போடி: போடி அருகே, சிலமலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், போடி அருகே தேவாரம் சாலையில் உள்ள சிலமலை கிராம ஊராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிமக்கள் விவசாயம், கூலித்தொழில், சிறு தொழில் என வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக சென்று பெருமாள் கோயில் சாலையில் உள்ள மெகா சாக்கடையில் சென்று சேருகிறது.
இந்நிலையில் சிலமலை மெயின் ரோட்டின் தெற்கு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வரையிலான பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி, அப்பகுதியில் வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. நோய்கள் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி தலமாக அப்பகுதி மாறியுள்ளது. மேலும் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலையில் நடந்து செல்வோர் மற்றும் டூவீலர்களில் செல்வோர் மீது கழிவுநீர் சிதறுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, அப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாய் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
