பாங்காக்: மியான்மர் நாடாளுமன்றமானது ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கை நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுத்துள்ளது. மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு ஆங் சாங் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ராணுவ புரட்சியினால் கவிழ்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தினை இரும்புபிடியை போல் வைத்திருந்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் புதிய தேர்தலை நடத்தினார்.
ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேர்தலை எதிர்ப்பாளர்களும் சுயாதீனப் பார்வையாளர்களும் சுதந்திரமானதோ அல்லது நியாயமானதோ அல்ல என்று கருதினார்கள். ராணுவ ஆட்சியை தொடர்ந்து நீட்டிப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனை கருதினார்கள். நாட்டின் புதிய அதிபராக தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஜெனரல் மின் ஆங் கும் ஒருவர்.
ராணுவத்தால் நியமிக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்ததால் அவருடைய வெற்றி ஏறக்குறைய உறுதியாகவே இருந்தது. கீழவை மற்றும் மேலவை உறுப்பினர்களின் மொத்தமுள்ள 584 வாக்குகளில் 429 வாக்குகளை பெற்று மின் ஆங் ஹ்லைங் வெற்றி பெற்றார். அடுத்தடுத்த வாக்குகள் அடிப்படையில் மற்ற இருவரும் துணை அதிபர்களாக பொறுப்பேற்றனர்.
