை முழுவதும் ஒன்று சேர்ந்து தான் அழகை பிரதிபலிக்கும்.

நம் ‘பட்ஜெட்’க்கு ஏற்ற பொருள்களும் கிடைக்கின்றன. கொஞ்சம் ரசனை, கற்பனைத் திறன், பராமரிக்கும் ஆற்றல் இருந்தால் போதும். சிறிய அறையாக இருந்தாலும் கண்ணைப் பறிக்கும் ஈர்ப்பை உண்டாக்குவது நம் கையில்தான் உள்ளது. விருந்தினரை மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும், கலையம்சம் கொண்ட வரவேற்பறையும் நமக்கு கண்களுக்கு விருந்தாகவே அமையும்.

தொகுப்பு:  சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்

Related Stories: