பின்னிரவில் வந்த பேய்!

நன்றி குங்குமம் தோழி

இந்த வருடம் தீபாவளியை கொண்டாட கிராமத்தில் இருக்கும் என் அம்மா வீட்டுக்குப் போகலாம் என்று அடம் பிடித்தனர் என் குழந்தைகள்.“ஆமாங்க. நானும் அத்தையை பார்த்து ரொம்ப நாளாச்சு. குழந்தைங்களும் எத்தனை நாளைக்கு இந்த நகர வாழ்க்கையிலே உழன்றுக் கொண்டிருப்பாங்க? ஒரு சேஞ்சுக்காகவாவது கிராமத்துப் பக்கம் போய் இருந்துவிட்டு வரலாமே?” என்றாள் மாதவி.இவர்கள் சொல்வது உண்மைதான். சிட்டி வாழ்க்கை ஓர் இயந்திரத்தனமான வாழ்க்கை என்பது எனக்குப் புரியாமல் இல்லை.நான் சற்று மௌனமாக இருந்ததைப் பார்த்த குழந்தைகள், “அப்பா… பாட்டி வீட்டுக்குப் போகலாம்பா…” என்று மீண்டும் என்னைப் பிடித்து உலுக்கினர்.

“சரி, சரி… போகலாம்…” என்றதும், “ஹோ…” என ஆர்ப்பரித்தனர்.அந்தக் காலத்துப் பழைய வீடு இன்னமும் பிரமாண்டமாய் நின்று கொண்டிருந்தது. கதவுகளும், தூண்களும் தேக்கு மரத்தால் ஆனவை என்பதால் உறுதியுடன் இருந்தன. அவ்வளவுப் பெரிய வீட்டில் என் அம்மாவும், என் தம்பி வாசு தன் குடும்பத்துடனும் வசித்து வந்தனர். தம்பிக்கு நான்கு குழந்தைகள். பூர்வீக சொத்தாய் பத்து ஏக்கர் நிலத்தை விட்டுப் போயிருந்தார் என் அப்பா.

விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் பி.எஸ்.ஸி. அக்ரிகல்ச்சர் முடித்த வாசு புதுவிதமான உத்திகளுடன் நவீன விவசாயத்தில் பல முன்னேற்றங்களை அடைந்து கிராமத்திலேயே தங்கிவிட்டான். அம்மாவுக்கும் ஒத்தாசையாக இருந்ததால் மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் காலம் தள்ளிக்கொண்டிருந்தாள்.நான்தான் பி.இ.மெக்கானிக்கல் முடித்து இன்ஜினீயராக இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். “வாடாப்பா, ராகவா… எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து? இப்பவாவது வந்தியே….” என்றாள் அம்மா.

டிக்கியிலிருந்த சாமான்களை தூக்கிக்கொண்டு போய் உள் அறையில் வைத்தான் வாசு. வாசுவின் மனைவி மைதிலி ஆவி பறக்கும் காபியும், சூடான பஜ்ஜியும் கொண்டு வந்து பரிமாறினாள்.
என் குழந்தைகளோடு, வாசுவின் குழந்தைகளும் சேர்ந்து தெருவில் விளையாடப் போய்விட்டனர். அவர்கள் வீட்டுக்குள் வந்தபோது அவர்களுக்காக வாங்கி வந்த சங்கு சக்கரம், மத்தாப்பு, பூந்தொட்டி, பாம்பு மாத்திரை, பட்டாசு அடங்கிய பாக்கெட்டுகளை ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொடுக்க, சந்தோஷமாய் பெற்றுக்கொண்டனர். மறுநாள், காலை டிபன் முடிந்ததும், ஊரைச் சுற்றிப் பார்க்கணும் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான் வாசு. ஏரிக்கரையை அடுத்திருந்த பூங்காவில்
குழந்தைகளை விளையாட விட்டு வாசு என்னுடன் மரத்தடி சிமென்ட் பெஞ்ச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“ஆயிரம்தான் சொல்லு வாசு, கிராமம் கிராமம்தான். எவ்வளவு சுத்தமான காற்று, அன்போடு பழகும் மக்கள், இயற்கையான சூழல்” என்று அடுக்கிக் கொண்டே போனேன்.
என்னை கையமர்த்திவிட்டு வாசு சொன்னான்.“இதோ பாருங்கண்ணா… ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை அமையுது. அவரவருக்கு வாய்த்த வாழ்க்கையை அனுபவிக்க, ரசிக்க கத்துக்கணும்.
கிராமத்துக்கென்றே அமைஞ்ச சில வசதிகள், நகரத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனா, நகரத்துல இருக்கிற வசதிகள் கிராமத்தில் இல்லைங்கறதுதான் உண்மை.”
அன்றிரவு, சாப்பாடு முடிந்து குழந்தைகளுக்கு நீளவாக்கில் இருந்த ஹாலில் படுக்கைகளை விரித்துப் போட்டாள் மைதிலி.

குழந்தைகள் என் அம்மாவைச் சுற்றி அமர்ந்து கொண்டு, “பாட்டி… பாட்டி… ஒரு கதை சொல்லுங்க பாட்டி” என்றனர்.செல்ஃபோனில் பப்ஜி விளையாடும் என் குழந்தைகள் அவ்வாறு கேட்டது எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது.“கதை என்ன, கதை? நடந்த உண்மைக் கதையைச் சொல்றேனே…” என்றாள் அம்மா.அம்மா அவ்வாறு சொன்னதும் பெரியவர்களும் காதுகளை தீட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்தோம்.

“பத்து வருஷங்களுக்கு முன்னால் நடந்த கதை இது. அதுவும் ஒரு தீபாவளி தினம்தான். விடிஞ்சா தீபாவளி. அன்னைக்கு ராத்திரி நான் தனியா உட்கார்ந்து அதிரசம் சுட்டுக்கிட்டிருந்தேன். அடுப்புக்குப் பக்கத்திலதான் ஜன்னல் இருந்தது. அது வழியா பின்புற தோட்டத்தைப் பார்க்கலாம். ராத்திரி மணி பன்னிரெண்டு இருக்கும். அப்ப தோட்டத்துல ‘ஜல் ஜல்…’னு ஒரு சத்தம்.”“அம்மா… நீங்க வேறே… வீணா குழந்தைங்க பயந்துடப் போறாங்க” என்று நான் குறுக்கிட்டு எச்சரித்தேன்.

“நாங்க ஒண்ணும் பயப்படல. இப்ப நீங்கதான் பயந்திருப்பீங்கன்னு தெரியுது” என்றான் என் மூத்தவன்.“நீங்க சொல்லுங்க பாட்டி. கதை வெரி இன்ட்ரெஸ்ட்டிங்” என்றாள் என் இளைய மகள்.அம்மா தொடர்ந்தாள்.“என்ன சத்தம் இதுன்னு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். அங்கே தோட்டத்திலிருந்து வெள்ளை வெளேர்னு சேலைக் கட்டி, தலைவிரி கோலமா மோகினி பிசாசு வந்துக்கிட்டிருக்கு. வாணலியில் எண்ணெய் சூடாகி, அதிரசம் சுடும் பதத்துக்கு வந்திருந்தது. ஒரு அதிரசத்தை எடுத்து வாணலியில் இட்டேன். அப்ப, அந்த மோகினி கையை ஜன்னலுக்குள் நீட்டி, அதிரசத்தைக் கேட்டது.நான் உடனே கரண்டியில் சுடச்சுட எண்ணெயை எடுத்து அவள் கையில் போட்டேன்.’’

“அடடா… அது என்ன பண்ணிச்சி பாட்டி..?”

“அவ்வளவுதான். ‘ஆ… ஐயோ’ன்னு அலறியடிச்சு ஓடிப்போயிடுச்சு. அதுக்கு அப்புறம் இதுவரை இந்தப் பக்கம் வந்ததே கிடையாது.”“பாட்டி சூப்பர். நீங்க மட்டும் அதுக்கு அதிரசம் கொடுத்திருந்தா, அது ஒவ்வொரு தீபாவளிக்கும் கரெக்ட்டா வந்திருக்கும்” என்றான் என் மகன்.“ஏம்மா… உனக்கு வேறு கதைங்களே கிடைக்கலையா? இப்படி சும்மா ஒரு கதையைக் கட்டி குழந்தைங்களை பயமுறுத்தணுமா?” என்றேன் நான், சற்றே கோபத்துடன்.“ராகவா… நீ என்ன நினைச்சுக்கிட்டிருக்கே? இது உண்மையா நடந்த கதைதான். கட்டுக்கதை எல்லாம் ந்கிடையாது. புரிஞ்சிக்க” என்று என்னை அடக்கினாள் அம்மா.

தெருக்கதவுப் பக்கம் பார்த்தேன். ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது. அது தெரிந்ததா அல்லது தெரிந்தது போல் இருந்ததா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. எங்கோ நாய் குரைக்கும் சத்தம்.முதல் முறையாக எனக்கு வியர்த்தது.பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டேன்.மறுநாள் தீபாவளி.அன்றிரவு அதிரசத்துக்கான மாவை ரெடியாக்கி, அதை வட்ட வடிவத்தில் தட்டி, துணியை விரித்து அதில் போட்டுக்கொண்டிருந்தனர் மாதவியும், மைதிலியும்.அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளிக்கணும் என்று குழந்தைகளை சீக்கிரமாகவே படுக்க வைத்துவிட்டனர்.

என்னிடம் பேசிக்கொண்டிருந்த வாசுவும் எழுந்து தூங்கப் போய்விட்டான்.‘கும்’மென்ற இருள் பரவிய இரவு நேரம்.ஒருவித அமானுஷ்யம் வீடு முழுக்கப் பரவி இருந்தது.அதிரசம் சுடுவதற்கான ஏற்பாடுகளில் அம்மாவும், அவளுக்குத் துணையாக மாதவியும், மைதிலியும் சமையல் அறையில் கூடியிருந்தனர்.“காலையிலிருந்து நிறைய வேலை செஞ்சு அலுத்துப் போயிருக்கீங்க… நீங்க ரெண்டு பேரும் போய் படுத்துக்குங்க. ராகவன் வேணா எனக்கு உதவியா இருக்கட்டும்” என்றாள் அம்மா.வேறு வழியின்றி நான் மெல்ல அம்மாவின் அருகில் அமர்ந்தேன்.

ஒவ்வொரு அதிரசமாய் எடுத்துக்கொடுக்க அம்மா வாணலியில் இட்டாள்.“ராகவா கொஞ்சம் பொன்னிறமா வந்தா திருப்பிப் போடு… இதோ நான் வந்துட்டேன்” என்றவாறு அம்மா பாத்ரூம் நோக்கி போய்விட, ஒருவித அச்சத்துடன் அடுப்பு முன் அமர்ந்தேன்.அப்போது…“ஜல்…. ஜல்…. ஜல்….” என்றொரு சத்தம்.என் பார்வை என்னையும் அறியாமல் அந்த ஜன்னல் பக்கம் போனது.
வெளியே…‘கிர்ர்ர்ர்ர்ர்ர்’ என்ற சில்வண்டுகளின் ரீங்காரத்துடன் தோட்டம் இருளில் மூழ்கியிருந்தது.

என் பார்வை ஜன்னலில் பதிந்திருக்க…அந்த கும்மிருட்டில்…

வெள்ளையாய் ஓர் உருவம் அசைந்து வந்தது.எனக்கு குலை நடுங்கியது.
அப்போது திடீரென்று ஜன்னல் வழியாக ஒரு கை என்னை நோக்கி நீண்டது!

நான் அலறுவதற்குள்…

“ராகவா… அங்கே ஒரு பழைய துணி இருக்கு பார்… அதை எடு” என்ற குரல் ஜன்னலுக்கு வெளியே கேட்டது.
‘அட, சை… அம்மா..!’அதற்குள் நான் வியர்வையில் தெப்பமாய் நனைந்துவிட்டிருந்தேன்.

நான் பயந்த விஷயத்தை ஒருவரிடமும் மூச்சுவிடவில்லை. மறுநாள் காலை.சுடச்சுட இட்லி, சட்னியுடன் காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது.அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.எனக்கு அது உறுத்திக்கொண்டே இருந்தது. அம்மாவிடம் கேட்டுவிடலாமா? அம்மாவிடம் தனியாகத்தான் கேட்கவேண்டுமென காத்திருந்தேன்.குழந்தைகள் பட்டாசு வெடிக்க தெருவில் இறங்கிவிட்டனர். மாதவியும், மைதிலியும் சமையலறையில். வாசு ஒரு வேலையாக வெளியே போயிருந்தான். அம்மா மட்டும் தனியாக கூடத்தில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள். நான் மெதுவாகச் சென்று அம்மா அருகில் அமர்ந்தேன்.

“ஏம்மா… உனக்குப் பழைய துணி தேவைன்னா உள்ளே வந்து கேக்க வேண்டியதுதானே? ஜன்னல் வழியா ஏன் கேட்டே?”“நான் எப்ப உன்கிட்ட துணி கேட்டேன்?”“ராத்திரி அதிரசம் சுடும் போது என்னை பார்த்துக்கச் சொல்லி நீ எழுந்து புழக்கடைப் பக்கம் போனே இல்ல?”“ஆமாம்…”“திரும்பி வந்து ஜன்னல் வழியா கையை நீட்டி துணி கேட்டியேமா?”“நானா? நான் ஏம்பா பழைய துணி கேக்கறேன்? எனக்குத் தேவைன்னா நானே வந்து எடுத்துக்கமாட்டேனா?” என்று சொல்லி சிரித்தவள், “ராத்திரி கதை கேட்டுட்டு தூங்கினே இல்ல, கனவு எதுவும் கண்டு குழம்பிட்டிருப்பே” என்றாள்.

தூக்கிவாரிப் போட்டது எனக்கு.அப்படியானால்… ஜன்னலில் கை நீட்டி என்னிடம் துணி வாங்கியது…அன்று மாலையே புறப்படத் தயாராகிவிட்டேன்.“ராகவா… என்ன இது? ‘திடுதிப்’புனு கிளம்பறே? இன்னும் ஒரு ரெண்டு நாளாவது தங்கிட்டுப் போ” என்றாள் அம்மா.“ஆபீஸ்ல திடீர்னு ஒரு அவசர வேலை. என்னோட பாஸ் உடனே வரச்சொல்லிட்டார்” என்றேன்.வேறு வழியின்றி மனைவி, குழந்தைகளோடு விடைபெற்றேன்.இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது, நான் பொழுது சாய்வதற்கு முன் அங்கிருந்து ஏன் இவ்வளவு அவசரமாக கிளம்புகிறேன் என்று?

தொகுப்பு: மலர்மதி

Related Stories: