இந்த யோகினி மனித உடலும், எருமையின் தலையையும் கொண்டு காட்சி தருகிறாள். சிம்மா சனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் இவளது ஒரு பாதம் சிம்மாசனத்தின் மீது மடித்து வைக்கப்பட்டும், மற்றொரு கால் கீழே தொங்க விட்ட படியும் இருக்கிறது. இவளது ஒரு கையில் பழமும் மற்றொரு கையில் தண்டம் போல ஒரு ஆயுதமும் காணப்படுகிறது. இவளது காலுக்கடியில் ஒரு அன்னப்பட்சி இருக்கிறது. இது, இவளது கையில் இருக்கும் பழத்தை உண்ட படி இருக்கிறது..
இந்த யோகினி எமனின் சக்தியா?
இந்து மதத்தில் மரணத்தின் அதிபதியாக இருப்பவர் யமன். இவரது வாகனம் எருமை. இந்த யோகினி எருமைத்தலையோடு காணப்படுகிறாள். அதே போல எமனின் வலிமையான ஆயுதம் எம தண்டம் என்று அழைக்கப்படுகிறது. அந்த எமதண்டத்தை போல இந்த யோகினியின் கையில் ஒரு தண்டாயுதம் காணப்படுகிறது. யமன் மனிதனின் மூச்சு அடங்கிய பின் அவன் உயிரை பறிப்பார். இந்த யோகினியின் காலடியில் மனிதனின் மூச்சை குறிக்கும் அன்னப்பட்சி இருக்கிறது.
யமன் மனிதனின் பாவங்களுக்கு ஏற்ப தண்டனையை நரகத்தில் வழங்குகிறார். பாவ புண்ணியங்களின் பலனை பழத்தோடு ஒப்பிடுவது வழக்கம். அதாவது வாழ்க்கை என்ற மரத்தில் விளைந்த பாவ புண்ணியங்கள் என்ற பழம். இந்த யோகினி ஒரு பழத்தை , மனிதனின் ஆன்மாவை உணர்த்தும் அன்னப்பட்சிக்கு ஊட்டுகிறாள். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இந்த தேவி எமனின் சக்தியாக இருக்கக்கூடுமோ என்று பலரும் கருதுகிறார்கள்.
எருமையின் முகம் ஏன்?
எருமை தாமச குணத்தை குறிக்கிறது. சோம்பேறித்தனம், அறியாமை போன்றவற்றின் சின்னமாக எருமை விளங்குகிறது. இப்படி அறியாமையின் சின்னமாக விளங்கும் எருமையை தனது முகமாக இந்த யோகினி கொண்டிருப்பதால், அடியார்களின் அறியாமையை நீக்கவும், தாமச குணத்தை வெல்லவும் இந்த யோகினி உதவுகிறாள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
எருமை எப்படி ஒரு குட்டையில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், உறங்குமோ, மனித மனமும், உலக வாழ்க்கை என்னும் குட்டையில், இறை சிந்தனை எனும் மதி மயக்கத்தில் ஆழ்ந்து, தன்னை மறந்து இருந்தால் ஆன்மிக முன்னேற்றம் கிடைக் கிறது என்பதையும் இந்த யோகினியின் முகம் நமக்கு காட்டிக் கொடுக்கிறது.
எருமையின் கருமை நிறம், கால தத்துவத்தை குறிக்கிறது. ஆகவே அது காலனின் வாகனமாக கருதப்படுகிறது. இந்த யோகினியை வழிபடுபவர்களுக்கு காலம் அனுகூலமாக இருக்கும் என்பதை, எருமை முகம் நமக்கு காட்டுகிறது.
காலுக்கடியில் அன்னப்பட்சி ஏன்?
அன்னப்பறவையை வட மொழியில் சொல்லும் போது ஹம்ஸம் என்று சொல்கிறோம். ஹம்ஸம் என்ற வார்த்தை அன்னப்பறவையையும் குறிக்கும், மனிதனின் மூச்சுக் காற்றையும் குறிக்கும். மனிதன் மூச்சு விடுவதை உன்னித்து கவனித்தால், மூச்சை இழுக்கும் போது, ‘‘ஹம்” என்ற ஒலியும், விடும் போது ‘‘ஸ” என்ற சத்தமும் கேட்கும். ஆகவே மனிதனின் மூச்சு ஹம்ஸ என்ற வார்த்தையால் குறிக்கப் படுகிறது. இதை அஜபா காயத்ரி என்றும் சொல்வது உண்டு.
மூச்சை அடக்கி, குண்டலினியை எழுப்பி அந்தப் பயிற்சியில் ஜீவன் சிவனாவதை வாசி யோகம் என்று சொல்கிறோம். இந்த வாசி யோகம் என்ற மூச்சுப் பயிற்சியில் சாதகனுக்கு உதவுவதால் இந்த யோகினிக்கு அன்னப்பறவை அடங்கி இருக்கிறது.அதேபோல அன்னப்பறவை ஞானத்தின் அடையாளம். ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் அது அடக்கத்தோடேயே இருந்தால் தான், அதக்கு அழகு. அதை குறிக்கவே, ஞானத்தின் வடிவமான அன்னம் இந்த யோகினியின் காலுக்கடியில் அடங்கி இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
கையில் கனி ஏன்?
கனியின் உள்ளே இருக்கும், விதையானது அதற்குள்ளே ஒரு பெரும் விருட்சத்தையே கொண்டு இருக்கிறது. அதாவது அந்தக் கனியின் உள்ளே இருக்கும் விதையானது படைப்பின் தத்துவத்தை குறிக்கிறது. அதே சமயம் கனி, நமது பாவ புண்ணிய பலன்களையும் குறிக்கிறது. மொத்தத்தில் நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்தக் கனியை, யோகினி அன்னத்திடம் கொடுப்பதின் மூலம் உயர்ந்த ஆன்மிக ஞானத்தை அடைவதன் மூலம் நாம் பிறவிச்சுழலில் இருந்து விடுபட்டு, முத்தி அடையலாம் என்பதை உணர்த்துகிறாள்.
கையில் இருக்கும் ஆயுதத்தின் பொருள் – ஆயுர்வேதத்தின் தேவி
இந்த யோகினி தனது கையில் தண்டம், அல்லது உலக்கையை போல ஒரு ஆயுதத்தை தாங்கி இருக்கிறாள். உலக்கையும் தண்டத்தையும் கடினமான விஷயங்களை அடித்து நொறுக்க பயன்படுத்துவார்கள். மனிதன் மனதுக்குள் ஆணவம் என்ற கனமான பொருள் இருக்கிறது இல்லையா? அதை அடித்து இந்த யோகினி இல்லாமல் செய்கிறாள். ஞான மார்க்கத்தில் முன்னேற உதவுகிறாள்.
அதே போல ஆயுர்வேதத்தில் மருந்துகளை இடிக்கவும் அரைக்கவும் உதவுவது உலக்கை. இந்த யோகினி கையில் பழத்தையும் உலக்கையையும் கொண்டு இருப்பதால் ஆயுர்வேதத்தில் அதாவது மருத்துவத்தில் உதவும் யோகினியாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
லலிதாசனம் ஏன்?
இந்த தேவி ஒரு காலை மடித்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி சிம்மா சனத்தில் அமர்ந்திருக்கிறாள். இந்த தேவியின் தொங்கும் திருவடி, பூமியில் அனைத்து விதமான போகங்களையும், மடித்த திருவடி, முக்தி இன்பத்தையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் இந்த யோகினி இக பர சௌபாக்கியம் தரும் யோகினியாக கருதப்படுகிறாள்.
ரகசியமான மந்திர சாஸ்திரங்களின் தேவி
இந்த தேவி தந்திர சாஸ்திரங்களின் தேவியாக கருதப்படுகிறாள். அதிரகசிய சக்திகளை அடையவும், சித்திகளை அடையவும் இந்த தேவியை பூஜிக்கிறார்கள்.
ஜி.மகேஷ்
