திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசுதாவுக்கு ஆதரவாக அன்புமணி பாமகவினரும், ராமதாஸ் அணி சார்பில் போட்டியிடும் மாவட்ட செயலாளர் கலைமணியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முந்தினம் ராமதாஸ் அணியினர் பிரசார வேனில் பாமக கொடிகள் கட்டியும், வேட்டிகள், துண்டுகள் அணிந்தபடி வாக்கு சேகரித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்புமணி பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமையிலான நிர்வாகிகள், கலைமணியிடம் சென்று, எங்க கொடிகளை எப்படி பயன்படுத்தலாம் என கேள்வி எழுப்பினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தொடர்ந்து, அங்குவந்த அதிமுக, பாஜவினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
இதன்பிறகு ஆரணி தொகுதியில் ராமதாஸ் அணி வேட்பாளர் கலைமணிக்கு ஆதரவாக சிலிண்டர் சின்னத்திற்கு ஆட்டோவில் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த ஆட்டோக்களில் பாமக கட்சி கொடி கட்டி இருந்தனர். இதற்கு அன்புமணி பாமக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோக்களை மடக்கி கட்சிக் கொடியை வலுக்கட்டாயமாக அகற்றினர். டிரைவர்களை தாக்க முயன்றனர். இதுகுறித்து இருதரப்பும் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
