இஸ்ரேலை தீய சக்தி என வர்ணித்த பாக்., பாதுகாப்பு துறை அமைச்சர்.! நெதன்யாகு எச்சரிக்கையை தொடர்ந்து பதிவு நீக்கம்

இஸ்ரேல் ஒரு தீய சக்தி, அது அழிய வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சருக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்தது. நெதன்யாகுவின் அலுவலகம் பகிரங்கமாக தன்னை கண்டித்ததால் ஏற்பட்ட அச்சம் மற்றும் அழுத்தத்தை தொடர்ந்து, காஸாவை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது என்று குற்றம்சாட்டி இஸ்ரேலை “மனிதகுலத்தின் சாபக்கேடு” என்றும் “நரகத்தில் அழிய வேண்டும்” என்று பதிவிட்ட குறிப்பிட்ட பதிவை பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் நீக்கி இருக்கிறார்.

இஸ்ரேலின் கடும் கண்டனத்தை தொடர்ந்து கவாஜா ஆசிஃப் ஷேர் செய்திருந்த எக்ஸ் பதிவில் பின்வருமாறு கூறியிருந்தார். “இஸ்ரேல் ஒரு தீய சக்தி, மனிதகுலத்திற்கே ஒரு சாபக்கேடு. இஸ்லாமாபாத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், லெபனானில் இனப்படுகொலை நிகழ்த்தப்படுகிறது. இஸ்ரேலால் அப்பாவி குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள்; முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும் இனஒழிப்பு தங்குதடையின்றி தொடர்கிறது. ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக, பாலஸ்தீன மண்ணில் இந்தப் புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று நான் நம்பிப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் “இஸ்ரேல் அழிய வேண்டும் என்ற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்து மிகவும் கொடூரமானது. இது எந்தவொரு அரசாங்கத்தாலும் பொறுத்து கொள்ள கூடிய ஒரு கருத்து அல்ல; குறிப்பாக, அமைதிக்கான ஒரு நடுநிலைத் நாடாக தற்போதைய போர் சூழலில் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு அரசிடமிருந்து இது போன்ற கருத்து வர கூடாது” என்று கண்டித்துள்ளது. இதனை தொடர்ந்து தனது இஸ்ரேல் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து அடங்கிய போஸ்டை கவாஜா ஆசிஃப் நீக்கி உள்ளார். இதனிடையே இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியான் சாரும் பாகிஸ்தான் தலைமையை பகிரங்கமாகக் கண்டித்தார். “எங்கள் நாடு அழிய வேண்டும் என சூளுரைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்” என்று அவர் கூறினார். லெபனானில் சமீபத்தில் நடந்த இஸ்ரேலிய குண்டுவீச்சில் குறைந்தது 256 பேர் கொல்லப்பட்டதற்கும், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இஸ்ரேலை “தீய சக்தி” என்றும் “மனிதகுலத்திற்கு ஒரு சாபம்” என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: