மதுரை அருகே நரசிங்கத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

 

மதுரை, ஏப். 7: மதுரையை அடுத்த நரசிங்கத்தில், முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை அருகே ஒத்தக்கடை நரசிங்கத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 40ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மார்ச் 27ல் முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து மார்ச் 29ம் தேதி கொடியேற்றம் நடந்ததை அடுத்து, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். நேற்று முன்தினம் இரவு மோகன், முத்துப்பாண்டி ஆகியோர் மேளதாளம் முழங்க சக்தி கரகம் எடுத்து நகர்வலம் வந்தனர். நேற்று காலை பக்தர்கள் அம்மனுக்கு பால் குடம், அக்னிச்சட்டி எடுத்தல், வேஷம் போடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, மாலையில் முளைப்பாரி, மாவிளக்கு அம்மன் நகர்வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில இன்று (ஏப்.7) காலை சக்தி கிடா வெட்டி பொங்கல் வைத்தல், முளைப்பாரி கரைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து இரவு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: