நடுக்கடலில் மீன்பிடித்தபோது தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து கைது செய்தது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 346 விசைப்படகுகளுக்கு மீன்பிடி டோக்கன் பெற்று மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இரவில் நடுக்கடலில் மீன்பிடித்தபோது, மன்னார் கடல் பகுதியில் இருந்து ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் வேறு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்குச் சென்ற இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில் சேந்தி ராயப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த மீனவர்கள் ஆரோக்கிய ஆசாத் (36), நிர்மல் (41), கெர்ஷின் ரிசப் (28), நிதிஷ்குமார் (28) ஜான் சிசர்ட் (45), மெல்டன் (36), சுரேஷ் (46), சரவணன் (48), சந்தன மரியான் (43), அரவிந்த் பாண்டி (25) ஆகியோரை சிறைபிடித்து கைது செய்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். நீண்ட நேரம் நடுக்கடலில் வைத்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மீனவர்களை படகுடன் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, மேல் நடவடிக்கைகாக இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மீனவர்கள் மீது எல்லை தாண்டியது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அந்த நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, சிறையில் அடைத்தனர். இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையால், எஞ்சிய ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த அச்சத்துடன் மீன்பிடித்து காலையில் கரை திரும்பினர். இது குறித்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், மரைன் போலீசார் மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தொடர் கைது சம்பவங்கள் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: