ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை: எம்.பி.ரஞ்சன்குமார் அறிக்கை

 

சென்னை: ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.,துறையின் மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சாதி மற்றும் கவுரவத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் தனித்துவமான ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் அவசியம். தற்போதுள்ள வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இத்தகைய தனித்துவமான குற்றங்களைக் கையாள்வதில் போதுமானதாக இல்லை என்பதால், சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய சட்டம் தேவைப்படுகிறது.

குடும்பத்தினரே கொலையாளிகளாக இருப்பதால், சாட்சிகளைப் பாதுகாக்க தனிச் சட்டம் உதவும். அந்த வகையில், ராஜஸ்தானில் அசோக் கெலாவட் தலைமையிலிருந்த காங்கிரஸ் அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. “திருமண விருப்பங்களின் சுதந்திரத்தில், பெருமை மற்றும் பாரம்பரியத்தின் பெயரால் தலையிடுவதைத் தடை செய்யும் சட்டம்” (The Rajasthan Prohibition of Interference with the Freedom of Matrimonial Alliances in the Name of Honour and Tradition Bill, 2019) மூலமாக இந்தியாவில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக முதன்முதலில் தனிச்சட்டம் இயற்றிய மாநிலமாக ராஜஸ்தான் உருவெடுத்தது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுப்பது தொடர்பாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்’ எனப் பரிந்துரை செய்தது. இப்படியொரு சட்டம் இயற்றப்படும் வரையில் ஒன்றிய, மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியது.

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. தனிச்சட்டம் இயற்றப்படுவதற்குச் சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் உள்ளன. இதுதவிர, உயர் நீதிமன்றங்களிலும் பல்வேறு தீர்ப்புகள் வந்துள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்தவராக ஆணும் பிற சமூகத்தைச் சேர்ந்தவராகப் பெண்ணும் இருந்தாலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஒருவேளை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்தால் அதனை எஸ்.சி, எஸ்.டி பிரிவில் கொண்டு வர முடியாது.

காரணம், இந்தப் பிரிவுகளைப் பொறுத்தவரையில் பாதிக்கப்படுகிறவர்கள் எஸ்.சி, எஸ்.டியாக இருக்க வேண்டும். ஆனால், கொலைக்குப் பொதுவான காரணமாக சாதி உள்ளது. சாதி ஆணவப் படுகொலைகள் என்பவை மற்ற கொலைகளிலிருந்து வேறுபட்டவை. இதில் குடும்பத்தினரே கொலையாளிகளாக உள்ளனர். அதனால், ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவைப்படுகிறது. அது ஆணவக் கொலைகளுக்கான தண்டனைச் சட்டமாக மட்டுமல்லாமல், ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டமாகவும் ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணத்தில் இணைந்த, இணைய விரும்பும் இணையர்களைப் பாதுகாக்கும் காப்புச் சட்டமாகவும் இயற்றப்பட வேண்டும்.

இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும். தமிழ்நாட்டில், இத்தகைய கொலைகளைத் தடுக்கும் நோக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஒரு குழுவை நியமித்து, சிறப்புச் சட்டத்திற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் நிறைவேற்றியது போல், தமிழ்நாட்டிலும் ஆணவப்படுகொலை சட்டத்தை நிறைவேற்றும் வாக்குறுதியைத் தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Stories: