ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியகோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார். தினமும் பார்ப்பதுதான் என்றபொழுதும், ஒவ்வொரு நாளும் அந்தக் கோபுரம் ஒரு செய்தியைச் சொல்லும். என் உயரத்தை மெச்சினால், அதற்கு அஸ்திவாரத்தின் உறுதி காரணம். என் வடிவழகை மெச்சினால், அதற்கு உள்ளே குடிகொண்டுள்ள வட பெருங்கோவிலுடையான் காரணம். என்ற அன்றையச் செய்தியை உள்வாங்கினார்.
விஷ்ணுசித்தர் என்ற இட்ட பெயர், விஷ்ணுவின் மேல் சித்தம் வைத்ததன் மூலம் காரணப் பெயரானது. விஷ்ணுவின் சித்தத்திலும் அவர் இருந்தாரென்பது, அந்தப் பெயரை இன்னும் விசேஷமாக்கியது. கலியுகத்தின் நாற்பத்தியேழாம் ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில், உருத்ரோதன வருடம் ஆனி மாதம் சுக்லபட்சம் ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். வேதியர் குலத் தம்பதி முகுந்தாசார்யாரும் பதுமையாரும் அவரது பெற்றோர்கள்.
அன்றும் வழக்கம்போல், அவரே அமைத்த நந்தவனத்திற்குச் சென்றார். நறுமண மலர்களைக் கொய்தார். பின், மண்டபத்தில் ஒரு தூணில் சாய்ந்துகொண்டு மாலைகள் தொடுக்க ஆரம்பித்தார். ‘நாராயணா’ எனும் நாமம் உரைத்தபடி அவர் அமர்ந்திருந்த திருக்கோலம் அருகிலிருந்த அவர் துணைவியை நெகிழச் செய்தது.
‘என்ன இன்று புதிதாகப் பார்ப்பது போல என்னைப் பார்க்கிறாய்!’
கேள்வி கேட்ட விஷ்ணு சித்தரை, மெலிதான புன்னகையுடன் அவரின் பாதம்தொட்டு, தன் தலையில் அவர் துணைவி ஒற்றிக் கொண்டார்.
‘அந்தப் பரமனே உங்களை அணுக்கமாக்கிக் கொண்டுள்ளார். உங்களுக்கு அணுக்கமானவளாக நான் இருப்பதை எண்ணி, வியந்து, மகிழ்ந்து உங்களைப் பார்த்தேன்.
மாலைகளைத் தொடுக்கும் இந்தப் பணியை நாங்கள் செய்ய மாட்டோமா?’
‘ஒரு செய்தி சொல்லட்டுமா? நம் பெருமாளிடம் அவருக்குப் பிடித்த கைங்கர்யம் எது? என்று பிராட்டியார் வினவினார். அதற்கு நம்பிரான், மலர்ச்செடிகளைக் கொண்டு நந்தவனம் அமைத்து, அந்த மலர்களைத் தானே தொடுத்து, தனக்குச் சாற்றும் கைங்கர்யம்தான் தன் மனதிற்கு நெருக்கமானது என்றிருக்கிறார். அது மட்டுமல்ல. இந்த மலர்களின் வாழ்வு ஒருநாள்தான். அதற்குள் அவை மலர்ந்து, மணம் வீசி, பெருமாளைச் சேர்ந்து நம் பிரார்த்தனைகளைச் சேர்ப்பித்து மறைகிறது.’ அவர் சொல்வதை மலர்களும், உள்ளே சயனத்திலிருந்த வட பெருங்கோவிலுடையானும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சந்நதியிலிருந்த பட்டர் விஷ்ணுசித்தரை அழைத்தார். ‘வாரும்! வாரும்! ‘பல்லாண்டு பல்லாண்டு’ எனப் பாசுரம் பாடும். நாலாயிரம் பாசுரங்களுக்கும் முதல் பாசுரம் நீவிர் இயற்றியது! எல்லா திவ்யதேசங்களின் பெருமாள்களுக்கும் என்றும் முதலில் பல்லாண்டு பல்லாண்டு’ எனத் துதித்துதானே திருவாராதனையைத் தொடங்குகிறார்கள்.’ கண்களில் நீர்பனிக்க, தொடுத்த மாலைகளைக் கையில் ஏந்தி, விஷ்ணுசித்தர் சந்நதியை அடைந்தார். பட்டர், ஒவ்வொரு மாலையாக வட பெருங்கோவிலுடையானுக்குச் சூட்டினார். விஷ்ணுசித்தர் தீர்க்கமான குரலில் பாசுரம் பாடத்தொடங்கினார். பெருமாள், பாசுரங்களைப் போன்ற மலர்மாலைகளின் மணத்தையும், மலர்களைப் போன்ற பாசுரங்களின் நயத்தையும், ஒன்றாய் ரசித்து லயித்தார்.
‘`பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூ றாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு’’
பாசுரங்கள் தொடர்ந்தன. அங்கு கூடியிருந்த அடியவர்கள் அனைவரும் மெய்மறந்து வழிபட்டார்கள். பாடி முடித்து, விஷ்ணுசித்தரும், அவர் துணைவியாரும் புறப்பட்டார்கள்.
அதன்பின், அடியவர்கள் பட்டரிடம் ‘பல்லாண்டு’ பாசுரம் பிறந்த கதையைக் கூறுமாறு கேட்டார்கள். பட்டர், ‘நான் செய்த பாக்கியம்!’ என்றபடித் தொடங்கினார். அடியவர்கள் கைகுவித்து ‘கோவிந்தா’ என்றபடித் தயாரானார்கள். சயனித்திருந்த வட பெருங்கோவிலுடையானுக்கும், பிராட்டிகளுக்கும் சந்தோஷம் பொங்கியது. இது தன் கதையென்பதால் அரங்கனும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.
“பாண்டிய மன்னன் வல்லபதேவன் ஒரு நாள் இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றார். ஒரு திண்ணையில் அமர்ந்திருந்த புதியவனைக் கண்டார். அவனை விசாரிக்கையில், தான் காசியிலிருந்து யாத்திரை வந்த அந்தணன் என்றுரைத்தான். அவனின் தெய்வீகத் தோற்றம், கண்களின் தீட்சண்யம், அவன் குரலில் இருந்த மென்மை அரசரைக் கவர்ந்தது. தனக்கு ஏதேனும் அருள் வார்த்தைகள் வழங்க வேண்டினார்.
அவன் கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் கூப்பியபடி, ‘மழைக்காலத்தின் தேவையை மற்ற மாதங்களிலும், இரவின் தேவையை பகலிலும், முதுமையின் தேவையை இளமையிலும் என்பதுபோல மறுமையின் தேவையை இம்மையிலேயே தேடிச் சேர்க்கவேண்டும்,’ என்று கூறிவிட்டு கண்திறந்தார்.அரசர் அவனை வணங்கி விடை பெற்றார்.
நடந்த நிகழ்வைத் தன் குலகுருவான செல்வநம்பியிடம் விவரித்தார்.‘நாம் எல்லாவற்றையும் அடைந்திருக்கிறோம். அந்தக் காசி அந்தணன் குறிப்பிட்ட, மறுமைக்குச் செய்ய வேண்டியதைத் தொடங்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.’‘நல்லது. சான்றோர்களைக் கூட்டி, அவர்களிடம் மறுமைக்குச் செய்யவேண்டியவைகள் என்ன? என்ற கேள்வியை முன் வைப்போம். தகுந்த பதிலுக்குப் பொற்கிழி பரிசளிப்போம்.’அரசர் ஒப்புதல் அளிக்க, இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. நம் விஷ்ணுசித்தரும் இதை அறிந்தார். போட்டிக்கான நாளும் குறிப்பிடப்பட்டது. போட்டியின் முதல் நாள் இரவில் நம் விஷ்ணுசித்தரின் கனவில் எம்பெருமான் தோன்றினார்.
‘கிழியை அறுத்து வென்று வா’ என்றுரைத்தார்.‘எனக்கென்ன தெரியும்? அது வேதாந்தத்தில் பரமான சான்றோர்களுக்கான போட்டி.’ ‘நான்தானே உன்னிலிருந்து உரைக்கப் போகிறேன். நீ கிளம்பு!’ உத்தரவு போலவே அமைந்த அந்த வாசகத்தைக் கேட்டு நம்மவர், பாண்டிய மன்னன் அவையை அடைந்தார். அங்கே ஆன்றோர்கள் நிரம்பியிருந்தனர். எல்லோரும் இவரின் உருவத்தைக் கண்டு, ‘இவராவது, வெல்வதாவது?’ என்று மனதில் நினைத்தார்கள்.
மறுமைக்குத் தேவையான மார்க்க தரிசனம் காட்ட வேண்டும் என செல்வநம்பி கைகூப்பி வேண்டினார். நம் விஷ்ணுசித்தர் கண்களை மூடி, நாராயணனை மனதில் நிறுத்தினார்.
நாராயணன், விஷ்ணுசித்தர் மனதில், ஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண மேற்கோள்களால் விளக்க, ஒவ்வொரு வாக்கியமாய் அருளினார். அதை ஒரு குழந்தை ஒப்புவிப்பதுபோல, விஷ்ணுசித்தர் உரைத்தார். ஶ்ரீமந்நாராயணனே எல்லோருக்கும் தலைமையான கடவுள் என திடமாய்ச் சூளுரைத்தார்.
கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. மன்னனும் பொருள் புரிந்து திகைத்தார். அதே நொடியில், கிழிகட்டிய தோரணமானது, விஷ்ணுசித்தரை வணங்கும் விதமாக வளைந்தது. அவரின் கைகளில் பொற்கிழி தவழ்ந்தது. பாண்டிய நாடே குதூகலித்தது. பாண்டிய மன்னன் பொன்னாடைகள் போர்த்தி, நகைகள் அணிவித்து, விஷ்ணுசித்தரை ஆரத்தழுவினார். ‘பட்டர்பிரான்’ எனப் பட்டயமளித்தார்.யானை மேலேற்றி அம்பாரியில் அமர வைத்தார். “வேதப்பயன் கொள்ளவல்ல மெய்நாவன் வந்தான்“ என்ற விருது ஊதச்செய்தார். தன் பரிவாரங்களுடன், மங்கல வாத்தியங்கள் முழங்க, வேதியர்கள் உடன்வர, நகர்வலம் வந்தார்.
நாடகம் மொத்தமும் நடத்திய நாராயணனுக்கு, அந்தக் கோலாகலத்தை நேரில் காண ஆசை. தேவியர்கள் இருவரும் உடன்வர விழைந்தார்கள். கருட வாகனத்தில் பிராட்டியர்கள் இருவருடன், நாராயணன், விஷ்ணுசித்தருக்குக் காட்சியருளினார்.யானை மேல் அம்பாரி. அம்பாரியின் மேல் நம் விஷ்ணுசித்தர். அவருக்கும் மேலே கருட வாகனத்தில் நாராயணன்.விஷ்ணுசித்தர் தரிசனம் கண்டார்.
கைகூப்பினார். அவருக்கு நாராயணனைப் பார்த்த பரவசத்தைவிட, பரிவு மேம்பட்டிருந்தது. அதனால், அவர் உரைத்தது என்ன தெரியுமா?
‘அச்சச்சோ! நீ ஏன் வந்தாய்?’ என்பதுதான்.‘உனக்குத் தரிசனம் தர! அதற்கும் மேலாக, உன்னை நேரில் கண்டு ஆசி கூற!’
‘என்னைக் கண்டது போதும்.
வைகுண்டம் சென்றுவிடு!’
‘ஏன் இப்படி விரட்டுகிறாய்?’
‘இந்தக் கலியுகத்தில், இப்படியொரு திவ்ய சொரூபத்துடன் வந்திருக்கிறாய்! யார் கண்ணாவது பட்டுவிடப்போகிறது. உலகத்தையே காக்கும் பரம்பொருளான உனக்கு ஒரு துளி துன்பம் என்றால் கூட தாங்கமுடியாது.’நாராயணன் அவரின் பக்தியில் கட்டுண்டான். தேவியர் இருவரும், ‘வரம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. வைகுந்தம் வர வேண்டும் என்ற எண்ணம் கூட இவருக்கு உதிக்கவில்லை. இவருக்கு நம் நாயகன்மேல் என்னவொரு கரிசனை கலந்த பரிவும், பக்தியும். இவருக்கு, நாமெல்லாம் மதிக்கும் வண்ணம், ஒரு உயர்நிலையை அருள வேண்டும்.’ என மனதில் நினைத்தனர்.
விஷ்ணுசித்தர் கைகளைக் கூப்பி, கண்ணீர் மல்க, மனதில் உதித்ததை, வார்தைகளாகக் கோர்த்து, பாசுரங்களாக்கிப் பாடத் தொடங்கினார். யானையின் மேல் அலங்கரிக்கப்பட்ட மாலையில் அமைந்திருந்த மணிகளைத் தட்டி தாளமுண்டாக்கினார்.
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு’’
நூறு, ஆயிரம், கோடி, பலகோடி என்று கணக்கில் அகப்படாத காலம் அந்த நாராயணன் வாழ வேண்டும் என்று பாசுரம் பாடியவர் நம்மவர். பாசுரம் கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர். அந்தத் தருணமே விஷ்ணுசித்தர் ‘பெரியாழ்வார்’ என ஆகிப்போனார். வேதங்களுக்கெல்லாம் “ஓம்’’ எனும் பிரணவம் எப்படி முதலோ, அது போன்றே `‘பல்லாண்டு’’ பாசுரம், நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு முதலானது. வானும் மண்ணும் உள்ளவரையில் நிலைத்து நிற்கும் வரம் பெற்றது. பாசுரம் அதோடு நிற்கவில்லை. பல்லாண்டு வாழ வேண்டியோரின் பட்டியல் தொடர்ந்தது.
“அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’’
பெருமாளுக்காய் பிரார்த்தனை செய்ய அடியவர்கள், வல மார்பினில் உறைகின்ற லட்சுமி, சக்கரம், சங்கு என எல்லோமும் பல்லாண்டு வாழ விழைகிறார்.
“வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து
மண்ணும் மணமும்கொண்மின்’’
– என்று பகவானுக்கு கைங்கரியம் செய்பவர்களை அழைக்கிறார். ‘மண்ணும் மணமும்’ கொண்டு எனில் சுபகாரியங்களைத்தொடங்குகையில், முதல் சடங்கான பாலிகைத் தெளிக்க மண்ணும், சந்தோஷமும் ஒருங்கே கொணரச் சொல்கிறார்.
பல்லாண்டு பாசுரங்கள் ஒவ்வொன்றும் இனிமை. அதிலும்;
“எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே’’
நானும் என் தந்தையும் அவர் தந்தை தந்தை என்று இப்படி ஏழு தலைமுறைகளாக வந்து, முறை முறையாகக் கைங்கர்யங்கள் செய்கின்றோம். திருவோணத் திருநாளில் மாலைப் பொழுதில் அழகியதான நரஸிம்ஹ உருவத்தைக் கொண்டு, தன் எதிரியான ஹிரண்யனை அழித்தவனுக்கு, தன்னுடைய அடியவனுக்காகச் செய்த அந்த செயலினால் ஏற்பட்டச் சோர்வு தீரும்படியாக, காலம் உள்ளவரை பல்லாண்டு பாடுவோம். பல்லாண்டு பாசுரங்கள் இறுதி வரிகள் பாடும்பொழுது, அடியவர்கள், அந்தணர்கள், அரசர் குழாம், பட்டத்து யானை முதல் வானோர் வரை தாளங்களுக்கு ஏற்றபடி ஆடி மகிந்தனர். பாசுரங்கள் முடிந்து, பெற்றுக் கொண்ட வெகுமதிகள் அனைத்தையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயத்தில் சேர்ப்பித்தார். இங்கே நீங்கள் காண்கின்ற அனைத்தும் அவரால் எழுந்ததுதான். பட்டர் சொல்லி முடித்தபின், அனைவரும் ‘பெரியாழ்வார் திருவடி சரணம்’ என கோஷம் எழுப்பி அவருக்காகப் பிரார்த்தித்தனர்.
நாட்கள் கடந்தன. அன்று ஆடிப்பூரம். பெரிய கோயில் முழுமையும் விழாக் கோலம் பூண்டிருந்தது. விடியற்காலைப் பொழுதில், பெரியாழ்வார் பாசுரங்கள் சொல்லியபடி நந்தவனத்தில் மலர்கள் கொய்து கொண்டிருந்தார். அந்த நந்தவனத்தில் நடுவில் ஒரு சிறிய குளம். குளத்தில் தாமரைப் பூக்கள் மலர்ந்திருந்தன. அதையொட்டி ஒரு பெரிய மைதானம் அளவிற்கு துளசி வனம். அதில் இடையிடையே முல்லைக்கொடிகள் படர்ந்திருந்தன.
அந்த துளசிவனத்தின் நடுவிலிருந்த புன்னை மரத்தைத் தொட்டார். அவருக்கு அதைக் கண்ணனாக நினைத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. கண்ணா! கண்ணா! நீ தினமும் ஆயர்பாடியில் லீலை செய்வாயே! இந்த நந்தவனத்திலும் நீ ஏதாவது லீலை செய்ய வருவாய்தானே! பாகவதம் நிகழ்வு ஒவ்வொன்றையும் பாசுரமாக்கி, பாமாலையும் பூமாலையும் சமர்ப்பிக்கிறேன். எனக்குள்ளேயே பேசிப்பேசி, பாடிப்பாடி மகிழ்கிறேன். உன்னை உயிராய் துதிக்கிற, நேசிக்கிற, பிரேமிக்கிற ஒருவருடன் பகிர வேண்டும் என்று ஒரு புதிய வேட்கை மனதுள். என்ன இது இப்படியொரு எண்ணம் புதிதாக? மனதில் தவழ்ந்தது.
பெரியாழ்வாரின் எண்ணம் முழுமையும் கண்ணனே வியாபித்திருந்தான். கனவுமின்றி, முழுமையான நினைவுமின்றி கீழே குனிந்து, துளசியைப் பறிக்கத் துவங்கினார். மெல்லிய சாரல். முல்லை, மல்லிகை, சம்பங்கி, துளசி எல்லாமும் கலந்த ஒரு நறுமணம். திடீரென்று தன் வலக்கரத்தை, ஒரு சிறுமியின் வளைக்கரம் தொடுவதை உணர்ந்தார். பறித்துக்கொண்டிருந்த துளசியுடன், கிழக்கு நோக்கித் திரும்பினார். சூரியனின் உதய கிரணங்கள் அவர் கண்களைக் கூசச்செய்தன.
பொன்னிற வண்ணத்தில், பட்டாடையுடுத்தி நின்றிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்தார். மண்ணில் மண்டியிட்டு அமர்தார். அவர் கண்களும், அந்தச் சிறுமியின் கண்களும் ஒரே நேர் கோட்டில் அமைந்திருந்தன. அவளின் பார்வையில் தெய்வீகம் மிளிர்ந்தது. வட்டமுகம். கரிய விழிகள். சந்தனமும், பொன்னும் கலந்தது போன்ற நிறம். பின்னிய நீண்ட, அடர்ந்த கேசம். காதுகளில் ஆடும் குழைகள். கழுத்தில் ஆரங்கள். உதட்டில் இழையோடிய மெல்லிய புன்னகை. அவள் பாதங்களைத் தொட்டார். கண்களில் ஒற்றிக்கொண்டார். அவரையும் அறியாமல் கைகளைக் கூப்பினார்.
அந்தச் சிறுமியின் தோற்றமும், புன்னகையும் அவரைப் பேசாமல் இருக்கச் செய்துவிட்டது.‘நீ யாரம்மா? எங்கிருந்து வருகிறாய்? உன்னுடன் யாராவது வந்திருக்கிறார்களா? உன் பெற்றோர் யாவர்? நீ எப்படி தனியாக இந்த உதய நேரத்தில் இங்கு வந்தாய்?’ என எல்லாமும் கேட்க நினைத்தார். ஆனால் வார்த்தைகள் எதுவும் வராமல் உறைந்து போனார்.
மீண்டும் ஒருமுறை அந்தச் சிறுமியின் செம்மையான பாதங்களைத் தொட்டார். கண்களில் ஒற்றிக்கொண்டார். ஏன் அப்படிச் செய்கிறோம் என்ற கேள்வியே அவர் மனதில் உதிக்கவில்லை. கண்களில் நீர் பெருகியது. மனது மட்டும் ‘கண்ணா! கண்ணா!’ என்றது. அந்தச் சிறுமியை ஒரு கையில் ஏந்திக்கொண்டும், பறித்த மலர்கள் நிறைந்த குடலையை மற்றொரு கையில் ஏந்திக்கொண்டும், பெரிய கோபுரத்தைப் பார்த்து மானசீகமாக வணங்கினார்.
அவருக்கு இரண்டு கரங்களிலுமே மலர்களை ஏந்துவதாகத்தான் பட்டது. இப்பொழுதுதானே கண்ணா உன்னை வேண்டினேன். எல்லாம் உன் லீலையாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு எந்தக் கேள்வியும் மனதிலில்லை. இவள் என் மகள். இவள் பெயர் கோதை. சந்தோஷம் மனதில் பொங்கப்பொங்க அவளின் வலது காதில் ‘கோதை! கோதை! கோதை!; என உச்சரித்தார். அருகிலிருந்த பவழமல்லிகை மரம் பூக்களைத் தூவியது.
கைகளில் விழுந்த பூக்களைக் கோதை வியந்து பார்த்தாள். அதில் ஒரு பூவையெடுத்து கோபுரத்தை நோக்கி மெலிதாக அர்ச்சனை செய்வது போல வீசினாள்.மிதிலை மண்ணிலிருந்து உதித்த அந்தச் சீதை ஜனகர் மகளானாள்.திருவில்லிப்புத்தூர் மண்ணிலிருந்து உதித்த இந்தக் கோதை இந்தப் பெரியாழ்வாரின் மகளானாள்.பல்லாண்டு! பல்லாண்டு! என்று பாடியபடி, பெரியாழ்வார் அந்தத் தாளகதியில் நடந்தார். கோதையும் அதே தாள கதியில் கைகளைத் தட்ட, பெரியாழ்வார் வியந்து நெகிழ்ந்தார். நடந்த நிகழ்வுகளை துணைவியாரிடம் பகிர்ந்துகொண்டார். பெண்பிள்ளையின் வருகையை பெரும் வரமாகவே, அந்த வடபெருங்கோவிலுடையானின் கொடையாகவே எண்ணிக் கொண்டாடியது.
