பாகிஸ்தானில் உச்சகட்ட பரபரப்பு; டிரம்பின் எச்சரிக்கையால் பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே உயர் மட்ட குழு கடும் நிபந்தனைகளை விதித்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இரு நாடுகளும் பிடிவாதமாக இருப்பதால் பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்படுமா என்பது கேள்வியாக உள்ளது. மேற்காசியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் அரசின் முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே 2 வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று சனிக்கிழமை பாகிஸ்தானில் உள்ள செரீனா ஓட்டலில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் மற்றும் சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மஜித் தக்த் ரவாஞ்சி மற்றும் அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடியாக சந்திக்காமல், தனித்தனி அறைகளில் அமர்ந்து பேசுவார்கள் என்றும், பாகிஸ்தான் அதிகாரிகள் தூதுவர்களாக செயல்பட்டு தகவல்களை பரிமாறிக்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்துகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்றிரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தனர். இக்குழுவில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அகமதியான், ஈரான் மத்திய வங்கி கவர்னர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையில், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்ப் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாகிஸ்தான் புறப்பட்டனர். அப்போது துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். ஈரான் நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைக்கு வந்தால், நாங்களும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். மாறாக, எங்களை ஏமாற்ற நினைத்தால், அமெரிக்க குழுவினர் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்’ என்று எச்சரித்துள்ளார். இந்த பயணம் குறித்து ஆண்ட்ரூஸ் கூட்டு விமான படை தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், ‘துணை அதிபர் வான்ஸ் மிகப்பெரிய காரியத்திற்காக செல்கிறார்.
அவருக்கு எனது வாழ்த்துகள். அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஈரானின் ராணுவ படைகள் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு விட்டன. வான்வழி பாதுகாப்புகள், முக்கிய தலைவர்கள் என அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன. இப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட வளைகுடா கடல் பகுதியை திறப்போம். இது மிக விரைவாக நடக்கும் என்று நினைக்கிறேன். அப்படி நடக்கவில்லை என்றால், வேறு வழிகளில் இதனை முடிவுக்கு கொண்டு வருவோம். வான்ஸ் தலைமையிலான குழுவினர் நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதன் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறினார். இதற்கிடையே, பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக ஈரான் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சபாநாயகர் காலிபாப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக லெபனானில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த இரண்டு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கும்’ என்று கூறியுள்ளார். லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களும் இந்த போர் நிறுத்தத்தில் அடங்கும் என்று ஈரான் கூறுகிறது. ஆனால், ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதலுக்கு போர் நிறுத்தம் பொருந்தாது என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. இந்த பேச்சுவார்த்தை இன்று இரவு வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
தாக்குதல் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘சர்வதேச ஜலசந்திகள் வழியாக உலக நாடுகளை மிரட்டுவதைத் தவிர ஈரானிடம் வேறு வழிகள் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்களை அனுமதிப்பதில் ஈரான் மிகவும் மோசமாகவும், நேர்மையற்ற முறையிலும் நடந்து கொள்கிறது. இது நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் கிடையாது’ என்று பதிவிட்டு இருந்தார்.
மற்றொரு பதிவில், ‘தற்போது ஆயத்தப் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களை போர் கப்பல்களில் ஏற்றி வருகிறோம்.
இதற்கு முன்பு நாங்கள் நடத்திய தாக்குதல்களை விட இது மிகவும் பயங்கரமானதாக இருக்கும். ஈரானுடன் தற்போது நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், இந்த நவீன ஆயுதங்களை கொண்டு ஈரான் மீது மிகத் துல்லியமாகவும், வீரியமாகவும் தாக்குதல் நடத்துவோம். அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிடும்’ என்று கூறினார்.
லெபனானில் 2,000 பேர் பலி
கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பலி எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 357 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத வகையில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவிற்கான லெபனான் தூதர் நடா ஹமாதே மோவாட் மற்றும் இஸ்ரேல் தூதர் ஆகியோர் செல்போன் மூலம் பேசி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை செய்துள்ளனர். லெபனான் அதிபர் ஜெனரல் ஜோசப் அவுன் எடுத்த முயற்சியால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் 14-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறையில் போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளன.
கடன் கொடுத்து தரகர் வேலை பார்க்க சொன்ன சவுதி
சவுதி அரேபிய நிதி அமைச்சர் முகமது அல்-ஜதான் ஒரு நாள் பயணமாக நேற்று இஸ்லாமாபாத் நகருக்கு வருகை தந்தார். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாகிஸ்தானின் 5 பில்லியன் டாலர் கடன் மறுபயன்பாட்டு சிக்கல் மற்றும் ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் நிதி வசதியை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஆகியோர் தலைமையிலான குழுவினர், ஈரான் – அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தைக்காக இன்று இஸ்லாமாபாத் வந்துள்ளனர்.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் அரசியல் விமர்சகரான ஹம்சா அல்-ஹசன் என்பவர் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு தரகராக செயல்பட வேண்டும் என்று சவுதி அரேபியா ஏன் விரும்புகிறது? சவுதி அரேபியா தனது செல்வத்தை பயன்படுத்தி அரசியல் பாதுகாப்பை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. போர்க்களத்தில் தான் உண்மையான அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் சவுதி அரேபியா ஒரு ‘கறவை மாடு’ போல புதிய பாதுகாப்பாளரை தேடி அலைகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களை மட்டும் கவனிக்காமல், சவுதி அரேபியாவின் நலன்களையும் டிரம்ப் மற்றும் அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது’ என்று ஹம்சா அல்-ஹசன் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு நேரடி ராணுவ பலம் இல்லாததால், பாகிஸ்தான் மூலமாக சவுதி அரேபியா தனது செல்வாக்கை செலுத்த முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்காகவே பாகிஸ்தானுக்கு பெரும் தொகையை கடனாக வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
