சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, சத்திரப்பட்டி பகுதியில் தாயில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, கலைஞர் காலனி, விஜயகரிசல்குளம், கோதைநாச்சியார்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்தாப்பு, தரைச்சக்கரம் உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இன்று காலை வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஒரு அறையில் 3 தொழிலாளர்கள் மணிமருந்தை கலக்கிக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அறைகளில் இருந்து வெடிகள் விடாமல் வெடித்துச் சிதறின. இந்த வெடிச்சத்தம் சுமார் 10 கி.மீ தூரம் வரை கேட்டு அதிர்ந்தது. தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து தொழிலாளர்கள் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெடித்து சிதறிய பட்டாசுகள் மற்றும் தீயை போராடி தீயணைப்புத் துறையினர் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில் பட்டாசு ஆலை உரிமம் இன்றி செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
