பிறந்து 8 நாளே ஆன ஆண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை கைது சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு

சேத்தியாத்தோப்பு, பிப். 19: சேத்தியாத்தோப்பு அருகே பிறந்து 8 நாளே ஆன ஆண் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் கழுத்தை நெரித்துக்கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாக்கான்குடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ஏழுமலை (எ) ராஜ் (34), விவசாயி. இவரது மனைவி சிவரஞ்சனி (24). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிவரஞ்சனிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதையடுத்து சிவரஞ்சனி அளித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஏழுமலையை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் எனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளது. மேலும் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் என்று ஏழுமலை கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்துக்கொன்ற சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>