பாரா வில் வித்தை: தங்க மங்கை பயல் நாக்

பாங்காக்: உலக பாரா வில்வித்தை காம்பவுண்ட் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று, கை, கால்களை இழந்த இந்திய வீராங்கனை பயல் நாக், அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் உலக பாரா வில் வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காம்பவுண்ட் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த, இரு கைகளையும் இழந்த, உலகின் நம்பர் 1 வீராங்கனை ஷீதல் தேவி, இரு கைகளையும், இரு கால்களையும் இழந்த இந்திய வீராங்கனை பயல் நாக் மோதினர். இப்போட்டியில் இரு வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட்டு அம்புகளை எய்தபோதும், பயல் நாக் 139-136 என்ற புள்ளிக் கணக்கில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவர், வாயை பயன்படுத்தி துல்லியமாக அம்புகளை எய்து அசத்தினார். கடந்த ஒரு ஆண்டில், ஷீதல் தேவியை இரண்டாவது முறையாக பயல் நாக் தோற்கடித்துள்ளார். காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீரர் ஷ்யாம் சுந்தர் சுவாமி பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட ஷ்யாம் சுந்தரும், சக இந்திய வீரரும், பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ராகேஷ் குமாரும், 143 புள்ளிகள் பெற்று 3ம் இடத்துக்கு மல்லுக்கு நின்றனர். அதையடுத்து நடந்த டைபிரேக்கர் போட்டியில் அசத்தலாக செயலாற்றிய சுவாமி சுந்தர் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ராகேஷ் குமாருக்கு 4ம் இடம் கிடைத்தது. மகளிர் தனிநபர் பிரிவு போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான 3ம் இட போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் தன்வார், கொரிய வீராங்கனை மோதினர். இப்போட்டியில் அஞ்சும் தன்வாருக்கு 4ம் இடமே கிடைத்தது.

Related Stories: