குணங்களுக்குள் அகப்படாத நிர்குணமானவள்

144-நித்யமுக்தா, 145-நிர்விகாரா, 146-நிஷ்ப்ரபஞ்சா, 147-நிராச்ரயா, 148-நித்ய சுத்தா, 149-நித்யபுத்தா, 150-நிரவத்யா, 151-நிரந்தரா.

லலிதா சஹஸ்ரநாமத்தில் நிர்குண உபாசனையைக் காட்டும் நாமங்களை பார்த்துக் கொண்டே வருகிறோம். எதனால் நிர்குணம் என்று சொல்கிறோமென்று சில விஷயங்களை முன்னுரையாக பார்த்து விட்டால் இந்த நாமங்களின் பொருளைப் பார்க்கலாம்.

அது எந்த சம்பிரதாயமாவது இருக்கட்டும். இந்த ஜீவனானது கட்டுப்பட்ட நிலையை பந்த நிலை, பிரதிபந்தம் என்று சொல்கிறோம். இந்த பந்த நிலையிலிருந்து முக்தி நிலையை அடைய வேண்டும். அதற்கு, நாம் முக்தி, மோட்சம், பரமபதம் … என்று என்னென்ன பெயரில் அழைத்தாலும் ஒன்றுதான். இறுதியாக எல்லா சம்பிரதாயமும் உரக்கச் சொல்வது என்னவெனில், தன்னுடைய மூல நிலையை, உண்மையான நிலையை அடைய வேண்டும். அது எப்படி என்பதில் மாறுபடும். அது கைலாசமோ, வைகுண்டமோ, புரமோ என்றெல்லாம் பேசுகின்றது. இதில் எந்தக் குழப்பமும் வேண்டாம். எல்லா சம்பிரதாயங்களும் சொல்கின்ற அந்த மேலான நிலை ஒன்றுதான். அந்த முக்த நிலை, விடுதலை என்பதுதான் இறுதியானது.

இப்போது ஏன் ஒரு ஜீவன் விடுதலையை விரும்ப வேண்டும்? ஏனெனில், அது அனுபவிக்கின்ற துன்பத்திலிருந்து வெளியேறுவதற்காக விரும்புகிறது. சிறிய உயிரினமான, மரம், செடி, கொடி என்று தொடங்கி மனிதர்கள் மற்றும் தேவர்கள், அசுரர்கள் வரையிலும் விடுதலையை விரும்புகிறார்கள். பண்டாசுரன் என்பவன் துன்புறுத்தியதால்தான் அம்பிகையை வேண்டுகிறார்கள். சரி, துன்பத்திலிருந்து விடுதலை அடைய வேண்டுமென்பது நியாயமே! ஆனால், இந்தத் துன்பத்தின் விடுதலையை ஜீவன் தவறாக இன்பம் என்று நினைக்கிறான். இன்னும் சொன்னால் ஒரு pain, வலியிலிருந்து விடுதலை அடைந்தாலே போதும். இன்பம் என்று நினைக்கிறான். இது தற்காலிகமானது. ஏனெனில், இந்த ஜீவனுடைய சொரூபமே இன்ப மயமானது. பேரின்பமானது. எல்லைகளை கடந்த முடிவில்லாதது. ஆனால், இந்தச் சிறிய துக்கம் போனவுடனேயே அதை விடுதலையாக உணர்கிறான். ஆனால், மீண்டும் துன்பம். அடுத்து ஒரு இன்பம். இப்படியே மாறிமாறி சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான்.

இப்போது இதற்கெல்லாம் காரணம் அவன் சொரூபத்தை மறந்ததுதான். அப்படி மறந்து போனதற்கு காரணம், தான் தனியாகவும் பிரபஞ்சத்தை தனியாகவும் பார்க்கும் அறியாமை. துவைத பாவம். இப்போது பிரபஞ்சம் இல்லையெனில் அவன் சொரூபத்தில் தோய்ந்திருப்பான். இப்போது தன்னை தனி ஜீவனாக நினைத்துக் கொண்டிருக்கும் வரை இந்தப் பிரபஞ்சம் இருக்கும். இப்போது பிரபஞ்சமும் ஜீவனும் relate ஆகும்போதுதான், நமக்கு எல்லாமும் புரியத் தொடங்கும். இந்த relationship ஐத்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார். பாபா ரிணானுபந்தம் என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது எப்படி இவன் துன்பத்தை இந்த பிரபஞ்சத்தில் அனுபவிக்க ஆரம்பித்தான்? இந்தப் பிரபஞ்சத்தில் அனாதி கர்ம வாசனையினால் மூல அஞ்ஞானத்தினால், இன்பம் – துன்பம். அறிவு – அறியாமை எல்லாவற்றையும் அனுபவிக்கிறான். அவன் இந்தப் பிரபஞ்சத்தினுடைய மாற்றங்களிலிருந்து விடுபட வேண்டுமென்று நினைக்கிறான். ஆனால், விடுவிப்பதற்கு வழி தெரியவில்லை. ஏன் தெரியவில்லை. ஏனெனில், இந்தப் பிரபஞ்சத்தை அவன் கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டான். பிரபஞ்சமும் அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டது. தெரிந்தோ தெரியாமலோ அவனுக்கு ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் இந்த பிரபஞ்சத்திலேயே தேடிப் பழக்கப்பட்டு விட்டான்.

ஒருவன் காட்டில் சிக்கிக் கொண்டு விட்டான். அவன் அந்த காட்டை விட்டு வெளியே வரவேண்டுமே தவிர, அங்கேயே இருக்கக் கூடாது. உதாரணமாக, அவனுக்கு பசி என்கிற துன்பம் வந்தால், இரண்டு பழத்தைப் பறித்து பசியை தணித்துக் கொள்கிறான். தாகம் எடுக்கிறது. காட்டிற்குள்ளேயே நீரை அருந்தி விட்டு தாகத்தை தணித்துக் கொள்கிறான். வெய்யில் அடித்தால், காட்டின் நிழலிலேயே ஒதுங்குகிறான். சின்னச் சின்ன விஷயங்களுக்காக, அந்தக் காட்டுக்குள்ளேயே தன் எல்லா தேவைகளையும் தீர்த்துக் கொள்கிறானோ…. அப்போதைக்கு தேவையானதை கிடைத்து விட்டால் அங்கேயே கிடக்கிறான்.

இதைத்தான் இந்த ஜீவாத்மா செய்து கொண்டிருக்கிறது. இதற்குரிய எல்லா தீர்வுகளையும் இது பிரபஞ்சத்திலேயே தேடுகின்றது. இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக இந்த பிரபஞ்சத்தில் சிக்கிக் கொள்கிறான்.ஆனால், இவனுடைய இந்த சொரூப நிலை. சுத்தமானது. சொரூப நிலை ஞானமாகும். அது என்னவென்று தெரியாமலேயே இருக்கிறான். இருமை, மும்மை, பன்மை என்று சிக்கிக் கொண்டு விட்டான். தன்னைத்தானே அசுத்தமென்று நினைத்தும், கீழான வஸ்துவாக எண்ணியும் கொள்கிறான். இப்படி நினைத்துக் கொள்வதால் அவனுடைய உண்மையான அறிவு மறைக்கப்படுகிறது. மீண்டும் அஞ்ஞானத்தில் சிக்கிக் கொள்கிறான். இதனால், தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

இப்படி தொடர்ந்து துன்பத்தை அனுபவிப்பதால், எல்லாமே அழியப்போவதுதானே இதில் எதைப்போய் சாதிக்கப் போகிறோம். இது ஞானத்தினால் வருகின்ற துறவு நிலையல்ல இது. இங்கு அவனுக்கு அதாவது ஜீவனுக்கு ஒரு சலிப்பு தட்டிவிடுகின்றது. அந்த சலிப்பினால் தன்னை ஒரு அழிவுள்ள பொருளாக, எல்லாவற்றையும் சேர்த்து அழிவுக்கு உட்பட்ட பொருளாக நினைத்துக் கொள்கிறான். இதுதான் ஜீவாத்மா மாட்டிக் கொண்டிருக்கக் கூடிய நிலையாகும்.

இப்போதுதான் இந்த ஜீவாத்மா இந்த நிலையிலிருந்து விடுபட வேண்டுமென்றால், ஜீவாத்மா பரமாத்மாவை பார்க்கிறது. பரமாத்மா சகுண ரூபத்தில் வந்து ஜீவாத்மாவிற்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்கிறது. ஒரு உருவத்தோடு வருகின்றது. ஒரு நாமத்தோடு வருகின்றது. எல்லாவற்றையும் செய்கிறது. குருவாகவும் வருகின்றது. நம்மைப்போல் மனித ரூபத்திலும் வருகின்றது. இங்குதான் நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது.

எல்லாவற்றையும் செய்கிறது. எல்லாவற்றையும் செய்தபிறகு, தன்னுடைய உண்மையான நிலையை, சொரூபத்தை காண்பிப்பதற்காக அந்த பரமாத்மா தன்னுடைய நிர்குண நிலையை அந்த ஜீவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக் காண்பிக்கத் தொடங்குகிறது. இந்த இடத்தில்தான் நிர்குண உபாசனையினுடைய முக்கியத்துவம் வருகின்றது. நிர்குணம் என்றால் நாம ரூபம் பிரபஞ்சமற்ற நிலை.இன்னொரு கேள்வியும் வரலாம். சகுண உபாசனை இருக்கிறதே… அதுவே போதுமே… சகுண உபாசனையான உருவ வழிபாட்டிலேயே நமக்கு எல்லாமும் கிடைத்து விடுகின்றதே! நாம் ஏன் நிர்குணம் என்கிற விஷயத்திற்கு போக வேண்டும்.

இந்த இடத்திலிருந்துதான் நாம் இந்த நாமங்களை பார்க்க வேண்டும். நித்யமுக்தா, நிர்விகாரா, நிஷ்ப்ரபஞ்சா, நிராச்ரயா, நித்ய சுத்தா, நித்யபுத்தா, நிரவத்யா, நிரந்தரா… என்று எட்டு நாமங்கள் வருகின்றன.மேலே நாம் விவரித்த விஷயத்தின் விடைதான் இந்த நாமங்கள்.
(சுழலும்…)

Related Stories: