விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் லட்சுமணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘எந்த அரசியலமைப்பு சட்டம் ஆளுநர், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை உருவாக்கியதோ அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான வகையில் அவர்கள் செயல்படுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது.
தமிழ்நாட்டில் பெரும் பகுதிக்கு சென்றுவிட்டுதான் இங்கு பிரசாரத்திற்கு வந்துள்ளேன். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் செல்லும் இடத்தில் மக்கள் பேராதரவு அளிக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட இடங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும்.
அதிக பெரும்பான்மை பலத்துடன் மு.க ஸ்டாலின் முதலமைச்சராவார். அண்ணாமலை ஊழலை பற்றி பேச அருகதை கியடையாது. இந்த தேர்தலுக்காக பாஜ பல ஆயிரம் கோடி வசூல் செய்திருக்கிறது. தனிநபர், நிறுவனங்களிடமிருந்தும் பல ஆயிரம் கோடி வசூல் செய்திருக்கிறார்கள். பாஜவே அண்ணாமலையை புறக்கணித்துவிட்டது’’ என்றார்.
