* அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
* இரு நாடுகளும் பாக்.கில் இன்று பேச்சுவார்த்தை
* மத்திய கிழக்கில் 40 நாள் யுத்தத்திற்கு பிறகு அமைதி
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் 40 நாட்களாக நீடித்த யுத்தத்திற்கு பிறகு திடீர் திருப்பமாக 2 வார கால போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஈரானிய நாகரிகத்தை அழிப்பேன் என மிரட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி கட்டத்தில் பின் வாங்கி தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டார். இதன்படி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானும் சம்மதித்துள்ளது. ஈரானின் 10 அம்ச கோரிக்கையின் அடிப்படையில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் பாகிஸ்தானில் இன்று தொடங்க உள்ளன.
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி திடீரென போர் தொடுத்தன. போரின் முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பல ஈரான் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். பல அரசு அலுவலக கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள், ராணுவ நிலைகள், ஆயுத சேமிப்பு கிடங்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தகர்த்தன. பதிலுக்கு வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் கடந்த 40 நாட்களாக மேற்கு ஆசியா முழுவதும் பதற்றம் நிலவியது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதித்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்களை அழித்து ஈரானிய நாகரிகத்தை அழிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தது உலக நாடுகளை உலுக்கியது. பதிலுக்கு ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க பொதுமக்களே மனித சங்கிலியை நிற்க முன்வந்தனர். இதனால் டிரம்ப் விதித்த இறுதி கெடுவை உலகமே உன்னிப்பாக கவனித்த நிலையில் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் இரு தரப்பிலும் தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, அழிவுகரமான தாக்குதல் முடிவிலிருந்து அதிபர் டிரம்ப் பின்வாங்கினார். அவர் விதித்த கெடுவுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பீல்ட் மார்ஷல் ஆசிம் முனிர் ஆகியோர், ஈரானுக்கு அனுப்ப இருந்த அழிவு சக்தியை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக் கொள்ளும் நிபந்தனையை ஈரானும் ஏற்றுக் கொண்டது. இதனால் ஈரான் மீதான போரை 2 வாரத்திற்கு நிறுத்தி வைக்க ஒப்புக் கொள்கிறேன்’’ என கூறினார்.
டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் 2 வார கால போர் நிறுத்தத்தை உறுதிபடுத்தினார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்களின் தற்காப்பு நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்வோம். 2 வார காலத்திற்கு ஈரான் ராணுவத்தின் ஒருங்கிணைப்பு மூலமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான போக்குவரத்து அனுமதிக்கப்படும்’’ என்றார். லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் உட்பட அனைத்து சண்டைகளும் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்திற்கு ஈரான் சம்மதிக்க பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சி மட்டுமின்றி சீனாவின் மறைமுக அறிவுறுத்தலும் ஒரு காரணமாகும். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஈரானின் அரசு ஆதரவாளர்கள் பொது இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ‘அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம்’ என்று கோஷமிட்டு, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கொடிகளை எரித்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் இன்று முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் குழு நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என அந்நாட்டு அதிபர் பெசேஷ்கியன் உறுதிப்படுத்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் கூறி உள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ‘‘ஈரானியர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக எங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்தால், நம்மால் ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியும். ஆனால் அவர்கள் பொய் சொல்லவோ, ஏமாற்றவோ முயன்றால், அவர்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். இது ஒரு நிலையற்ற போர் நிறுத்தம் என்றே கூறுவேன். ஏனென்றால் ஈரானில் உடன்பாடு ஏற்பட எங்களுடன் இணைந்த பணியாற்றியவர்களும் இருக்கிறார்கள், அதே போல இந்த போர் நிறுத்தம் குறித்து பொய் சொல்பவர்களும் இருக்கிறார்கள்’’ என கூறியிருக்கிறார். போர் நிறுத்தம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் விளக்கம் அளித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், போர் நிறுத்தத்திற்காக ஈரான் அமெரிக்காவிடம் கெஞ்சியதாகவும் இப்போரில் அமெரிக்கா மகத்தான வெற்றி பெற்றிருப்பதாகவும் ஈரான் மீது டிரம்ப் கருணை காட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பல்வேறு முரண்பாடுகள்
* ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் நிறுத்தத்திற்கு உடன்படுவதாக கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தனது சண்டை தொடரும் என கூறியிருக்கிறார். இது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதற்கு முரண்பட்டதாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு லெபனானில் நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா நிலைகளை இஸ்ரேல் தாக்கியதாக தெரிவித்தது.
* ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதிலும் ஈரான் பல நிபந்தனைகள் விதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அது சட்டப்பூர்வமானது என்றும் கூறியிருக்கிறது.
* அமெரிக்கா இதற்கு முன் நிராகரித்த பல விஷயங்கள் ஈரானின் 10 அம்ச திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
* ஈரான் ஒப்புக் கொள்ள மறுக்கும் அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தில் பலவற்றை ஈரான் ஒப்புக் கொண்டிருப்பதாக டிரம்ப் மீண்டும் கூறி வருகிறார்.
* யுரேனியம் செறிவூட்டலை அங்கீகரிக்க வேண்டுமென என ஈரான் வலியுறுத்தும் நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் சண்டையின் போது, புதைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தோண்டி எடுத்து அகற்றுவதற்கு அமெரிக்கா ஈரானுடன் இணைந்து செயல்படும் என்றும் இனி ஈரான் யுரேனியத்தை செறிவூட்டாது என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். இதற்கு ஈரான் எந்த பதிலும் தரவில்லை. இத்தகைய பல்வேறு முரண்பாடுகளுடன் அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் எப்படி நடக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.
* கச்சா எண்ணெய்
விலை உடனடி சரிவு
இரண்டு வார கால போர் நிறுத்த அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சர சரவென சரிந்தது. போருக்கு பின் 100 டாலர்களுக்கும் மேலாக அதிகரித்த கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் ரூ.10,669 என்ற நிலையில் இருந்து 18 சதவீதம் குறைந்து ரூ.8775 ஆக சரிந்தது. அதாவது 95 டாலருக்கும் கீழ் குறைந்தன. இதே போல பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டன.
ஈரானின் 10 அம்ச கோரிக்கைகள்
* இனி அமெரிக்கா, ஈரானை தாக்கக் கூடாது
* ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுப்பாடு தொடரும்
* யுரேனியம் செறிவூட்டலை அங்கீகரிக்க வேண்டும்.
* அனைத்து முதன்மை தடைகளையும் நீக்க வேண்டும்
* அனைத்து 2ம் தர பொருளாதார தடைகளையும் நீக்க வேண்டும்.
* ஐநா பாதுகாப்புச் சபையின் அனைத்துத் தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
* சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
* ஈரானுக்கு போர் சேத இழப்பீடு வழங்க வேண்டும்.
* வளைகுடா பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்.
* ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரானின் ஆதரவு படைகள் மீதான சண்டையையும் நிறுத்த வேண்டும்.
* குவைத், யுஇஏ மீது நீடிக்கும் தாக்குதல்
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின் நிலையங்களை குறிவைத்து ஈரான் டிரோன்கள் தாக்க முயன்றதாக குற்றம்சாட்டி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலும் டிரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன. இதனால் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்திக் கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போல ஈரானின் லாவன் தீவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலும் ஏவுகணை தாக்குதல் நேற்று நடத்தப்பட்டது. இத்தாக்குதலை யார் நடத்தியது என்பது உறுதியாகவில்லை. இது மத்திய கிழக்கில் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
* ஹார்முஸ் ஜலசந்தி இனி இலவசம் அல்ல
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் புதிய பிரச்னை உருவாகி உள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் இந்த நீர்வழிப்பாதை வழியாக நடக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி இனி இலவசமாக இருக்காது என ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் ஈரான் ராணுவத்திடம் அனுமதி பெற்ற பிறகு பாதுகாப்பாக கடக்க அனுமதிக்கப்படும் என்றும் சரக்குகளை பொறுத்து கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஈரான் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு கப்பலுக்கு சுமார் 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.20 கோடி) கட்டணத்தை ஈரான் வசூலிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருநாளைக்கு சுமார் 140 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் நிலையில், இக்கட்டணம் மூலம் ஈரானுக்கு பல கோடி வருமானம் கிடைக்கும். இந்த பணத்தின் மூலம் போரால் ஏற்பட்ட சேதங்கள் சீரமைக்கப்படும் என ஈரான் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பாதையை வழக்கம் போல் இலவசமாக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குரல் கொடுத்துள்ளன.
* பாக். மத்தியஸ்தம் செய்வது ஏன்?
அமெரிக்கா, ஈரானின் பொதுவான நம்பிக்கையான நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. ஈரான் தனது அரபு அண்டை நாடுகளை நம்புவதில்லை. இப்போரில் அரபு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. அதே சமயம், பாகிஸ்தானுடன் ஈரான் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் நெருங்கிய தூதரக உறவை கொண்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், பீல்ட் மார்ஷல் முனீரை தனது அன்பான சகோதரர்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி குறிப்பிடுகிறார். இது இரு நாடுகளின் நட்பை பிரதிபலிக்கிறது.
மேலும் பாலஸ்தீன பிரச்னை காரணமாக இஸ்ரேலுடன் பாகிஸ்தான் எந்த உறவும் வைத்திருக்கவில்லை. இது பாகிஸ்தானை ஈரான் நம்புவதற்கு மற்றொரு காரணமாக உள்ளது. அமெரிக்காவை பொறுத்த வரை கடந்த ஆண்டிலிருந்து பாகிஸ்தான் நெருங்கிய நட்பு நாடாக மாறியிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீருக்கு அதிபர் டிரம்ப் விருந்து வைத்துள்ளார். மேலும் அமெரிக்காவின் சொல் பேச்சை மீறாத நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது. மற்ற வளைகுடா நாடுகளுடனும் பாகிஸ்தான் நல்லுறவை பேணி வருகிறது. எனவே இந்த சண்டையில் ஒரு தீர்வை காண அனைவரையும் ஒன்றிணைத்து அழைத்துச் செல்ல பாகிஸ்தானால் முடியும் என ஈரானும் அமெரிக்காவும் நம்புகின்றன.
* இந்தியா வரவேற்பு
போர் நிறுத்த அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘‘போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம். நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியது போல, மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர பதற்றத்தை தணித்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவை அவசியமானவை. இந்த மோதல் ஏற்கனவே மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக நெட்வொர்க்கை சீர்குலைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இனி தடையற்ற கப்பல் போக்குவரத்தில் சுதந்திரம் ஏற்படும் என நம்புகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது. இதுதவிர, ஈரானில் இன்னும் தங்கியிருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து விரைந்து வெளியேற வேண்டுமென டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கான அவசரகால உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை போலவே ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளும் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளன.
