சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில், திமுக கூட்டணி 179 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பிரபல ஊடக நிறுவனமான ஏபிபி நாடு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் 23ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் இறங்கியுள்ளன. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா- ராமதாஸ் என 5முனை போட்டி எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடிக்க திமுகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுகவும் களத்தில் இறங்கியுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏபிபி நாடு என்ற பிரபல ஊடக நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. அதிமுக- பாஜ கூட்டணி அதிகபட்சமாக 50 முதல் 58 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தவெகவுக்கு 6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் 42 சதவீதத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். 30 சதவீதத்துடன் எடப்பாடி பழனிச்சாமி 2ம் இடத்திலும், 24 சதவீதத்துடன் விஜய் 3ம் இடத்திலும் உள்ளனர். மேலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 முதல் 42 சதவீத வாக்குகளை பெறும் என்றும் கணித்துள்ளது. மேலும், அதிமுக-பாஜ கூட்டணி 32 முதல் 35 சதவீத வாக்குகளை பெறும். சென்னை மண்டலத்தில் உள்ள 16 தொகுதிகளில் திமுக கூட்டணி 11 தொகுதிகளை கைப்பற்றும். சென்னையில் அதிகபட்சமாகஅதிமுக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
