விவசாய உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு காவேரிப்பாக்கம் அடுத்த பன்னியூரில்

காவேரிப்பாக்கம், பிப்.21: காவேரிப்பாக்கம் அடுத்த பன்னியூர் கூட்ரோடு பகுதியில் விவசாய உரமூட்டையான யுரியா தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், உரக்கடை வியாபாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே உரம் தருகின்றனர். மற்ற விவசாயிகள் வந்தால் உரமில்லை என்று கூறிவிடுகின்றனர். மேலும், புதிதாக வரும் விவசாயிகளிடம் கூடுதலாக ₹50 வசூலிக்கப்படுகின்றன என்று தினகரன் நாளிதழில் நேற்றுமுன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையில் வேளாண்மை அலுவலர் அபிநயராஜேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் சேகர், ஆகியோர் பன்னியூர் கூட்ரோடு பகுதியில் உள்ள விவசாய உரக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து சிறுவளையம், சேரி, சிறுகரும்பூர், காவேரிப்பாக்கம், ஆயர்பாடி, பாணாவரம், களத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்தனர். இதில், 664 யுரியா மூட்டைகள் இருப்பில் இருந்தது தெரியவந்தது. எனவே தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று உரமூட்டைகளை வாங்கி பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் பன்னியூர் கூட்டுரோடு பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும், உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு உரம் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: