புதுடெல்லி: ஐபிஎல் 19வது தொடரின் 8வது போட்டி, டெல்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அக்சர் படேல் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் – ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ அணியுடன் நடந்த முதல் போட்டியில் டெல்லி, 142 ரன் இலக்குடன் களமிறங்கியது. அதன் துவக்க வீரர் கே.எல்.ராகுல் முதல் பந்தில் டக்அவுட் ஆக, பின் வந்த நிதிஷ் ராணா, பதும் நிஸங்கா குறுகிய இடைவெளியில் வெளியேறியதால் தடுமாற்றம் காணப்பட்டது.
இருப்பினும், இம்பேக்ட் மாற்று வீரராக வந்த சமீர் ரிஸ்வி அரை சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இருப்பினும், டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மோசமாக உள்ளது. மும்பை அணியின் திறன் வாய்ந்த ஜஸ்பிரித் பும்ரா போன்றோரை எதிர்கொள்ள, டெல்லி பேட்டர்கள் தயாராக இருக்க வேண்டும். அதேசமயம், டெல்லி அணியின் பந்து வீச்சு, லுங்கி நிகிடி, கைல் ஜேமிசன், நடராஜன் போன்ற வீரர்களால் சிறப்பாக அமைந்து வருகிறது.
மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா, குவின்டன் டிகாக், ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட அதிரடி பேட்டர்கள் இமாலய ஸ்கோரை எளிதில் அடிப்பவர்களாக திகழ்கின்றனர். அந்த அணியின் பந்து வீச்சும், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சஹர் உள்ளிட்ட வீரர்களால் சிறப்பாக உள்ளது.
