ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை கச்சா எண்ணெய் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வரும் பல்வேறு உலக நாடுகள் அந்த வழித்தடத்தை முழுமையாக திறக்க வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் ஈரான் தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டுள்ள ஒரு பிரச்சனையால் கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறக்க முடியாத சூழலில் அந்நாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கொண்டு செல்ல பயன்படும் ஹோர்முஸ் வழித்தடத்தை மீண்டும் விரைவாக திறக்கவும், வழக்கம் போல் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கவும் வேண்டும் என்று ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போர் தீவிரமாக நடைபெற்ற போது ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை தடுத்து மற்றும் அச்சுறுத்தி வைக்க அந்நாடு பதித்த கண்ணிவெடிகள் அனைத்தையும் அதனால் முற்றிலும் கண்டறிந்து அகற்ற முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வரை ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதையின் வழியாக மட்டுமே சர்வதேச நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் எரிபொருள் மற்றும் சர்வதேச வர்த்தக விநியோக நிலை சற்று இயல்புநிலைக்குத் திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஈரான் இந்த நீரிணையை முழுமையாக திறந்தால் மட்டுமே முற்றிலும் இயல்பு நிலை திரும்பும். ஆனால் ஈரான் படையால் அவர்கள் பொருத்திய கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவை கடலின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால், ஹோர்முஸ் நீரிணையை முன்பை போல முழுவதுமாகத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டு, சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் சீராகாமல் இருக்கும் சூழல் ஏற்பட கூடும் என அஞ்சப்படுகிறது. ஆனால் இது குறித்து ஈரான் அரசு எந்த ஒருதகவலையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிக்கை ஒன்றில் ” கடந்த மாதம் ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் புதைக்க ஈரான் படை சிறிய படகுகளைப் பயன்படுத்தியிருந்தது. ஆனால் அந்த கண்ணிவெடிகள் எங்கெங்கு புதைக்கப்பட்டன என்பதை ஈரான் முறையாகப் பதிவு செய்ததா என்பது குறித்த தகவல் தெளிவாக இல்லை” என்று தெரிவிக்கிறது. ஈரான் வைத்த கண்ணிவெடிகள், நீரோட்டத்தில் மிதந்தோ அல்லது நகர்ந்தோ சென்றிருக்கலாம், இதனால் அவை எங்கிருக்கிறது என்பதை ண்டறிவது கடினமாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.
