‘கிரீன் சான்வி’ கப்பல் பாதுகாப்பாக வெளியேறியது; இன்னும் 17 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் தவிப்பு: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே ஈரானின் கடல் எல்லை வழியாக இந்தியாவைச் சேர்ந்த எரிவாயு கப்பல் பாதுகாப்பாக வெளியேறியது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து, பாரசீக வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டதால், இந்தியாவுக்கு வர வேண்டிய எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் அங்கு சிக்கிக்கொண்டன.

இந்தியாவிற்கு தேவையான 90 சதவீத எல்.பி.ஜி. எரிவாயு இந்த கடல் வழியாகவே இறக்குமதி செய்யப்படுவதால், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இந்த இக்கட்டான நிலையில், சுமார் 44,000 டன் எல்.பி.ஜி. எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ‘கிரீன் சான்வி’ என்ற பிரம்மாண்ட கப்பல் நேற்று மாலை ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வெற்றிகரமாக வெளியேறியது. போர் பதற்றம் காரணமாக இந்த கப்பல் சர்வதேச பாதையை தவிர்த்து, ஈரானின் லாரக் – கேஷ்ம் கடல் கால்வாய் வழியாக பயணித்தது.

தான் ஒரு இந்திய கப்பல் என்பதை உறுதிப்படுத்த, ‘இந்திய கப்பல் – இந்திய பணியாளர்கள்’ என்ற வாசகத்தை தானியங்கி அடையாள அமைப்பின் மூலம் அந்த கப்பல் ஒளிபரப்பியது. இதன் மூலம் போர் தொடங்கிய பிறகு பாரசீக வளைகுடாவிலிருந்து வெளியேறிய 7ம் இந்திய கப்பல் என்ற பெருமையை இந்த கப்பல் பெற்றது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் வணிகக் கப்பல்கள் தங்களது கடல் எல்லை வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய கடற்படை மற்றும் தூதரக அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு ‘கிரீன் சான்வி’ கப்பலை பாதுகாப்பாக வெளியேற்றினர். இருப்பினும், இன்னும் 17 இந்திய கப்பல்கள் அங்கேயே சிக்கியுள்ளன. இதில் 2 எல்.பி.ஜி. கப்பல்கள், 4 கச்சா எண்ணெய் கப்பல்கள் மற்றும் ஒரு எல்.என்.ஜி. கப்பல் ஆகியவை அடங்கும்.

மேலும் இந்தியாவுக்கு வர வேண்டிய 10 வெளிநாட்டு கப்பல்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முன்னுரிமை அடிப்படையில் மீட்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தனர். அடுத்தகட்டமாக ‘கிரீன் ஆஷா’ மற்றும் ‘ஜாக் விக்ரம்’ ஆகிய கப்பல்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் நிலவும் இந்த பதற்றமான சூழலில், இந்திய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ஒன்றிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சீனாவை நோக்கி சென்ற இந்திய கப்பல்;
ஈரானின் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு ‘பிங் ஷுன்’ என்ற கப்பல் (சுமார் 6 லட்சம் பேரல்) இந்தியா நோக்கி வந்தது. இந்த கப்பல் குஜராத் மாநிலம் வாடினார் பகுதிக்கு வருவதாக சிக்னல் காட்டியபடி வந்துகொண்டிருந்தது. ஆனால், இந்திய கடற்பகுதியை நெருங்கிய நிலையில், நேற்று திடீரென தெற்கு நோக்கி திரும்பி, சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள டோங்யிங் நோக்கி பயணத்தை மாற்றியது. கப்பல் திடீரென பாதை மாற பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்னையே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வர்த்தக வட்டாரங்கள் கூறுகையில், ‘வழக்கமாக வழங்கப்படும் 30 முதல் 60 நாட்கள் கடன் கால அவகாசத்தை தவிர்த்துவிட்டு, உடனே பணத்தை செலுத்த வேண்டும் என்று விற்பனையாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். பொருளாதாரத் தடையால் ஏற்கனவே அச்சத்தில் இருந்த இந்திய நிறுவனங்கள், இந்த நிபந்தனையால் பின்வாங்கின. மேலும், தற்காலிக அனுமதி இருந்தாலும், தடை செய்யப்பட்ட கப்பலை கையாளுவதில் உள்ள காப்பீடு மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இந்த வர்த்தகம் கைவிடப்பட்டது’ என்று தெரிவித்தன.

Related Stories: