எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் மெத்தனம்; அட்டர்னி ஜெனரலின் பதவியை பறித்த டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் பதவியேற்றது முதல், தனக்கு சாதகமாக செயல்படாத அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைவராக இருந்த கிறிஸ்டி நோம் என்பவரை டிரம்ப் பதவியில் இருந்து நீக்கினார். முன்னதாக, அட்டர்னி ஜெனரல் பதவிக்கு மேட் கேட்ஸ் என்பவரை டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் அவர் மீது பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் எழுந்ததால், அந்த முடிவில் இருந்து பின்வாங்கி பாம் பாண்டியை (59) டிரம்ப் நியமித்திருந்தார்.

இந்த நிலையில், உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் தொடர்புடைய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி, அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியை டிரம்ப் தற்போது பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்குவதில் பாம் பாண்டி போதிய வேகம் காட்டவில்லை என்பதால் அவர் மீது டிரம்ப் கடும் கோபத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாம் பாண்டி தனியார் துறையில் ஒரு முக்கியமான புதிய பணியில் சேர உள்ளார். அவருக்கு பதிலாக மிகவும் திறமையான டோட் பிளான்ச் தற்காலிக அட்டர்னி ஜெனரலாக செயல்படுவார்’ என்று தெரிவித்துள்ளார். டிரம்ப் தனக்கு விசுவாசமானவர்களை மட்டுமே முக்கிய பதவிகளில் அமர்த்தி, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: