கிராமப்புற பெண்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

கோயம்புத்தூர் பீளமேட்டில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக சிறந்த செயல்பாட்டை நிகழ்த்தி வருகிறது. மாணவிகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதுடன் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள பெண்களுக்காக ஒரு முன்னெடுப்பு திட்டத்தை 2015ல் அறிமுகப்படுத்தி இன்று வரை செயல்படுத்தியும் வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில் பயிற்சி தந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருப்பதாக பெருமையாக கூறுகிறார் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி.

‘‘கோயம்புத்தூர் அன்னூர் வட்டம், பிள்ளையப்பன்பாளையம் என்ற கிராமம் எங்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டது. 2009 முதல் 2013 வரை எங்கள் கல்லூரி மாணவிகள் அந்தப் பகுதியில் தங்களின் சேவைகளை செய்தனர். அதனைப் பாராட்டி கிராமத்தினர்களில் ஐந்து நபர்கள் கல்லூரிக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்கள்.

அவர்களின் இந்த செயலுக்கு எங்க கல்லூரி நிர்வாகம் மறு உதவியாக அங்கு ‘கிராமப்புற மகளிர் தொழில்நுட்ப பூங்கா’ என்ற பெயரில் வளாகம் ஒன்றினை 2015ல் உருவாக்கினார்கள். அதன் முதற்கட்டமாக கல்லூரியின் சார்பில் அன்னூர் பிளாக்கிலுள்ள 21 பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்களிடத்தில் அவர்களின் தேவை குறித்து சர்வே செய்தோம். பெரும்பாலானோர் சுயதொழில் செய்ய விரும்பினர். குறிப்பாக வீட்டிலிருந்து செய்யக்கூடிய தொழில் சார்ந்த பயிற்சிகள், வேலை வாய்ப்புகள் வேண்டும் என்று கூறினர்.

அவர்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து தையல், ஆரிவேலைப்பாடு, பேக்கரி, சானிட்டரி நாப்கின், மசாலாப் பொருட்கள், வாழை நார் மதிப்பு கூட்டுப் பொருட்கள், பாக்கு மட்டை பொருட்கள், நேந்திரம் சிப்ஸ் தயாரித்தல் மட்டுமின்றி உணவு பதனிடும் பயிற்சி, ஆர்ஓ வாட்டர் பிளாண்ட் என எட்டு வகையான பயிற்சிகளை உருவாக்கினர். அதைத் தவிர முதியோர் மருத்துவ(Geriatrics care) சேவையையும் வழங்கினோம். இது அந்தப் ்பகுதி பெண்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது’’ என்றவர், இந்தப் பயிற்சிகள் அனைத்தும் இலவசம் என்பதையும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, 2016ல் புதுதில்லியில் உள்ள இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மற்றும் சமத்துவம், அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டுக்கான அறிவியல் பிரிவு (SEED) ஆகியவற்றின் ஆதரவுடன் ‘கிராமப்புற மகளிர் தொழில்நுட்ப பூங்கா’(RWTP) இணைந்து ஒரு பிராஜெக்ட்டில் ஈடுபட்டோம். அதன் மூலம் பல தொழில்நுட்ப இயந்திரங்களை வாங்கினோம்.

அன்று முதல் வணிக ரீதியாக சில தொழில்களை செய்ய கிராமப் பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறோம். அன்னூர் முதல் சத்தியமங்கலம் வரை நேந்திரம் வாழை மரங்கள் அதிக விளைச்சல் இருக்கும். பாக்கு மரமும் கிடைக்கும். இயந்திரங்கள் மூலம் பாக்கு மட்டையில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள், நேந்திரம் சிப்ஸ் தயாரித்தல், பயன்படாத வாழை பட்டை நாரில் கைவினைப் பொருட்கள் சேலைகள் வரை தயாரிப்பதற்கும் பயிற்சிகள் மட்டுமில்லாமல் அதனை விற்பதற்கான வழியும் செய்து உதவுகிறோம்’’ என்றவர், தற்போது தாவரத்திலிருந்து நெய் தயாரிப்பதற்கான பயிற்சிகள் வழங்குவதாகவும் கூறுகிறார் அகிலாண்டேஸ்வரி.

‘‘இங்கு பயிற்சியை முடித்தவர்களில் பலர் எங்களின் பயிற்சி மையத்தில் பயிற்சியாளர்களாகவும் வேலை பார்க்கின்றனர். தமிழ்நாடு அக்ரிகல்ச்சர் யூனிட்டில் (TNAU) இருந்தும் பயிற்சியாளர்களை வரவழைத்தும் பயிற்சி வழங்குகிறோம். சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து கூட்டங்களில் விளம்பரம் செய்து ஒவ்வொரு பயிற்சிக்கும் 30 கிராமப் பெண்களை வரவழைக்கிறோம். நகர்புறங்களில் பெண்கள் அவர்களின் அன்றாட தேவைகளை சமாளிக்க ஓடுகின்றனர்.

ஆனால், கிராமப்புற பெண்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்த விரும்பவில்லை. அவர்களை சிரமப்பட்டுதான் பயிற்சிக்கு அழைத்து வருகிறோம். விருப்பமில்லாமல் பயிற்சிக்கு வரும் இவர்கள் ‘எங்களுக்கென்று தனிப்பட்ட அடையாளம் தந்துவிட்டீர்கள்’ என்று பயிற்சி பெற்ற பிறகு சொல்லும் போது மனசுக்கு நிறைவாக இருக்கிறது’’ என்றார் அகிலாண்டேஸ்வரி.

பெண்களுக்கு வழிகாட்டுகிறோம்! -கல்லூரியின் முதல்வர் ஆரதி

‘தற்போது தமிழ்நாடு அரசு 100 கிராமங்களை தேர்ந்தெடுத்து கிராமப்புற மக்களுக்கு தொழில் உதவி செய்யும் நோக்கில் ‘கிராமம் தோறும் புத்தொழில் திட்டம்’ என்ற பெயரில் TN Start up அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். இந்த திட்டத்தை முதன் முதலாக தொடங்கியதே பிள்ளையப்பன் பாளைய கிராமத்தில்தான். அதுவும் எங்கள் கல்லூரியின் RWTP
சென்டரில்தான். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இதன் மூலம் முதல் பத்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு TN Start up மூலம் அவர்கள் தொழில் தொடங்க அனைத்து உதவிகளும், வழிகாட்டுதல்களும் செய்து தருகிறோம்.

பயிற்சியை முடித்த பெண்கள், தாங்கள் உற்பத்தி செய்தவற்றை விற்க கல்லூரிகளில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்று பலன் அடைகிறார்கள். அரசு சார்பில் நடக்கும் கண்காட்சியிலும் பங்கு பெறுகிறார்கள். நிறைய பெண்கள் தங்கள் பொருட்களை பிராண்டிங் செய்து, இந்தியா முழுதும் விற்பனை செய்கிறார்கள். கிராமப் பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் சம்பாதிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. தொழில்முனைவோராக மாற காத்திருக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் எங்கள் கல்லூரியும் RWTPக்கும் வழிகாட்டும்’’ என்கிறார் முதல்வர் ஆரதி.

இரண்டு வருடம் உதவுகிறோம்! – கல்லூரியின் செயலாளர் யசோதாதேவி

‘‘கிராமத்துப் பெண்கள் மட்டுமில்லாமல் விருப்பமுள்ள எங்க கல்லூரி மாணவிகளுக்கும் இந்தப் பயிற்சிகளை வழங்குகிறோம். ஸ்கில் டெவலப்மென்ட் தொழில்முனைவோர் பயிற்சி சம்பந்தமான தேர்வு உண்டு. அதற்காக தியரியாக கல்லூரியில் படித்ததை தொழில்நுட்ப பூங்காவில் பயிற்சி செய்வார்கள். நாங்கள் 20 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளோம். அந்த மாணவிகளும் இன்டர்ன்ஷிப் மற்றும் ஸ்கில் டிரெய்னிங்குகளுக்கு இங்கு வருகிறார்கள். எங்களைப் போன்று இந்த மாடலை பயன்படுத்தி மற்ற கல்லூரிகளும் இது போன்ற பயிற்சி மையத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு என பயிற்சியினை பிரித்துள்ளோம். பயிற்சியுடன் பினான்ஸ் மற்றும் டிஜிட்டல் லிட்ரசி புரோகிராம் என்ற பெயரில் கணினியும் கற்றுத் தருகிறோம். நாங்கள் இந்த பார்க்கை உருவாக்கிய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் இல்லை. ஆனால், இன்று நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் செல்ஃபோன் பயன்பாடு உள்ளது. நகர்ப்புறங்களில் பெண் தொழில்முனைவோர் பலர் சமூக வலைத்தளங்களில்தான் பிசினஸ் செய்கின்றார்கள்.

அதனால் டிஜிட்டல் மார்க்கெட் நிலவரங்களும் சொல்லித் தருகிறோம். பயிற்சி முடித்த பெண்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் MSME பதிவு செய்து வங்கி கடன் பெற்றுத் தரவும் உதவுகிறோம். பயிற்சியை முடித்தாலும் பிறகு இரண்டு வருடம் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் தந்து வருகிறோம்’’ என்றார் யசோதா.

செய்தி: கலைச்செல்வி

படங்கள்: மோகன் ராஜ்

Related Stories: