ஜோதிடத்தில் ஐந்தாம் பாவம் (bhavam) அதாவது தன்மை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது மனிதனின் பூர்வ புண்ணியம், அறிவுத்திறன், சிந்தனை, கல்வி, கலைநயம், காதல் மற்றும் பிள்ளைகள் ஆகியவற்றைக் குறிக்கும் முக்கியமான பாவமாகும். ஒருவரின் வாழ்க்கையில் அவர் அடையும் புகழும், மனநிலையும், புத்திசாலித்தனமும் இந்தப் பாவத்தின் நிலையைப் பொறுத்தே பெரிதும் அமைகிறது.
ஐந்தாம் பாவாதிபதி (பூர்வ புண்ணியாதிபதி) லக்கினத்தில் (1-ஆம் இடம்) இருப்பது ஒரு மிகச்சிறந்த ராஜயோக அமைப்பாகும். இது ஜாதகரை அறிவாளியாகவும், பூர்வ புண்ணிய பலம் மிக்கவராகவும், அதிர்ஷ்டசாலியாகவும் மாற்றும். இவர்களுக்கு புத்திர பாக்கியம் சிறப்பாக அமையும், பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நன்மைகளும் கிடைக்கும். பிள்ளைகள் அரசாங்க வேலை அல்லது நல்ல நிலைமையில் இருப்பார்கள். லக்கினத்தில் 5-க்குடையவர் இருக்கும்போது, ஜாதகர் நேர்மையானவராகவும், மற்றவர்களுக்கு உதவும் குணமுடையவராகவும் இருப்பார். குலதெய்வ அருள் நிறைவாக இருக்கும். ஐந்தாம் அதிபதி லக்கினத்தில் இருக்கும்போது, அவர் ஆட்சி, உச்சம் அல்லது நட்பு வீடுகளில் இருப்பது அதிக சுப பலன்களைத் தரும். அதே சமயம், நீசம் அல்லது பாவ கிரகங்களுடன் இணைந்திருந்தால் பலன்கள் மாறுபடலாம்.
ஜோதிடத்தில், 5-ஆம் பாவம் (பூர்வ புண்ணியம், புத்திர ஸ்தானம், அறிவு) 2-ஆம் பாவத்துடன் (தனம், வாக்கு, குடும்பம்) தொடர்பு கொள்ளும்போது, இது சிறந்த தனயோகம், அறிவார்ந்த செல்வச் சேர்க்கை, மற்றும் குழந்தை பாக்கியம் மூலம் அதிர்ஷ்டத்தை அளிக்கும். இவர்களின் தசை நடக்கும்போது பணப்புழக்கம் அதிகமாகி, கோடீஸ்வர யோகம் கூட கிடைக்க வாய்ப்புள்ளது. பூர்வ புண்ணிய பலன்களால் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பங்குச் சந்தை, முதலீடுகள், அல்லது அறிவு சார்ந்த தொழில்களில் (5-ஆம் பாவம்) பெரும் தனலாபம் (2-ஆம் பாவம்) கிடைக்கும். புத்திர ஸ்தானம் (5) குடும்ப ஸ்தானத்துடன் (2) இணைவதால், வம்ச விருத்தி மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
ஐந்தாம் பாவம் மூன்றாம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும்போது, நினைவாற்றல், எழுத்துத் திறன், பேச்சுத்திறன் போன்றவை அதிகரிக்கும். புதிய சிந்தனைகள், கற்பனைத் திறன் ஆகியவை வெளிப்படும். உதாரணமாக கும்ப லக்கினத்தில் புதன் மற்றும் சூரியன் லக்னத்தில் இருந்தால், எழுத்து மற்றும் அறிவுத் துறைகளில் சிறந்த முன்னேற்றம் காணலாம். ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு உண்டு. ஐந்தாம் பாவம் நான்காம் பாவத்துடன் இணைந்தால் கல்வி மற்றும் ஆசிரியர் தொழிலில் ஈடுபட வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் நிலையான வீடு, வசதி போன்றவையும் கிடைக்கும். இது அறிவைப் பகிரும் பணிக்கான நல்ல அமைப்பாகக் கருதப்படுகிறது.
ஐந்தாம் பாவம் தன்னுடன் தானே இணைந்தால், அது மிகுந்த பூர்வ புண்ணியத்தைக் குறிக்கும். இத்தகையவர்கள் எதிலும் வெற்றி பெறுவார்கள். புகழும் செல்வாக்கும் இவர்களுடன் இருக்கும். வாழ்க்கையில் தடைகள் இருந்தாலும் அவற்றை எளிதாக கடந்து செல்வார்கள். ஒரு விருச்சிக லக்கின ஜாதகம். 2,5க் குரிய குரு ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். தன்னுடைய சொந்த நட்சத்திரமாக பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். குருவுக்கு பூரண பலம். இந்த ஜாதகருக்கு நிர்வாகத் திறனும் செயல் திறனும் அதிகம். பிறக்கும்போதே வசதியான குடும்பத்தில் பிறந்தார்.. பெரும்பணம் இவருக்கு இருந்தது. உயர்ந்த கல்வியைப் படித்தார்.
இரண்டு கோயில்களுக்கு தர்மகர்த்தாவாக இருக்கிறார். ஊரில் செல்வாக்கு அதிகம். காரணம் இங்கே இரண்டாம் இடமாகிய தன குடும்பமும், ஐந்தாம் இடமாகிய பூர்வ புண்ணியமும், இணைந்து, ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் கிடைத்த அற்புதமான பலன்கள் என்று சொல்லலாம்.பூரட்டாதி நாலாம் பாதம் என்பதால், (மீனம்) அம்சத்திலும் குரு உச்சம் பெறுவர். ஆறாம் பாவத்துடன் ஐந்தாம் பாவம் தொடர்பு கொள்ளும் போது வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால், குழந்தைகள் தொடர்பாக சில கவலைகள் ஏற்படலாம். கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கம் இருக்கும். ஆனால், அதைப் பற்றிய கவலை அதிகமாக இருக்காது. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மலர்ச்சியோடு இருப்பார்கள். இது வாழ்க்கையில் சவால்களும் பொறுப்புகளும் கலந்து இருக்கும் நிலையைக் காட்டுகிறது.
ஐந்தாம் பாவம் ஏழாம் பாவத்துடன் இணைந்தால் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. நல்ல துணைவரும் கிடைப்பார். பொதுவாழ்க்கையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். மக்கள் தொடர்பு மற்றும் சமூக வாழ்வில் முன்னேற்றம் காணலாம். நட்பு வட்டாரம் அதிகம் இருக்கும். திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். இதில் திருமணப் பொருத்தம் என்று சொன்னது, வெறும் ஜாதகப் பொருத்தம் மட்டுமல்ல; மனப் பொருத்தமும் முக்கியம். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சரியான பொருத்தம் இல்லாவிட்டால் மனைவியை மறந்து விட்டு நட்பு வட்டாரங்களிடத்திலேயே அதிக நேரம் செலவழித்து குடும் பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். ஐந்தாம் பாவம் எட்டாம் பாவத்துடன் தொடர்பு ஏற்பட்டால் அதிர்ஷ்டமும் சோதனைகளும் இணைந்து வரும். வாழ்க்கையில் உயர்வுகளும் தாழ்வுகளும் மாறி மாறி நிகழும். குறிப்பாக குழந்தைகள் தொடர்பாக மனவருத்தங்கள் ஏற்படலாம்.
உதாரணமாக, கும்ப லக்கினத்தில் ஐந்தாம் மற்றும் எட்டாம் பாவ அதிபதி யான புதன் லக்னத்தில் இருந்தால், பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி இருந்தாலும் வாழ்க்கையின் மற்றப் பகுதிகளில் கவலைகள் இருக்கும். பிள்ளைகளின் திருமணம் தாமதமாகலாம், நல்ல வேலை கிடைப்பதில் தடை இருக்கலாம், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மனஅழுத்தம் அதிகரிக்கலாம்.
ஒன்பதாம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் உயர்ந்த கல்வி மற்றும் சேவைத் துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். மருத்துவர் போன்ற தொழில்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு. கோயில், தர்மம், பூஜை போன்ற ஆன்மிக செயல்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும். செல்வச் சேர்க்கையும் ஏற்படும். பத்தாம் பாவத்துடன் இணைந்தால் தொழிலில் முன்னேற்றம் எளிதாக கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் போன்ற துறைகளில் லாபம் காணலாம். கலை மற்றும் விளையாட்டு துறைகளிலும் ஆர்வம் இருக்கும். ஆனால், குழந்தைகள் தொடர்பாக கவலைகள், கல்விக்காக கடன் எடுக்கும் நிலை, அவர்களால் கட்டுப்பாடு இல்லாமை போன்ற சிக்கல்கள் தோன்றலாம். சில நேரங்களில் உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படலாம்.
பதினொன்றாம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் தலைமைத் திறன் அதிகரிக்கும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி பெறுவார்கள். வயதான காலத்திலும் கல்வி தொடரும் மனப்பாங்கு இருக்கும். ஆனால், பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம்.பன்னிரண்டாம் பாவத்துடன் இணைந்தால் வெளிநாடு அல்லது வெளியூரில் வெற்றி கிடைக்கும். பல்வேறு வழிகளில் வருமானம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் ஏற்படும். ஆனால், உள்ளூரில் பிரச்சனைகள் மற்றும் குழந்தைகள் தொடர்பான கவலைகள் தொடரும்.
மொத்தத்தில், ஐந்தாம் பாவம் நல்ல நிலையில் இருந்தால் அறிவு, கல்வி, பிள்ளைப் பாக்கியம் மற்றும் புகழ் அனைத்தும் கிடைக்கும். ஆனால் அது ஆறாம், எட்டாம், பன்னிரண்டாம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால் சவால்களும் மனஅழுத்தங்களும் அதிகரிக்கும். எனவே, ஐந்தாம் பாவத்தின் நிலை ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையும் மனநிலையையும் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகும்.
