சிங்கம்புணரி, ஏப். 7: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் செகுடப்பர் கோயில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் செகுடப்பர் அய்யனார் மற்றும் கருப்ப சுவாமிக்கு பெண்கள் மாவிளக்கு வைத்தும், கரும்பு தொட்டில் எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று மாலை புலி குத்தும் விழா நடைபெற்றது. இதில் குரும்பலூர் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் அம்மன், சிவன் உள்ளிட்ட சுவாமி வேடம், போலீஸ், எமதர்மன், முதியோர் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து கோயில் முன்பு கூடினர்.
பின்னர் புலி வேடமிட்ட நபர் சாமியாட்டத்துடன் செகுடப்பர் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அய்யனார் கோயிலில் பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி புலிக்குத்தும் வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கண்மாய் பகுதியில் உடல் முழுவதும் சேர், சகதிபூசி வைக்கோல் பிரியுடன் புலி ஆட்டத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அய்யனார் மற்றும் சுவாமிக்கு சிறப்பு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. வேண்டுதல் காரணமாக பக்தர்கள் வேடமனிந்து ஆண்டுதோறும் இவ்விழாவில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
