தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி பேச ஒன்றிய அமைச்சர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? பாஜ ஆளும் மாநிலங்களில் அரசே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது: பாலியல் குற்றங்களை பட்டியலிட்டு மறுக்க முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

சிவகங்கை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி பேச பாஜ தலைவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? பாஜ ஆளும் மாநிலங்களில் அரசே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது என்று அங்கு நடந்த பாலியல் குற்றங்களை பட்டியலிட்டு மறுக்க முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), கருணாஸ் (சிவகங்கை), காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி (காரைக்குடி) ஆகியோரை ஆதரித்து, நேற்றிரவு திருப்புத்தூர் அருகே வையிரவன்பட்டியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசியதாவது: சீரழிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு அனைத்து பிரிவுகளிலும் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கிறோம். பல அமைச்சகங்களின் விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் தெரிந்தும், தமிழ்நாட்டுக்கு பிரசாரம் செய்ய வந்திருக்கும், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், “தமிழ்நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் பின்னோக்கிப் போகிறது” என்று, உளறிவிட்டு – பிதற்றிவிட்டு சென்றிருக்கிறார். பச்சைப் பொய் கேள்விப்பட்டிருக்கிறோம்! இது அதற்கும் மேல், கடைந்தெடுத்த ‘காவிப் பொய்’! பொருளாதார வளர்ச்சியில் 11.19 விழுக்காட்டுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இன்றைக்கு நம்பர் ஒன். ஜி.டி.பி.லும் – தனிநபர் வருமானத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறதா, இல்லையா? உயர் கல்விச் சேர்க்கையில் இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் கல்லூரிக்கு போகிறார்களா, இல்லையா?

இந்தியாவிலேயே வறுமை குறைந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா, இல்லையா? இந்தியாவிலேயே பெண் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடாக இன்றைக்கு இருக்கிறது. ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் முதலிடம், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம், தோல் பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம்! இவை மட்டுமல்ல, இப்போது இரண்டு நாள் முன்பு, ஒரு ரிப்போர்ட் வந்திருக்கிறது. கடந்த நிதியாண்டு நிலவரப்படி, இந்தியாவிலேயே தொழில் உற்பத்தியிலும் தமிழ்நாடுதான் முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்தியாவிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இன்னும் இப்படி நிறைய லிஸ்ட் போட முடியும். இதையெல்லாம் நாங்களா சொல்கிறோம்? ஒன்றிய பாஜ. அரசே சொல்லியிருக்கிறது. ஆய்வறிக்கைகளில் அதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.இதைக்கூட படிக்காமல், இதுகூடிய புரியாமலா `ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதையேதான் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் பிரசாரத்திற்காக வரும் வடநாட்டு பாஜ. தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக யார் குற்றம் செய்தாலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, விரைவாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, உச்சபட்ச தண்டனையும் பெற்று தரப்படுகிறது.

குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கிறோம் என்று ஒரு வழக்கையாவது நீங்கள் காட்ட முடியுமா? பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கவும் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம். பாலியல் குற்றவாளிகளுக்கு எக்காரணம் கொண்டும் முன்விடுதலை கிடையாது எனவும் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு வரும் ஒன்றிய அமைச்சர்கள், அவர்கள் ஆளும் மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு பற்றி பேசுவார்களா? உங்கள் பாஜ ஆளும் மாநிலங்களின் நிலை என்ன? நான் சொல்லவா? பாஜ. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கூலித் தொழிலாளியின் நான்கு வயதான சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

சிறுமியின் பெற்றோர் மனம் வெறுத்து, போலீஸில் புகார் கொடுத்தபோது என்ன ஆனது தெரியுமா? அவர்கள் புகாரை பதிவு செய்ய மறுத்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெற்றோர்களையே லாக்கப்பில் கட்டி வைத்து அடித்து, உதைத்து, துன்புறுத்தி, இதை வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார்கள். கடைசியாக வேறு வழி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் போக்சோ பிரிவைக் கூட சேர்க்கவில்லை. இந்த கொடுமையைப் பார்த்து, உச்சநீதிமன்றமே உத்தரப்பிரதேச காவல்துறையை கடுமையாக கண்டித்திருக்கிறது. நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. காசியாபாத் காவல் ஆணையரை உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இப்படி ஒரு காட்டாட்சி பாஜ. ஆளும் மாநிலத்தில்தான் நடக்கிறது.

2020ம் ஆண்டு இதே உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஹத்ராஸ் சம்பவத்தை மறக்க முடியுமா? 19 வயதான தலித் சிறுமி கேங்-ரேப் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலை, அவரது அப்பா, அம்மா அவர்களின் சம்மதம் ஏதும் கேட்காமலேயே, இரவோடு இரவாக போலீஸே எரித்தார்கள். ஆறுதல் சொல்லச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் தடுத்தார்கள். பிரதமர் மோடி அவர்களின் குஜராத் நிலைமை என்ன பெரிய உத்தமமா? கர்ப்பிணி பெண் என்றுகூட பார்க்காமல் பில்கிஸ் பானு அவர்களை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை ‘ரிலீஸ்’ செய்த மாபாதக அரசுதான் பா.ஜ.க. அரசு! காஷ்மீரில் 8 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் பேரணி நடத்தினாரா, இல்லையா?

இன்னும், மணிப்பூரில் எத்தனை ஆயிரம் கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது! இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. தாங்கள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் குற்றவாளிகளை கொண்டாடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பாஜகாரர்கள், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா? அரசே குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மோசமான நிலைதான் பாஜ. மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கெல்லாம் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச, அதுவும் நள்ளிரவில் கூட பெண்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் வேலைகளுக்கு சென்றுவரும் தமிழ்நாடு பற்றி பேச அருகதை இல்லை.

இப்போது நான் சொன்னதையெல்லாம் மறுக்கும் தைரியம், தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் எந்த பா.ஜ.க. தலைவருக்காவது இருக்கிறதா? பாஜ தலைமையிலான என்டிஏ உள்ளே வந்தால், குற்றவாளிகளும் கலவர கிரிமினல்களும்தான் ஆட்சி செய்வார்கள். என்டிஏ ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ எப்போதும் இடமே இருக்காது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் பற்றி பேசுகிறார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு – சாத்தான்குளம் படுகொலை – முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிலேயே கொலை கொள்ளை – பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் – தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ‘சிட்டிங்’ அமைச்சர்களே சிக்கியது என அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள், சீனப் பெருஞ்சுவரைவிட நீளமாக போகும்! இந்த எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி செய்தது அ.தி.மு.க. அரசு! ஆனால், நம்முடைய ஆட்சியில், தவறு செய்தது காவலராக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, அவர்களைக் கைது செய்து, விரைவாக வழக்கு நடத்தி, தகுந்த தண்டனை பெற்றுத் தருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘சாக்கடை என்று நிரூபித்து கொண்டிருக்கிறார் எடப்பாடி’
புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி, ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதன், விராலிமலை திமுக செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை திமுக வேட்பாளர் முத்துராஜா, கந்தர்வக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சின்னத்துரை, அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய சாதனைகள்தான் இந்தியாவிற்கே ‘பெஞ்ச் மார்க்-காக இருக்கும்! எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன். கிரிக்கெட்டில் பல பிளேயர்ஸ், பல ரெக்கார்டுகளை வைத்திருப்பார்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தீர்கள் என்றால், அவரிடம் அனைத்து ரெக்கார்டுமே இருக்கும்! அரசியலில் அப்படிப்பட்ட முறியடிக்க முடியாத அனைத்து ரெக்கார்டும் திமுகதான் செய்திருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கிறேன். இனியும் தொடர்ந்து நாம்தான் ரெக்கார்டு பிரேக் செய்யவும் போகிறோம்.

ஆனால், பா.ஜ.வின் கிளைக் கழகச் செயலாளராக இருக்கும் பழனிசாமி அவர்களால், இப்படி ஏதாவது சாதனைகளை சொல்லி, வாக்கு கேட்க முடியுமா? எங்கேயாவது, அவர் சாதனைகளை சொல்லி, பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, கொள்கைகளைப் பற்றி பேசி பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, மாநில உரிமைகளுக்கு பழனிசாமி குரல் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள்! ஏன் என்றால், பாதம்தாங்கி பழனிசாமியிடம் கொள்கைகளும் இல்லை; சாதனைகளும் இல்லை! அதனால்தான், சாக்கடைக்கு சமமான சொற்களையும், அவதூறுகளையும் பேசி, அவர் ஒரு தரமற்றவர் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். என்.டி.ஏ. எனும் பேரிடரை, தமிழ்நாட்டுக்குள் பின்வாசல் வழியாக கொண்டு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதன்மை அடிமைதான், பழனிசாமி! அவர் பழனிசாமி இல்லை.

ஆமாம்சாமி! அடிமைசாமி! அந்தக் கூட்டணி டெல்லியில் வைத்து முடிவு செய்யப்பட்ட கூட்டணி! அனைவருக்கும் தெரியும். ஊழல்வாதிகளும் – தேர்ந்த துரோகிகளும், காவி கும்பலை தோளில் சுமந்து கொண்டு வருகிறார்கள். நேற்றுகூட, பா.ஜவில் இருக்கும் ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே என்ன சொல்லியிருக்கிறார்? தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று பேசியிருக்கிறார். அடிமைசாமியான பழனிசாமி இதற்கு ஏதாவது பதில் சொன்னாரா? என்ன சொல்வார்? ஒன்றும் சொல்லவில்லை. பழனிசாமி அவர்களே துரோகத்தில் டாக்டரேட் வாங்கும் அளவுக்கு அனைவருக்கும் இவ்வளவு துரோகம் செய்துவிட்டு, வாய் கூசாமல் பொய்யாய் பேசிக் கொண்டிருக்கிறீர்களே! இவ்வாறு அவர் பேசினார்.

* சிவகங்கையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு: செல்பி எடுத்து மக்கள் உற்சாகம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று இரவு 9 மணிக்கு சிவகங்கை நகர்ப்பகுதிக்கு வந்தார். சிவகங்கை கோட்டை முனியாண்டி கோயில் அருகே வந்தபோது, அவரது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியவர் திடீரென ரோட்டில் நடந்து சென்றார். ரோட்டின் இரு பக்கமும் நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கோட்டை முனியாண்டி கோயிலில் இருந்து அரண்மனை வாசல் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை சென்றார். அங்கிருந்து திரும்பி நேதாஜி சிலை வரை வந்தார். பின்னர் அவர் வாகனத்தில் ஏறி சென்றார். பிரசாரத்திற்கு திடீரென வந்த முதல்வரை பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர். திரண்டு வந்து முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories: