மதுரை, ஏப். 7: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயில் காரணமாக புறநகர் பகுதிகளில் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள், வேளாண் பணிகளில் ஈடுபடுவதில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், உச்சி வெயில் நேரத்தில் நெல் அறுவடையை மேற்கொள்ள முடியாமலும் தவிக்கின்றனர்.
இந்நிலையில் தென் தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக வாடிபட்டியில் 5 செ.மீ, சோழவந்தான், மதுரை விமான நிலையம் பகுதிகளில் தலா 2 செ.மீ, மதுரை, தல்லாகுளம் மற்றும் வடக்கு பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவானது. இம்மழை அடுத்த 24 மணிநேரத்திற்கு நீடிக்கும் எனவும், கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
