தோட்ட கண்காட்சியா.? விலங்குகள் பூங்காவா அல்லது சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடமா.! பார்த்ததும் இப்படி பல சந்தேகங்களை வரவைக்கும் இடம் ஒரு சுற்றுலா விடுதியாக இருக்கிறது என்றால் பலருக்கும் நம்பமுடியாத வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் ஹுபே மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள லிங்க்லிங்க் சர்வதேச சுற்றுலா விடுதியே காண்போரை இவ்வாறு வியப்பில் ஆழ்த்துகிறது. சுற்றுலா விடுதி என்றாலும் 328 ஏக்கர் பரப்பளவில் பூங்கா கண்காட்சி அரங்கத்தையும், வனவிலங்கு சரணாலயத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிரமாண்ட சர்வதேச அளவிலான சுற்றுலாத்தலமாக திகழ்கிறது.
இங்கு 200-க்கும் மேற்பட்ட அரிய விலங்குகள், பறவைகள் உட்பட சுமார் 5000 உயிரினங்கள் இயற்கை சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நடந்தோ அல்லது சொந்த வாகனங்களில் சென்று இவற்றில் அருகில் பார்த்து மகிழலாம்.
இங்குள்ள விடுதியில் தங்குபவர்கள் சில விலங்குகளுக்கு உணவளித்து கொண்டே காலை உணவை எடுத்து கொள்ளும் வசதியும் உள்ளது. இதுஒரு பக்கம் என்றால் சுற்றுலா பயணிகள் மகிழ்வதற்காகவே இங்கு சர்க்கஸ் நிகழ்ச்சியும் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள் மற்றும் உணவகங்கள் என என்ன இல்லைஇங்கு என்று என கேட்க வைக்கிறது ஹுபே மாகாணத்தில் அமைந்துள்ள கடந்த மார்ச் 30, 2026 அன்று திறக்கப்பட்ட Ezhou Lingling Wildlife Kingdom. இது மத்திய சீனாவிலேயே மிகப்பெரிய வனவிலங்கு சார்ந்த சுற்றுலாத் தலமாகும். ஒரு உயிரியல் பூங்காவையும் ஒரு தோட்டக் கண்காட்சிப் பூங்காவையும் ஒருங்கிணைக்கும் இடமாக திகழ்கிறது.
ரஷ்யா, உக்ரைன், கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட “சர்க்கஸ் யுனைடெட் நேஷன்ஸ்” குழுவின் வியப்பூட்டும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளும் இங்கே நடைபெறுகின்றன. சர்வதேச குதிரையேற்றக் கலைஞர்கள் மற்றும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளைக் கொண்ட 360° கோணத்தில் பரந்த காட்சிகளைக் காட்டும் சர்க்கஸ் அரங்கம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது மேலும் தனித்துவ அனுபவங்களை வழங்கும் 50,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு சொகுசு தங்குமிட வசதியும் இங்குள்ளது.
