கடந்த 2025-26ல் முதல்வர் மருந்தகங்கள் மூலம் 90 ஆயிரம் பேர் பயன்: திமுக அரசுக்கு திண்டுக்கல் மாவட்ட மக்கள் நன்றி தெரிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 31 முதல்வர் மருந்தகங்கள் மூலம் கடந்த ஆண்டு மொத்த விற்பனை ரூ.63 லட்சம் ஆகும். இதில் ரூ.13.23 லட்சம் தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 90 ஆயிரம் பேர் மருந்துகள் வாங்கி பயனடைந்துள்ளனர். குறைந்த விலை முதல்வர் மருந்தகங்களை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2025ம் ஆண்டு ஆக.15ம் தேதி ஜெனரிக் (பொது பெயர் வகை) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

20% முதல் 90% வரை தள்ளுபடி
அந்த வகையில் உயிர் காக்கும் மருந்துகள், மிக பயனுள்ள மருந்துகள் மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் மாநிலம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திறந்து வைக்கப்பட்டன. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சமும், கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2 லட்சமும் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தனிநபர்கள் தொழில்முனைவோராக மாறுவதற்கு அரசின் நிதி உதவி பேருதவியாகவும், டி.பார்ம், பி.பார்ம் உள்ளிட்ட மருந்தாளுநர் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

மாவட்டத்தில் 31 மருந்தகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 31 முதல்வர் மருந்தகங்கள் துவங்கி வைக்கப்பட்டன. இதில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக திண்டுக்கல் சரகத்தில் 12 மற்றும் பழநி சரகத்தில் 9 என 21 முதல்வர் மருந்தகங்கள், தனிநபர் தொழில்முனைவோர் மூலமாக 10 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மருந்து கிட்டங்கியிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 31 முதல்வர் மருந்தகங்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ள மருந்துகளின் மொத்த மதிப்பு ரூ.63 லட்சம் ஆகும். இதில்
ரூ.13.23 லட்சம் தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 90 ஆயிரம் பேர் மருந்துகள் வாங்கி பயனடைந்துள்ளனர்.

குறைந்த விலையில் கிடைக்க வழிவகை
முதல்வர் மருந்தகங்களுக்கான மருந்துகள் கொள்முதல் என்பது மருந்துகள் உற்பத்தி செய்கின்ற இடத்திலேயே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, இடையீட்டாளர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யப்படுவதால் இந்த அளவிற்கு குறைந்த விலையில் மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. சத்து மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளை இந்த முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் வாங்கி பயன்பெறலாம். மருத்துவர் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தப்படும் சில உயிர் காக்கும் மருந்துகள் மட்டும் மருத்துவர் சீட்டு இருந்தால் மட்டும் வாங்கி கொள்ளலாம். குறைந்த விலை முதல்வர் மருந்தகங்களை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: