நன்றி குங்குமம் தோழி
பார்வை, செயல், பேச்சு என எல்லாவிதத்திலும் சராசரி குழந்தைகள் போல் அல்லாமல் அதீத உணர்ச்சி காட்டும் அல்லது உணர்ச்சி குறைவாக இருப்பவர்கள்தான் சிறப்புக் குழந்தைகள். அவர்கள் உடல் மற்றும் மன வளர்ச்சியில் மற்ற குழந்தைகளிடமிருந்து மாறுபட்டிருப்பர். அத்தகைய குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.‘‘அன்பான அணுகுமுறை, நிபுணர்களின் பயிற்சி, ஆரம்ப கால மருத்துவ பரிசோதனை, மாற்றுக் கல்வி ஆகியவற்றைத் தந்து சிறப்புக் குழந்தைகளை தேற்றலாம்’’ என்கிறார் சென்னை முகப்பேரில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியை நிர்வகித்து வரும் அல்லி முருகேசன்.
‘‘இந்தக் குழந்தைகள் சிறப்பானவர்கள். அவர்களை ஒதுக்காமல் அன்பு மற்றும் அரவணைப்புகளுடன் கவனித்து பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை. சிலர் குடும்பச்சூழல், கவனிப்பார் இல்லாதது, வசதியின்மை போன்ற காரணத்தினால் எங்களிடம் சேர்த்து விடுகிறார்கள். அவர்களை பராமரிப்பது சவாலான காரியமாக இருந்தாலும் பொறுமை மற்றும் அன்பால் பெற்றோர் இடத்தில் இருந்து நாங்க அவர்களை பார்த்துக் கொள்கிறோம்’’ என்றவர், ‘வசந்தம்’ என்ற பெயரில் உண்டு உறைவிடம் கொண்ட சிறப்பு பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.
‘‘நான் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு, 1980ல் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். பள்ளிகளிலும் எங்கள் பகுதியிலும் சில மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளை கவனித்து இருக்கிறேன். அவர்களை பார்த்த பிறகு தான் அதற்கான தனிப்பட்ட பயிற்சி எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தேசிய மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கான பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்தேன். மேலும், உளவியல் குறித்தும் படித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையுடன் தொடர்புடைய பள்ளிகளில் பயிற்சியாளராக இருந்தேன். ஆனால், எங்கள் சேவை குழந்தைகளை முழுவதுமாக சென்று சேரவில்லை. அவர்களுக்கு தேவையான வசதிகள், பயிற்சிகள் இல்லாததை நான் உணர்ந்தேன்.
அதனால் சுயமாக ஆறு குழந்தைகளுடன் வாடகை கட்டடத்தில் 1989ல் வசந்தத்தை துவக்கினேன்’’ என்றவர் அதன் பயணம் குறித்து விவரித்தார். ‘‘முதலில் வாடகைக்கு இடம் எடுத்து அங்குதான் வசந்தம் இயங்கி வந்தது. ஆனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் நிறைய பிரச்னை வந்தது. குழந்தைகளை அங்கு பராமரிப்பது கடினமாக இருந்தது. 1998ல் முகப்பேரில் தற்போதுள்ள சொந்த கட்டடத்திற்கு குடியேறினோம். சிறப்புக் குழந்தைகள் வளர வளர அவர்களை புரிந்து கொள்வதும்,கையாள்வதும் பெற்றோர்களுக்கு கடினமாக இருக்கிறது. அவர்களால் கவனிக்க முடிவதில்லை. வேலைக்கு போகும் பெற்றோராக இருந்தால் இன்னும் சிரமம். கட்டிப்போட்டு விட்டுதான் செல்ல முடியும் என்கிறார்கள். அத்தகைய குழந்தைகளை நாங்கள் எங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம்.
அருகிலிருக்கும் பெற்றோர்கள் காலையில் பள்ளிக்கு அனுப்பி விட்டு மாலையில் அழைத்து செல்கின்றனர். வெளியூர்களில் இருப்போர் இங்கு தங்கி படிக்கும் வசதியுள்ளதால் ஹாஸ்டலில் சேர்த்து விடுகின்றனர். விரும்பும் போது அழைத்து சென்று மீண்டும் கொண்டு வந்து விடுவர்’’ என்றவர், சிறப்புக் குழந்தைகளுக்கு தரும் பயிற்சிகள் பற்றி பகிர்ந்தார்.
‘‘நாங்கள் முதலில் இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளை 15 நாட்கள் கண்காணிப்பில் வைப்போம்.
அவர்களின் குறைபாட்டுத் திறனை மதிப்பீடு செய்து அதற்கேற்ற வகுப்புகளில் அவர்களை அமர வைத்து பயிற்சி அளிப்போம். மற்றவர்கள் துணையின்றி அவர்களின் அன்றாட தேவைகளான சாப்பிடுவது, கழிவறை பயன்பாடு, அறையில் இருந்து வெளியே வரும் போது விளக்கணைப்பது, குப்பைக் கொட்டுவது, பெயர்கள், வீட்டு முகவரி, தொலைபேசி எண் சொல்வது, தோட்ட பராமரிப்பு, துணி காய வைப்பது, மடிப்பது போன்ற பயிற்சிகளைத் தான் முதலில் சொல்லித் தருகிறோம்.
பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஸ்பீச் தெரபியும், உடலியக்க குறைபாடுள்ள குழந்தைகளுக்கு யோகா, பிசியோதெரபி போன்ற பயிற்சிகளும் வழங்குகிறோம். சற்று புரிதல் திறனுள்ள குழந்தைகளுக்கு பள்ளிப் பாடமும் சொல்லித் தருகிறோம். அவர்களை 10 மற்றும் +2ம் வகுப்பிற்கான தேர்வு எழுத வைத்து தேர்ச்சியும் அடைந்துள்ளனர். சிலர் அவர்களாக எழுதுவர். சிலருக்கு ஸ்கிரைப் ஏற்பாடு செய்வோம். கொரோனா காலக்கட்டத்தில் சராசரி பள்ளிக் குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதாமல் பாஸ் செய்தனர். ஆனால், எங்கள் குழந்தைகள் தேர்வு எழுதி பாஸ் செய்தார்கள்’’ என்று பெருமையாக கூறினார் அல்லி.
‘‘எங்கள் குழந்தைகளுக்கு தையல், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, நாரில் கைப்பைகள், லஞ்ச் பேக்ஸ், மேட்ஸ், நெசவுப் பயிற்சி, காகித பை, காகித கப் போன்றவற்றின் தொழில் பயிற்சியும் தருகிறோம். அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை கண்காட்சிகளில் விற்பனை செய்து அந்த விற்பனைத் தொகையை அவர்களுக்கு சம்பளமாக தரும் போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். அந்தத் தொகையில் பெற்றோர்களுக்கும் அவர்களுக்கும் புது டிரஸ்களை வாங்கிக் கொடுத்ததாக என்னிடம் கூறும் போது என் இத்தனை வருடப் பணிக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன். எங்கள் பள்ளியில் சேர்க்கைக்கு கட்டாய கட்டணம் இல்லை. விரும்பும் தொகையை சேர்க்கை கட்டணமாக தரலாம். இலவசம் தானே என்ற எண்ணம் வரக் கூடாது என்பதால்தான் அந்தக் கட்டணத்தையும் வசூலிக்கிறோம்.
ஆசிரியர்கள் எல்லாம் முறையாக சிறப்பு பள்ளி ஆசிரியை பயிற்சி முடித்தவர்கள்தான். எட்டுக் குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் வகுப்புகளை பிரித்துள்ளோம். 5 வயது குழந்தைகள் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோர் வரை எங்கள் பராமரிப்பில் உள்ளனர். சாலையோரத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கும் நாங்க இங்கு ஆதரவு அளிக்கிறோம். அவர்கள் எங்களுடன் ஒருவராகவே வாழ்கின்றனர். சிலரை உறவினர்களிடம் கண்டுபிடித்து ஒப்படைத்தோம்.
அவர்களோடு செல்ல விரும்பாதவர்களை நாங்க இங்கேயே அழைத்து வந்துவிடுவோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி அட்டவணைகளை பின்பற்றுகிறோம். 3 மாத கால இடைவெளியில் அட்டவணையை மாற்றுகிறோம். சில குழந்தைகளுக்கு வலிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கு. சிறப்புக் குழந்தைகளுக்கு இது பொதுவான பிரச்னைதான். சரியான நேரத்தில் மாத்திரைகள் தந்து பார்த்துக் கொள்ள வேண்டும். மாதம் ஒருமுறை வெளியிடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறோம். சில குழந்தைகள் வெளி ஆட்களை பார்த்தால் சற்று அசாதாரணமாக நடந்து கொள்வார்கள். அவர்களை வெளியில் அழைத்துச் செல்வதில்லை’’ என்றவர், பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கவனித்துக் கொண்டே இருக்கிறார்.
‘‘சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை போல் இல்லாமல் கூடுதல் பொறுப்பு அவர்களுக்கு தேவைப்படுகிறது. நாங்கள் பள்ளியில் சொல்லித் தந்ததை வீட்டிலும் பின்பற்ற வேண்டும். ஆனால், எங்களிடம் விட்டால் போதுமென்று நினைக்கிறார்கள். அவர்கள் தவிப்பு, வேதனை புரிந்தாலும் எங்களை விட பொறுமை அவர்களுக்குதான் தேவைப்படுகிறது. சிறப்புக் குழந்தைகளின் முக்கிய பிரச்னை உணவு.
வீட்டில் அக்கறை என்ற பேரில் அதிக உணவுகளை கொடுத்துவிடுகிறார்கள். உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமன், வயிற்றுக்கோளாறுகளும், உணவை பிடுங்கி சாப்பிடுதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அத்தகைய குழந்தைகளை சமாளிப்பதுதான் சவாலான காரியம். மற்றபடி அவர்களின் மறுபக்கம் மிகவும் வியப்புக்குரியது. அவர்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால் போதும். அதை அவர்கள்தான் செய்வார்கள்.
மற்றவர்களை செய்ய விடமாட்டார்கள். அவர்கள் செய்யும் வேலையும் அழகாக முழுமையாக செய்வார்கள். தறி நெய்யும் போது அவர்களின் வேலைப்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். இவர்களை பராமரிப்பதை நான் வேலையாகவும் சுமையாகவும் பார்க்கவில்லை. வாழ்நாள் கடமையாகவும் பொறுப்பாகவும் பார்க்கிறேன்’’ என்கிறார் அல்லி முருகேசன்.
கிருபா முருகேசன், பள்ளியின் இயக்குநர்
‘‘நான் மூன்று வயதில் இருந்து அம்மாவின் சேவையை உடனிருந்து பார்க்கிறேன். அம்மாவிற்கு நானும் எங்கள் பள்ளி குழந்தைகளும் வேறில்லை. அம்மாவின் சேவை பிடித்ததால் நானும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். நானும் சிறப்புக் குழந்தைகளுக்குரிய பேச்சுப் பயிற்சி முடித்து எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறேன். தனியார் மருத்துவமனையிலும் பயிற்சி அளிக்கிறேன்.
எங்கள் பள்ளிக்கு அரசும் சில உதவிகளை செய்கிறது. தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் நிதி உதவி, பொருளுதவி செய்கின்றனர். சில மருத்துவர்களும் கட்டணமின்றி சிகிச்சை பார்க்கின்றனர். மருந்துகளையும் தந்து உதவுகின்றனர். எங்கள் குழுந்தைகள் சிறப்புக் குழந்தைகள் பங்கேற்கும் போட்டிகளில் பங்கு பெற்று பரிசினை பெரும் போது பெருமிதமாக இருக்கும். அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது’’ என்கிறார் கிருபா.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
