வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

என்றென்றும் அன்புடன் 14

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை. வெற்றி பெற்றவுடன் அதைக் கொண்டாட பெரும் ஆவல். சில இடங்கங்களில் இந்த கொண்டாட்டங்கள் விபரீதமாய் முடியும். இன்றைய காலகட்டத்தில் வெற்றி, புகழ், பாராட்டு ஒவ்வொரு நொடியும் தேவைப்படுகிறது. இல்லையென்றால் மன அழுத்தத்தில் தள்ளப்படுகிறோம்.

அந்தப் புகழ்ச்சியோ பாராட்டோ நம்மை வளர விடுமா?

ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நித்தமும் ஏதோ செய்து பாராட்டு வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். அதற்கு அவர்கள் செய்யும் சாகசமும், செலவிடும் நேரமும் மிகவும் அதிகம்.

நாம் வெற்றி அடைய வேண்டுமா? சாதனைகள் செய்ய வேண்டுமா?

மஹாபாரதத்தில் அபிமன்யுவை ஆறு அரசர்கள் வெட்டி வீழ்த்தினர். பாண்டவர்களுக்கு இது பேரிடி. அர்ஜுனனை சமாதானப்படுத்த முடியவில்லை.
மிருகம்போல் ஆனான். அபிமன்யுவை காப்பாற்ற எவ்வளவு முயற்சித்தும் அதைத் தடுத்தது ஜயத்ரதன் என்று கேள்விப்பட்டு,அர்ஜுனன் சூளுரைத்தான்.
‘‘சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஜயத்ரதனை வீழ்த்துவேன். தவறினால் உயிரை மாய்த்துக் கொள்வேன்.” அர்ஜுனன் கர்ஜித்தான்.

கௌரவர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது, அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். சூரியன் மறையும் வரை ஜயத்ரதனை மறைத்து வைக்க வேண்டும்.
அர்ஜுனன் பல வீரர்களை வீழ்த்தியபடி முன்னேறிக் கொண்டிருந்தான். ஜயத்ரதன்னை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சூரியன் மறைய ஆரம்பித்தது. அர்ஜுனன் செயல் இழந்தான். மறைந்திருந்த ஜெயத்ரதனுக்கு பொறுக்க முடியவில்லை. வெளியில் வந்து ஆர்ப்பரித்தான். மறைந்த சூரியனும் மேல் எழும்ப கண்ணன், ‘‘அர்ஜுனா சூரியன் இன்னும் அஸ்தமிக்க வில்லை. ஜயத்ரதனை வீழ்த்து” என்று சொல்லவும் ஜயத்ரதன் வீழ்த்தப்பட்டான்.

தனக்கு வெற்றி கிடைத்துவிட்டது. அர்ஜுனன் ஒழிந்தான் என்கிற அசூயையில் ஜயத்ரதன், சூரிய அஸ்தமன நேரத்தை கணக்கிட மறந்தான். சூரியன் மறைவதுபோல் இருந்ததும், ஜயத்ரதன் அந்த போர்க் களத்தில் ஆனந்தக் கூத்து ஆடினான். கண்ணனுக்கு தெரிந்து இருந்தது, வெற்றியை கொண்டாடும் வேட்கை கௌரவர்களுக்கு அதிகம் உண்டு என்று அதைக் கொண்டே அவர்களை வீழ்த்தினான்.

பொருத்தம் இல்லாத கொண்டாட்டம் தோல்வியில் முடிந்தது.வெற்றி அருகில் இருப்பதுபோல் ஒரு பிம்பம் என்றும் உண்டாகிய படியே இருக்கும்.
பெரும்பாலும் இந்த மனநிலை பெரியவர்களை மட்டும் அல்ல குழந்தைகளையம் பெரிதும் பாதிக்கிறது. அவர்களின் செயல் களின் வீர்யத்தை புகழ் ஆசை குறைக்கிறது.
இராமாயணத்தில், ராவணனுக்கு ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கை இருந்தது. சீதையை அபகரிக்க ஜோதிடம் பார்த்து கணித்து, கிளம்பினான். வெற்றி நிச்சயம். குறிப்பிட்ட நேரத்தில் சீதையை இலங்கைக்கு தூக்கி வந்தால் இலங்கை செழிக்கும். சீதை நிரந்தரமாக இலங்கையில் இருப்பாள் என்று தீர்மானித்தான்.

அதன்படி சீதையை சூழ்ச்சி செய்து அபகரித்தான்.அவன் எதிரே பாரத நேரத்தில் ஜடாயு அவனை தடுத்தது, ஒரு பறவை தன்னை தடுப்பதை அவனால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அவன் நினைத்திருந்தால் மாய வித்தைகளின் மூலம் ஜடாயுவை போக்கு காட்டி தப்பித்து இருக்கலாம்.ஜடாயுவை அவனால் தவிர்க்க முடியவில்லை. அதனுடன் சண்டை இட்டபடி இருந்து, அவன் நேரத்தை தவற விட்டான் இலங்கை அழிந்தது.

ராவணன் ஆசையும் நிறைவேறவில்லை. சீதையை அபகரித்து விட்டோம் என்கிற எண்ணமே பெரும் வெற்றியை அடைந்த மனநிலையை அவனுக்குள் உதித்தது.ஜடாயுவால் ஏற்பட்ட தாமதம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது.இராவணன் ஜடாயுவை வீழ்த்துவதை வெற்றி என்று நினைத்து தோற்றுப் போனான். ஜடாயுவின் தோல்வி அதற்கு ராமனின் அன்பை பெற்று தந்தது.ஒரு வேலையை செய்யும் பொழுதோ, கற்றுக் கொள்ளும் பொழுதோ அதற்கு உண்டான நேரம் என்பது அந்தச் செயலே தீர்மானிக்கும். நாம் தீர்மானிப்பது இல்லை. அதை முழுமையாக செய்து முடிக்கவும், நிறைவை பெறவும், முழுமையான வெற்றியை ருசிக்கவும், நாம் பொறுத்து இருக்க வேண்டும். அமைதி காக்க வேண்டும்.

பல வெற்றிகளை கோர்த்தால் சாதனை உருவாகும். அதற்கு பொறுமையும், அந்த வெற்றிகளின் நடுவே தோல்விகளும் அவசியம் தேவை. தோல்விகள் நம்மை ஸ்திரப்படுத்தும். நம் பாதையையே தேர்ந்தெடுக்க உதவி செய்யும். அமைதிப்படுத்தும்.சாதனை என்னும் மாலையை உருவாக்க வெற்றி, தோல்வி என்கிற மணிகள் அவசியம் தேவை. இது இரண்டையும் கடந்து தான் சாதனைக்குள் நுழைய முடியும்.

வெற்றி என்கிற ஏணியில் கீழ்ப் படிகள் நம்முடைய தோல்விகளை நாம் அணுகும் முறையை காட்டுவது, மேல் படிகள் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்வது.பெரும்பாலும் உடல் எடையை குறைப்பவர்கள் சுலபமாக குறைத்து விடுவார்கள். அதைத் தக்க வைப்பதுதான் பெரும் சவால். அதேபோல் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுதல் என்பதுதான் அந்த வெற்றியை முழுமை பெறச் செய்யும்.

சாதனை செய்தவர்கள் அதைக் கொண்டாடும் விதமே வேறு. அவர்களின் வெற்றி என்பது சக மனிதர்களுக்கு அவர்களின் வாழ்வில் இவர்களால் ஏற்படும் நேர்மறையான தாக்கம். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கொண்டாட்டங்களை விட அதன் நோக்கம் முக்கியமானது. வெற்றியை தக்க வைத்துக் கொள்ள செய்த செயலின் நோக்கம், ஆற்றல், ஞானம் மூன்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்.பாரதப் போரில் வெற்றி பெற்றவுடன் பாண்டவர்கள் வெற்றியைப் பெரிதாக கொண்டாடவில்லை. ராஜசூய யாகம் நடத்தினர். ரிஷிகள், ஞானிகள் பலரும் பாண்டவர்களை வாழ்த்தினர். தர்மம் செய்தபடி இருந்தனர்.

தோல்வியை விட வெற்றியை கையாளுவது என்பது பெரும் சவால்.கிருஷ்ணன் கம்சனை வதம் செய்த பின், அந்த வெற்றியை பெரிதாகக் கொண்டாடவில்லை. அந்த ராஜ்ஜியத்தை ஆள ஆசைப்படவும் இல்லை. ராஜ்ஜியத்தை தாத்தா உக்கிரசேனனிடம் கொடுத்து விட்டு, குரு குலத்திற்குச் சென்றான். அந்த வயதில் கற்றலின் முக்கியத்துவம் தெரிந்தது. நிதானமாக தன்னுடைய வெற்றிகளை கோர்த்தான். பெரும் சாதனை புரிவதற்காக.

ரம்யா வாசுதேவன்

Related Stories: