விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் விவேகானந்தர் தெருவில் அதிமுகவினர் நேற்று பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு அதிமுக நிர்வாகிகள் சிதம்பரமூர்த்தி, முனியாண்டி, முத்துக்குமார் ஆகியோர், அப்பகுதியில் வசிப்பவர்களின் பெயர்கள் அடங்கிய பேப்பருடன் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, பரப்புரை செய்ய வர விருப்பம் உள்ளவர்களின் பெயரை கேட்டு எழுதிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கார்த்திகேயன், பறக்கும் படை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பறக்கும் படை பிரிவினர் மற்றும் விருதுநகர் தெற்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அதிமுக பிரமுகர்களிடம் சோதனை செய்தபோது ரூ.27 ஆயிரத்து 100 ரொக்கம் மற்றும் 31 டோக்கன் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பறக்கும் படை அலுவலர் சுரேஷ்பாபு, அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்ததாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் எஸ்ஐ செல்வம் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* தவெகவினரும் பணப்பட்டுவாடா
தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரிடம் யாரிடமும் பணம் பெற கூடாது, யாருக்கும் பணம் கொடுக்க கூடாது என உறுதிமொழி பெற்றார். சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் போலீஸ் அதிகாரி லட்சுமணன் போட்டியிடுகிறார். வேட்புமனுவை தாக்கல் செய்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், தண்ணியாக பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
குறிப்பாக, தன்னுடன் பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கும், ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கும் பணத்தை வாரி வழங்கி வருகிறார். பிரசாரத்திற்கு வந்த தொண்டர்களுக்கு, தவெக நிர்வாகி ஒருவர் கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தில் வைத்து பணம் விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான போட்டோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
