சார்லஸ்டன் மகளிர் டென்னிஸ் இவா வெற்றி உலா: காலிறுதியில் கால் பதித்து அசத்தல்

சார்லஸ்டன்: சார்லஸ்டன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிச் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில் சார்லஸ்டன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனைகள் இவா ஜோவிச் – சோபியா கெனின் மோதினர்.

துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய இவா, முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அதிரடி காட்டிய அவர், அந்த செட்டையும் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், ஹங்கேரி வீராங்கனை அன்னா பொன்டார் உடன் மோதினார்.

முதல் செட்டில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய மேடிசன் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் அன்னா ஈடு கொடுத்து ஆடியபோதும், கடைசியில் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டையும் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற மேடிசன் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். காலிறுதிப் போட்டிகளில் மேடிசன் கீஸ், சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் உடனும், இவா ஜோவிச், ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா உடனும் மோதவுள்ளனர்.

Related Stories: