போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த 10 நிமிடத்தில் இஸ்ரேல் தாக்குதல்; லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை

தெஹ்ரான்: போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த 10 நிமிடத்தில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதனால், லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். பதிலுக்கு வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதித்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்களை அழித்து ஈரானிய நாகரிகத்தை அழிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தது உலக நாடுகளை உலுக்கியது. பதிலுக்கு ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க பொதுமக்களே மனித சங்கிலியை நிற்க முன்வந்தனர். இதனால் டிரம்ப் விதித்த இறுதி கெடுவை உலகமே உன்னிப்பாக கவனித்த நிலையில் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் இரு தரப்பிலும் தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, அழிவுகரமான தாக்குதல் முடிவிலிருந்து அதிபர் டிரம்ப் பின்வாங்கினார். அவர் விதித்த கெடுவுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பீல்ட் மார்ஷல் ஆசிம் முனிர் ஆகியோர், ஈரானுக்கு அனுப்ப இருந்த அழிவு சக்தியை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக் கொள்ளும் நிபந்தனையை ஈரானும் ஏற்றுக் கொண்டது. இதனால் ஈரான் மீதான போரை 2 வாரத்திற்கு நிறுத்தி வைக்க ஒப்புக் கொள்கிறேன்’’ என கூறினார்.

டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் 2 வார கால போர் நிறுத்தத்தை உறுதிபடுத்தினார். அதே நேரத்தல், லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் உட்பட அனைத்து சண்டைகளும் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஈரானின் அரசு ஆதரவாளர்கள் பொது இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் இன்று முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் குழு நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லெபனானுக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் தொடர்பில்லை என்றும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். அதன்படியே வெறும் 10 நிமிட இடைவெளியில் 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது. இதில் 254 பேர் கொல்லப்பட்டனர். 1,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்கள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கான தேடுதல் பணிகளும் நடந்து வருகிறது.

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் இல்லை என சொல்லியே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாகவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

முதலில் நடந்த தாக்குதல் சைடா நகரின் ஒரு கஃபேயை தாக்கியது. அதில் 8 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். மற்றொரு ஏவுகணை பால்பெக்கில் இறுதி சடங்கில் நடந்த இடத்தை தாக்கியுள்ளது. அதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இது பெரும் சேதத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தின. பல இடங்களில், மீட்பு குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டன. இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அவூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த தாக்குதல்களை மிருகத்தனமானது. இன்று, இஸ்ரேல் மீண்டும் தனது ஆக்கிரமிப்பை தொடர்கிறது. அமைதி முயற்சிகளையும் அப்பட்டமாக மீறி, ஒரு மிக பெரிய படுகொலையை செய்கிறது” என்று சாடியுள்ளார். இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால் தற்காலிக போர் நிறுத்தத்திலிருந்து ஈரான் விலக நேரிடும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானை அமெரிக்கா கட்டாயப்படுத்தியதா?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் சமாதானம் செய்பவராக தன்னை முன்னிறுத்த பாகிஸ்தான் முயன்றது. ஆனால், ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு புதிய அறிக்கை, ‘ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் அமெரிக்காவால் வற்புறுத்தப்பட்டதாக குறிப்பிடுகிறது. பாகிஸ்தான் ஒரு நடுநிலையான தரகராக இல்லாமல், மாறாக அமெரிக்கா தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான ஒரு வசதியான வழியாகவே செயல்பட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், அமெரிக்கா நேரடியாக பேசினால் ஈரான் ஏற்காது என்பதால், ஒரு ‘முஸ்லிம் அண்டை நாடு’ என்ற முறையில் பாகிஸ்தானை ஒரு தகவல் பரிமாற்ற கருவியாக அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. அமெரிக்கா தயாரித்த 15 அம்ச போர் நிறுத்த திட்டத்தை ஈரான் அதிபரிடம் கொண்டு சேர்த்த வேலையைத்தான் பாகிஸ்தான் பார்த்தது என்று அந்த அறிக்கை சாடுகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த போர் நிறுத்தத்தை தனது சொந்த முயற்சியால் வந்த பெரிய வெற்றியாக காட்ட முயன்றார். அவர், தனது சமூக ஊடக பதிவில் செய்த பெரும் தவறு, அந்த ஒப்பந்தத்தில் தனக்குள்ள வரையறுக்கப்பட்ட பங்களிப்பையும் அம்பலப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானின் முன்முயற்சி என்று சித்தரித்த ஷரீஃப், தனது பதிவின் மேலே தவறுதலாக ‘‘வரைவு – X குறித்த பாகிஸ்தான் பிரதமரின் செய்தி” என்ற தலைப்பை சேர்த்திருந்தார். போர் நிறுத்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருந்தாலும், டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர். இது ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர இஸ்ரேலுக்கு வழிவகுக்கிறது.

ஈரானுக்கு ராணுவ உதவி அளிக்கும் நாடுகளுக்கு 50 சதவீத வரி: ட்ரம்ப் மிரட்டல்
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளநிலையில் ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் நாடுகளுக்கு 50 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும், இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதில் எந்த விதிவிலக்கும் அளிக்கப்படாது எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் ராணுவ பலத்தை கட்டுப்படுத்தவும், அந்நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதே சமயம், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிட்டால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் மற்றும் வரிகளில் தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கப்பல் செல்ல ஈரான் அனுமதி மறுப்பு
ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தம் கீழ் ஹார்முஸ் நீரிணையில் தினமும் 12 கப்பல்கள் மட்டுமே கடக்க அனுமதிக்கும் என்றும், அதற்கு கட்டணம் விதிக்கும் என்றும் மத்தியஸ்தர் நாடான பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது டிரம்ப் அறிவித்த முழுமையான திறப்பு என்ற கோரிக்கைக்கு முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது. போர் நிறுத்தம் அறிவித்ததில் இருந்து, கடந்த 24 மணிநேரத்தில் ஹார்முஸ் வழியாக வெறும் 4 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தொடரும் கட்டுப்பாடு உலக சந்தையில் புதிய நிச்சயமற்ற தன்மைக்கு தள்ளியுள்ளது.

Related Stories: