நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரி பஸ் நிலையத்தில் புறாக்களை பறக்க விட்டு தூய்மை பணியாளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த தேர்தலில் போது வாக்குசதவீதம் குறைந்த பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிலையில் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டார். அதன் பேரில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ராட்சத கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
மாநகர் நல அதிகாரி டாக்டர் சரோஜா தலைமையில் கொசுஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத கோலம் போட்டனர். மேலும் அதில் வாக்களிப்பது நமது கடமை, 100 சதவீதம் வாக்களிப்போம் என வாசகம் எழுதப்பட்டு இருந்தது. இந்த கோலத்தை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் பார்த்து சென்றனர்.
