ரோக்புரூன் கேப்மார்டின்: மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு, உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் தகுதி பெற்றுள்ளனர். மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் ரோக்புரூன் கேப்மார்டின் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர்.
இப்போட்டியில் துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர், முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அதிரடி காட்டிய அவர் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய சின்னர், இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், மொனெகாஸ்க் வீரர் வாலன்டின் வாஷரோ மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதல் அல்காரஸின் ஆதிக்கமே காணப்பட்டது. துடிப்புடன் ஆடிய அவர், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அல்காரஸ் – சின்னர் மோதவுள்ளனர்.
