ஈரான் மீதான போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமரின் ‘டிராப்ட்’ பதிவால் சர்ச்சை: சமூக வலைதளத்தில் கடும் விவாதம்

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு ராஜாங்க ரீதியிலான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஈரானின் 10 அம்ச கோரிக்கையை ஏற்று, இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா சம்மதித்துள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் தவறுதலாக ‘டிராப்ட் – பாகிஸ்தான் பிரதமர் செய்தி’ என்ற தலைப்புடன் அந்த பதிவு வெளியானது. இதனால் அந்த செய்தி சரிபார்க்கப்படாமல் அல்லது தவறுதலாக பொதுவெளியில் பகிரப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. சிறிது நேரத்திலேயே அந்த பதிவு திருத்தப்பட்டு, ‘டிராப்ட்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அந்த பதிவில், ‘மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழலை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சரியான திசையில் வலுவாக நகர்ந்து வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற ஏதுவாக, காலக்கெடுவை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அதிபர் டிரம்ப் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், ஈரான் சகோதரர்களும் ஒரு நற்செயலாக ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு வார காலத்திற்கு திறந்து விட வேண்டும் என்று பாகிஸ்தான் மனதார கோருகிறது. இப்பகுதியில் நீண்டகால திட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் வகையில், அனைத்து தரப்பினரும் இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. தலைப்பு நீக்கப்பட்ட போதிலும், டிரம்ப் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி குறித்த கருத்துகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

டிஜிட்டல் காலத்தில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி, வரைவு (டிராப்ட்) நிலையிலேயே வெளியானது அந்நாட்டு அரசு அதிகாரிகளின் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியையே காட்டுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related Stories: