பழநி, ஏப். 7: பழநி அருகே ஆயக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழநி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் உதயகுமார் (53). நூலகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்ரி. அரசு பள்ளி ஆசிரியை. இருவரும் வீட்டின் முன் கதவை மட்டும் பூட்டிவிட்டு கடந்த ஏப்.3ம் தேதி காரைக்குடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த அரை பவுன் தங்க நாணயம், அரை பவுன் தோடு மற்றும் ரொக்க பணம் ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உதயகுமார் ஆயக்குடி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
