தவெக பரப்புரை செயலாளராக உள்ள நாஞ்சில் சம்பத் நேற்று வேலூர் தொகுதி தவெக வேட்பாளர் வினோத்கண்ணனை ஆதரித்து வேலூரில் பிரசாரம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குமாரபாளையத்தில் அதிமுக பிரசாரத்தில் தவெக கொடியை ஒரு தொண்டன் கையில் வைத்திருந்ததை பார்த்து நல்ல காலம் பொறந்தாச்சு, பிள்ளையார் சுழி போட்டாச்சுன்னு சொன்னது யாரு? எடப்பாடிதானே? இன்றைக்கு எடப்பாடி கையறுந்த நிலையில் கைவிடப்பட்டிருக்கிறார்.
டெல்லியால் இன்றைக்கு காயடிக்கப்பட்ட ஒரு அபூர்வ பிறவி எடப்பாடி. தமிழ்நாட்டில் எந்த அதிர்வையும் அவர் உருவாக்க முடியாது. ஆகவே எடப்பாடியையோ அவர் தலைமையிலான அந்த கட்சியையோ நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நடிகர் அஜித்தை பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அரசியல் அடையாளம் இல்லாமல் இயங்க வேண்டும் என விரும்புகிறார். தன்னுடைய தந்தை இறந்தபோது கூட ஒரு சாமானியனாக ஈமச்சடங்கு செய்த எளிய மனிதர், உயர்ந்த மனிதர் அஜித்.
எங்கள் தலைவர் விஜய் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் மலேசியாவில் பேசும்போது கூட, நான் இங்கே பேசுகிற பொழுது அஜித் நினைவுக்கு வருகிறார் என அஜித்துக்கும் கோலாலம்பூருக்கும் உள்ள தொடர்பை பேசியிருந்தார். ஆகவே சினிமாவைப் பற்றி எந்த ஞானமும் இல்லாத ஒரு ஞான சூனியம்தான் எடப்பாடி பழனிசாமி. இப்போது அஜித்துடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தி பிரசாரம் செய்வது, விபசாரம் செய்வதற்கு சமமானது என்று நான் அவருக்கு சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* ஜனநாயகன் படத்தை லீக் செய்தது ஆதவ்வா?
தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன் தவெக சார்பில் மாஸ்டர் ஸ்டிரோக் வெளியாகும் என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தாரே? இப்போது ஜனநாயக படத்தை அவர்தான் லீக் செய்ததாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, ‘‘ஜனநாயகன் படம் லீக்கான செயலில் எங்கள் கட்சியோ, எங்கள் கட்சியினுடைய தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ்அர்ஜுனாவோ ஈடுபட மாட்டார்கள்’’ என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
